சரத் வீரசேகரவின் நிலைப்பாட்டை ஆதரித்த ஈ.பி.டி.பி: வேலணை பிரதேசசபையில் குழப்பம்!

13 வது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுல்ப்படுத்தக் கோரும் பிரேரணையை, ஈ.பி.டி.பி எதிர்த்ததால் வேலணை பிரதேசசபை கூட்டத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

13வது திருத்தத்தை நீக்க வேண்டும் என பெரமுனவின் ஆளுகையிலுள்ள தென்பகுதி பிரதேசசபைகள் சிலவற்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள சூழலில், 13வது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்த கோரும் பிரேரணையொன்றினை இன்று வேலணை பிரதேசசபையின் மாதாந்த கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் கருணாகரன் நாவலன் முன்வைத்தார் . கூட்டமைப்பின் சார்பான மற்றொரு பிரதேச சபை உறுப்பினர் திரு. சிறீபத்மராஜா அதனை முன்மொழிய ஐக்கிய தேசிய கட்சி சார்பிலான பிரதேச சபை உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் அதனை வழிமொழிந்தார்.

பிரேரணையை நிறைவேற்ற வாக்கெடுப்பிற்கு அனுமதிப்பதற்கு தவிசாளர் அனுமதித்த போதிலும் ஈபிடிபி சார்பிலான போனஸ் உறுப்பினரான சிவராசா கடுமையான எதிர்ப்பினை வெளிக்காட்டியதால் தவிசாளர் பின்வாங்கியுள்ளார் . இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர் .

ஏற்கனவே இரு ஈபிடிபி உறுப்பினர்கள் தனிப்பட்ட காரணமாக சபையிலிருந்து வெளியேறியிருந்தனர். சபைக்கூட்டத்தினை தொடர்ந்து நடாத்துவதாயின் ஏழு உறுப்பினர்கள் சபையிலிருக்க வேண்டும். ஆனாலும் ஐந்து உறுப்பினர்களே சபையில் அமர்ந்திருக்கின்ற நிலையில் பிரதேசபை கூட்டத்தினை தவிசாளர் தொடர்ந்து முன்னெடுத்தார் .

வேலணை பிரதேச உறுப்பினர் கருணாகரன் நாவலன் முன்வைத்த பிரேரணை பின்வருமாறு

தவிசாளர் / செயலாளர்
வேலணை பிரதேச சபை
23.09.2020

இல 42(1987) 13 வது திருத்தம் மற்றும் மாகாணசபை சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்தக் கோருவது தொடர்பாக

1987 யூலை 27 அன்று கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஊடாக மாகாணசபைகள் உருவாக்கப்பட்டு 1987 நவம்பர் 14 அன்று நாடாளுமன்றத்தில் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 1988 பெப்பரவரி 3 இல், ஒன்பது மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன.

அரசியலமைப்பின் படி மாகாணசபையானது குறிப்பிட்ட மாகாணத்தின் விவசாயம், கல்வி, சுகாதாரம், வீடமைப்புத்திட்டம், சாலைவழிப் போக்குவரத்து, சமூக சேவை, உள்ளூராட்சிகள் போன்றவற்றின் நிருவாகங்களைக் கவனிப்பதாகும். இவற்றை விட காவல்துறை (பொலிஸ்), காணி போன்றவற்றினைக் கையாளுகின்ற அதிகாரங்களும் உள்ளன. ஆனால் மத்திய அரசு இவற்றுக்கான அதிகாரங்களை மாகாண அரசுக்கு வழங்குவதற்கு தொடர்ச்சியாக மறுத்து வருகின்றமையானது பாரியதொரு அதிகார துஸ்பிரயோகமும், சனநாயக விழுமியங்களை ஏறி மிதிக்கின்ற செயற்பாடுமே ஆகும்.

காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதன் ஊடாகவே தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற குடியேற்றங்கள், மதம் சார்ந்த உருவச்சின்னங்களைத் திணித்து இனங்களிடையே முறுகலை ஏற்படுத்தல் போன்ற பலதரப்பட்ட ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும்.

நான் உறுப்பினராக அங்கம் வகிக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி) மாத்திரமல்ல, வேலணைப் பிரதேசசபையை ஆள்கின்ற ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினரும் ஏனைய தமிழ் கட்சியினரும் மேற்படி 13வது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொண்டவர்களே. அதிலும் குறிப்பாக ‘மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ என்பதே ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தாரக மந்திரமாகும். அதேபோன்று 2010களில் ஜனாதிபதியாகச் செயற்பட்ட கௌரவ மகிந்த ராஜபக்ச அவர்கள் 13 + எனும் தீர்வுத்திட்டத்தையும் அமுல்படுத்தப் போவதாகவும் கூறியிருந்தார். அதாவது மேற்படி 13வது திருத்தச்சட்டம் மூலம் மாகாணசபைகளுக்கு தற்பொழுது காணப்படுகின்ற அதிகாரங்களைவிடவும் கூடியளவு விசேட அதிகாரங்களை வழங்கும் திட்டமே 13 + ஆகும். ஆனால் இன்றுவரை 13வது திருத்தச்சட்டம் கூட ராஜபக்ச அரசுக்களால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் தற்போதைய மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சரான கௌரவ சரத் வீரசேகர அவர்கள் 13வது திருத்தச்சட்டத்தினையும் அதனோடு இணைந்த மாகாணசபைகள் முறைமையினையும் முழுமையாக ஒழித்துக்கட்டுவேன் என்று சூளுரைத்து அதற்கான செயற்பாடுகளில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். அதன் ஓர் பிரதிபலிப்பாக தென்னிலங்கையிலுள்ள ஒரு பிரதேச சபையில் மாகாண சபைகளை ஒழித்துக்கட்டக் கோருகின்ற தீர்மானமொன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஓர் ஆபத்தான நடவடிக்கையாகும்.
இந்த நாட்டில் சிறுபான்மையாக வாழ்கின்ற மக்களை ஓரளவேனும் பாதுகாக்கக் கூடிய அம்சமாக மாகாணசபை முறைமையே தற்சமயம் காணப்படுகிறது. இதனைக் கருத்திற்கொண்டு 13வது திருத்தச்சட்டத்தை பாதுகாக்கின்ற நடவடிக்கைகளை நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து மேற்கொள்ள வேண்டும். அதன் ஓர் அங்கமாகவே 13வது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்தக்கோரியும் மாகாணசபைகளை பாதுகாக்கக் கோரியும் பிரேரணை ஒன்றினை முன்வைக்கின்றேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here