சினிமா பாணியில் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மாணவி: மரணப்படுக்கையில் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்ட உருக்கமான சம்பவம்!

பெற்றோரின் சம்மதமின்றி, காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மகள் சமையலரையில் தீ விபத்துக்குள்ளாகி மரணமான சோக சம்பவம் செங்கலடியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழப்பதற்கு முன்னர் பெற்றோரிடம் அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் போதே, தமது மகள் ஒரு தளவாயை சேர்ந்த மாணவனை காதலிப்பதை தெரிந்ததும் பாடசாலைக் கல்வியை பெற்றோர் இடைநிறுத்தியுள்ளனர். மாணவி சுமார் ஒரு வருடமாக பாடசாலை சென்றிருக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி மாணவியின் வீட்டுக்கு சென்ற காதலன், “என்னை விரும்பியது உண்மையென்றால், இப்பவே என்னோடு வா” என்று சினிமா பாணியில் அழைக்க, பெற்றோரின் கதறல்களுக்கு மத்தியில் அன்றே காதலனோடு வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.

பதிவுத்திருமணம் செய்து கொண்டு தளவாயில் வசித்து வந்த இவர்கள், கடந்த ஒரு மாதமாக செங்கலடி குமாரவேலியார் கிராமத்தில் வாடகைக்கு வீடொன்றைப் பெற்று வசித்து வந்திருக்கிறார்கள்.

இந்த யுவதியின் தந்தை சவூதி அரேபியாவில் தொழில் செய்து வருகிறார்.

கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை, சமையலறையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, தவறுதலாக இவர் மேல் மண்ணெண்ணெய் ஊற்றுப்பட்டுள்ளது. இதனால் ஆடைகளும் ஈரமாகியுள்ளது.

மனைவியை உடைமாற்றும்படி கணவன் கேட்டுக் கொண்டபோதும், மனைவி அதை பெரிதுபடுத்தவில்லை.

“ஈரம் காய்ந்து விட்டது. அவசரமாக சமைத்து முடிப்போம்“ என அடுப்பை பற்ற வைக்க தீப்பெட்டியை பற்ற வைக்கையில் திடீரென ஆடையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில், செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை (15) மரணமானார்.

தீக்காயங்ளுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது பெற்றோரைச் சந்திக்க வேண்டுமென்றும், அவர்களிடம் மன்னிப்புக்கேட்க வேண்டுமென்றும் யுவதி விரும்பினார்.

இதையடுத்து, வைத்தியசாலைக்குச் சென்ற தாயிடம் மன்னிப்புக் கேட்டதோடு, சவூதியிலிருக்கும் தந்தையிடம் வைபர் மூலம் தொடர்பு கொண்டு மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இறுதியில் தாயாரின் அருகிலேயே உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here