போதைப்பொருள் வழக்கில் திருப்பம்: நடிகைகள் ரகுல் பிரீத்சிங், சாரா அலிகானுக்கு சம்மன் அனுப்பப்படும்

போதைப்பொருள் வழக்கில் நடிகைகள் ரகுல்பிரீத் சிங், சாரா அலிகானுக்கு சம்மன் அனுப்பப்படும் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறினார்.

பிரபல இந்தி இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவரது மரணத்தில் போதைப்பொருள் தொடர்புடைய வழக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரித்து வருகிறது. இதுவரை சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி உள்பட பலரை கைது செய்து உள்ளனர்.

இந்தி திரையுலகில் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக பலரின் பெயர்களை நடிகை ரியா வெளியிட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனால் திரையுலக நட்சத்திரங்கள் கலக்கத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்தநிலையில் ரியா கொடுத்த தகவலின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகைகள் ரகுல் பிரீத் சிங், சாரா அலிகான் மற்றும் பேஷன் டிசைனர் சிமன் கம்பாடா ஆகியோருக்கு இந்த வாரம் சம்மன் அனுப்பப்படும் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதில் ரகுல் பிரீத்சிங் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சாரா அலிகான் பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானின் மகள் ஆவார். இந்த நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி தெரிவித்து இருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடிகர் சுஷாந்த் சிங்கின் திறன் மேலாளர் ஜெயா ஷாவிடம் விசாரணை நடத்தினர். இதற்காக அவர் பகல் 2 மணியளவில் தென்மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.

இதேபோல சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் சுருதி மோடியிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்த உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here