யாழ் மாவட்ட சந்தைகளில் விவசாயிகளிடம் அறவிடப்படும் 10 வீத கழிவை உடனடியாக நிறுத்துங்கள்: விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உத்தரவு!

யாழ் மாவட்ட சந்தைகளில் விவசாயிகளிடம் அறவிடப்படும் 10 வீத கழிவினை உடனடியாக நிறுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, வடக்கு மாகாண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

யாழ் மாவட்ட விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று இன்றையதினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் இடம்பெற்றிருந்தது.

குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளால் அமைச்சரின் கவனத்திற்கு பல்வேறு பிரச்சினைகள் கொண்டுவரப்பட்டது.

அதற்கமைய வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சந்தைகளில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் விற்பனைக்கு கொண்டு சென்று விவசாய பொருட்களை விற்பனை செய்யும் போது, சந்தைகளில் 10 வீத கழிவு அறவிடும் நடைமுறை நிறுத்துமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

உடனடியாக அந்த கழிவு பணம்பெறும் நடவடிக்கையினை இடை நிறுத்துமாறு வடக்கு ஆளுநர் மற்றும் உள்ளுராட்சி ஆணையாளரை அமைச்சர் பணித்ததோடு அவ்வாறு நிறுத்த தவறினால் போலீசார் மூலம் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

அத்தோடு இலங்கை பூராகவும் உள்ள கமநல சேவை அமைப்புகளுக்கான களஞ்சியம் அடுத்த வருட பாதீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து கட்டி தரப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

வடக்கில் கமநல சேவைகள் திணைக்களத்திற்குரிய தலைமை காரியாலய கட்டிடத்திற்கு அடுத்த பட்ஜெட் மூலம் நிதி ஒதுக்கீடு செய்வதாகவும், எனினும் மிக விரைவில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியை வைத்து புதிய கட்டட வேலைத்திட்டத்தினை உடனடியாக ஆரம்பிக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டார்.

குறித்த கூட்டத்தின் போது விவசாய அமைப்பு பிரதிநிதிகளால் கட்டாக்காலி மாடுகள், கட்டாக்காலி நாய்கள் குரங்கு மற்றும் பன்றி களின் தொல்லை தொடர்பான பிரச்சனை அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கு கருத்து தெரிவித்த அமைச்சர் குறிப்பாக யானை பாதிப்பு தொடர்பில் பொதுவான பிரச்சினை காணப்படுகின்றது. எனினும் இந்த முறை எமது அரசாங்கம் அதற்கு தனியான ஒரு அமைச்சினை உருவாக்கி உள்ளது. அதே போல காட்டு விலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படுகின்றது. அதற்கு ஓரிரு மாதங்களில் உரிய தீர்வு பெற்றுத் தரப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்தோடு வடக்கில் நெல் களஞ்சியம் இல்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதற்கு உடனடியாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருடன் தொடர்பு கொண்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள உணவு களஞ்சியத்தை உடனடியாக நெல் களஞ்சியத்துக்காக பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு அமைச்சர் உடனடியாக அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து விவசாயிகள் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டபோது, அதிகமான பிரச்சனைகளுக்கும் அமைச்சரினால் உரிய தீர்வுகள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சாள்ஸ், இராஜாங்க அமைச்சர்களான சஷீந்திர ராஜபக்‌ஷ, டி.பி. ஹேரத் மற்றும் மொஹான் டி சில்வா, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணை தலைவர் அங்கஜன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here