கமலை இயக்கும் லோகேஷ் கனகராஜ்: அனிருத் இசையமைக்கிறார்

‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள புதிய படத்தில் கமல் நாயகனாக நடிக்கவுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டாலும், கரோனா அச்சுறுத்தலால் இதன் வெளியீடு தடைப்பட்டுள்ளது. கரோனா நிலைமை சீராகி திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன்தான் ‘மாஸ்டர்’ வெளியாகும்.

‘மாஸ்டர்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பின்போதே, கமல் தயாரிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார் லோகேஷ் கனகராஜ். இதனைத் தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கமல் சூசகமாக உறுதி செய்தார்.

ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் 50-வது தயாரிப்பாக இது இருக்கும் எனவும், ரஜினி நாயகனாக நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்குவார் எனவும் திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணத்தால் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை.

இதனால் ரஜினி – கமல் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி கைவிடப்பட்டு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலே நாயகனாக நடிப்பது என உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

கமலின் தீவிரமான ரசிகர் லோகேஷ் கனகராஜ். ‘மாநகரம்’ படத்தில் சந்தீப் கிஷனின் கெட்டப் அப்படியே ‘சத்யா’ படத்தின் கமல் கெட்டப் போலவே வடிவமைத்திருப்பார். அதேபோல் ‘கைதி’ படத்திலும் ‘விருமாண்டி’ கமல் கெட்டப் போலவே கார்த்தியின் கெட்டப் இருக்கும். பல மேடைகளில் நான் கமல் சாருடைய படங்கள் பார்த்து சினிமாவைக் கற்றுக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அவரது நான்காவது படத்தில் கமலை இயக்க ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

2021-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here