பிரான்ஸில் மனைவி, பிள்ளைகள், மருமக்களை வெட்டிக் கொன்ற யாழ் வாசி: அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின!

பாரிஸின் புறநகரான நுவாசி – லூ- செக்கில் (Noisy-le-Sec) தமிழ் குடும்பமொன்றில் நடந்த கொலை பிரான்ஸ் முழுவதும் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பத்து வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகள் கூட்டாகப் கொலையுண்ட சம்பவம் குறித்து நுவாசி- லூ- செக் நகரின் மேயர் ஒலிவியர் சறாபேரூஸ் அதிர்ச்சியும் கவலையும் வெளியிட்டிருக்கிறார்.

“அமைதியான பின்னணி கொண்ட ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தை தன்னால் நம்ப முடியாதுள்ளது” என்று மேயர் தனது ரூவீற்றரில் பதிவிட்டிருக்கிறார்.

பொபினி(Bobigny) நீதி நிர்வாகப்பிரிவுக்குட்பட்ட புலன் விசாரணையாளர்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துகின்றனர். கொலைகளுக்கான மூல காரணம் என்ன என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை.

புலம் பெயர்ந்து வசிக்கும் தமிழரான இளம் குடும்பஸ்தர் ஒருவரே இந்தப் படுகொலைகளைப் புரிந்துள்ளார். தனது மனைவி, கைக்குழந்தை, 4 வயது குழந்தை மற்றும் அவரது மூத்த சகோதரியின் இரு குழந்தைகள் (5,9வயது) ஆகிய ஐவரையுமே கத்தி மற்றும் சுத்தியல் என்பவற்றால் தாக்கிக் கொலை செய்துள்ளார்.

முதலில் தனது வீட்டுக்குள் வைத்து மனைவியையும் இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு அருகே மற்றொரு வீட்டில் வசிக்கும் தனது சகோதரி குடும்பத்தினரை அங்கு வரவழைத்து அவர்களையும் தாக்கியுள்ளார்.

தனது தங்கையையும் அவரது கணவரையும் அவசரமாக வைத்தியசாலை செல்ல வேண்டும் வாருங்கள் என தொலைபேசியில் அழைக்க, தங்கையும் தனது நான்கு பிள்ளைகளுடன் கணவரையும் கூட்டிக்கொண்டு அங்கு செல்ல அவர்கள் மீதும் கொடூரமாக தாக்கி இரு குழந்தைகளை கொலை செய்தும் தங்கையையும் கணவரையும் தாக்க, 13 ,15 வயதுகளையுடைய ஏனைய இரு வளர்ந்த பிள்ளைகள் ஒருவாறு தமது மாமனாரின் பிடியில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

அவ்வாறு காயத்துடன் தப்பியோடிய சிறுவர்களில் ஒருவனே அருகே அமைந்திருந்த மது அருந்தகம் ஒன்றுக்குள் சென்று தஞ்சமடைந்துள்ளான். தனது மாமனார் எல்லோரையும் தாக்கிக் கொல்கின்றார் என்ற தகவலை அச்சிறுவனே அங்கிருந்தோரிடம் முதலில் தெரியப்படுத்தி உள்ளான்.

அந்த மது அருந்தகத்தின் உரிமையாளரான மொஹமெட் ஹெமானி என்பவர் ஊடகம் ஒன்றிடம் கூறுகையில்,

“13 வயதான சிறுவன் பதற்றத்துடன் ஓடி வருகிறான், தலையில் இரத்தம் வழிகிறது. மாமா என்னை சுத்தியலால் தாக்குகின்றார் என்று அவன் கதறுகிறான். அவனுக்குப் பின்னால் யாரும் வரவில்லை. நான் அவனைப்பாதுகாத்துக் கொண்டு பொலீஸாருக்கும் அவசர சேவையினருக்கும் அழைப்பு விடுத்தேன்” என்றார்.

சம்பவங்களை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்த வேறு சிலரும் இவ்வாறு தமது அனுபவங்களை ஊடகங்களிடம் தெரிவித்திருக்கின்றனர்.

கொலைகளைப் புரிந்த இளம் குடும்பஸ்தர் மிகவும் அமைதியானவர் என்று அயலவர்கள் கூறுகின்றனர். இப்படிக் கோரமாகக் கொலைகளைப் புரிந்தாரா என்பதை அவர்கள் நம்ப மறுக்கின்றனர். அவர்களுக்குள் குடும்பப் பிணக்குகள் இருப்பதாகத் தாங்கள் அறியவில்லை என்கின்றனர். உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த அவர் கடந்த சில நாட்களாக தீவிர மன அழுத்தத்துக்கு ஆளானவர் போன்று காணப்பட்டார் என்ற ஒரு தகவலும் அயலவர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

கொலைகளைப் புரிந்த அவர் தன்னைத் தானே கொல்லும் நோக்குடன் உடலில் பல இடங்களில் வெட்டிக் காயப்படுத்தியிருக்கிறார். அவசர சேவையினர் அவரை மீட்டபோது அவர் சுய நினைவிழந்து கோமா நிலையில் கிடந்துள்ளார். தற்சமயம் பாரிஸின் புறநகரப் பகுதி மருத்துவமனை ஒன்றில் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here