யாழ் பல்கலைகழக சிங்கள மாணவர்கள் மீதான இணையவழி பகிடிவதை… தமிழ் மாணவர்களை பார்த்து திருந்துங்கள்: சிங்கள ஊடகங்கள் பாய்ச்சல்!

யாழ்ப்பாண பல்கலைகழக புதுமுக மாணவர்களிடம் நிர்வாண படங்களை கேட்டு, இணையவழியாக நடக்கும் பகிடிவதை விவகாரம் தெற்கில் விஸ்பரூபம் எடுத்துள்ளது.

யாழ் பல்கலைகழகத்திற்கு தெரிவாகும் சிங்கள மாணவர்களிடமே இந்த பகிடிவதை இடம்பெறுகிறது. மூத்த சிங்கள மாணவர்களே இந்த பகிடிவதையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கு தெரிவாகும் கிட்டத்தட்ட 170 மாணவர்களும் இந்தவகையான துனபுறுத்தலை எதிர்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 120 மாணவர்களிடம் நிர்வாண படங்களை கோரிய செய்தி வெளியானதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

வைபர், வட்ஸ்அப், பேஸ்புக் வழியாக நிர்வாண படங்களை அனுப்ப கோருவதுடன், நேரலையில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடவும் வற்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைகழகத்திற்குள் பகிடிவதை மற்றும் புதுமுக மாணர்களை கூட்டமாக கூட்டுவதில் சிக்கலிருப்பதால், புதுமுக சிங்கள மாணவர்கள் இம்மாதம் 11ஆம் திகதி யாழ்ப்பாணம் நாக விகாரைக்க அழைக்கப்பட்டு, அவர்கள் பல்கலைகழகத்திற்குள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், மூத்த மாணவர்களை எவ்வாறு அனுசரித்து செல்ல வேண்டும் என்பது குறித்து மூத்த மாணவர்களால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்போது, புதுமுக மாணவர்களிடம் கையடக்க தொலைபேசி இலக்கங்கள் பெறப்பட்டன.

12,13ஆம் திகதிகளிலேயே இணைய வழி பகிடிவதை நடைபெற்றுள்ளது. பல மாணவிகளிடம், அவர்களின் நிர்வாண படங்களை அனுப்பும்படி மூத்த மாணவர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், மூத்த மாணவர்களிற்கு தினமும் தொலைபேசி அழைப்பேற்படுத்தி பேச வேண்டுமென கட்டாயப்படுத்தி வருகின்றனர். தினமும் மணிக்கணக்காக தொலைபேசி உரையாடலை புதுமுக மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஆகும் கட்டணத்தால் புதுமுக மாணவர்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். மூத்த மாணவர்களின் கட்டணத்தையும் செலுத்த வேண்டியுள்ளது.

 

சில மாணவர்கள் நாளாந்தம் 600 ரூபா வரை தொலைபேசிக்காக செலவிடுதாக தெரிவித்துள்ளனர்.

பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் எதிர்காலத்தில் உடல்ரீதியான துன்புறுத்தலை எதிர்கொள்ள வேண்டியிருக்குமென்றும் எச்சரிக்கப்படுகிறார்கள்.

இந்த மோசமான பகிடிவதை சிங்கள மாணவர்கள் மத்தியிலேயே காணப்படுகிறது. தமிழ் மாணவர்களிற்கிடையில்- மூத்த மற்றும் இளையவர்களிற்கிடையில் நட்புறவான சூழல் நிலவுவதாக, சிங்கள புதுமுக மாணவர்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ் மாணவர்கள் சங்கங்கள் புதுமுக மாணவர்களுடன் நட்புறவாக இருப்பதுடன், சிங்கள மாணவர்களுடனும் நட்பாக செயற்படுகிறார்கள். காட்டுமிராண்டிகளாக செயற்படும் இந்த சிங்கள மாணவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வேண்டுமென சிங்கள ஊடகங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here