உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவுவதாக கூறி ஆட்டையை போட்டாரா கனடாவிலுள்ள இலங்கை அழகி?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு உதவி செய்வதாக குறிப்பிட்டு திரட்டப்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டதாக எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டையடுத்து, அந்த நிதியை திருப்பி வழங்குவதாக இஷினி வீரசிங்க தெரிவித்துள்ளார்.

#IshiniGate என்ற ஹாஸ்டேக்கில் இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. கனடாவில் வசிக்கும் இலங்கை மொடல் அழகியான இஷினி, நிதி வழங்கப்பட்டது தொடர்பான தெளிவான ஆதாரத்தை வழங்கவில்லையென சமூக ஊடகங்களில் பலரும் கொந்தளித்ததையடுத்து, நிதியை திருப்பியளிப்பதாக இஷினி தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு வழங்கப்படுவதற்கான நிதியுதவி செய்யப் போவதாக குறிப்பிட்டு, இஷினி வீரசிங்க நிதி திரட்டும் திட்டத்தை அறிவித்திருந்தார். தனது சமூக ஊடகங்களில் நிதி திரட்டல் விபரங்களை பகிர்ந்து, gofundme.com மூலம் நிதி திரட்டினார்.

இதன்மூலம் 82,882 அமெரிக்க டொலர் ( 153,21,491.93 இலங்கை ரூபா) நிதி திரட்டப்பட்டது. உலகளவில் பல நாடுகளிலிருந்து நிதியளித்தனர்.

எனினும், திரட்டப்பட்ட நிதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட எந்த குடும்பத்தையும் சென்றடையவில்லையென சமூக ஊடகங்களில் சர்ச்சையானது.

சர்ச்சை முற்றியதையடுத்து, இஷினி வெளியிட்ட அறிக்கையில் ஃபோர்ஸ்கொயர் நற்செய்தி தேவாலயத்தின் சமூகப் பிரிவான ஆல்பா டிரஸ்ட்டிடம் அந்த பணத்தை செலுத்தியதாக குறிப்பிட்டார்.

இதையடுத்து, ஃபோர்ஸ்கொயர் நற்செய்தி தேவாலயம் பேஸ்புக்கில் வெளியிட்ட அறிக்கையில், இஷினி வீரசிங்க 20,000 கனடிய டொலரை (27,77,212.20 இலங்கை ரூபா) ஆல்பா அறக்கட்டளைக்கு ஜூன் 2019 இல் நன்கொடையாக வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இஷினியின் வேண்டுகோளுக்கு இணங்க, குண்டுவெடிப்பால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை அறிய ஆல்பா டிரஸ்ட் குழுவினர் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துடனும், பாதிக்கப்பட்ட ஏனையவர்களுடனும் தொடர்புகொள்வதற்கான பணியைத் தொடங்கினர்.

பாதிக்கப்பட்டவர்களுடனான நேர்காணல்கள் மற்றும் தகவல்களை பெற்ற பின்னர் ஆல்பா அறக்கட்டளை இஷினியிடம் தகவல் அனுப்பியது. பாதிக்கப்பட்டவர்களிற்கு உடனடி, குறுகிய கால மற்றும் நீண்டகால மருத்துவ பராமரிப்பு தேவைகளை அரசு நிறுவனங்கள், தேவாலயங்கள், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் கவனிக்கப்பட்டு வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

ஆல்பா டிரஸ்ட் நிறுவனத்தின் கொள்கையின்படி, நன்கொடையாளர் குறிப்பிட்ட நோக்கத்திற்கு மட்டுமே நிதியை வழங்க முடியும். எனினும், அந்த தேவைக்குரியவர்களை கண்டறிய முடியாததால் அந்த நிதியை இஷினிக்கே திருப்பியனுப்பியதாக குறிப்பிட்டது.

இஷினி வீரசிங்க நேற்று வெளியிட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்ட சிலருக்கு உதவ பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிதி உட்பட அனைத்து நிதியையும் gofundme.comக்கு திருப்பிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.

நிதி திரும்பப் பெறுவது தொடர்பாக gofundme.com ஒரு அறிக்கையை வெளியிடும் என்றும் அவர் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here