சட்டவிரோத செயற்பாட்டில் ஈட்டிய சொத்தை பறிமுதல் செய்வது தொடர்பான கலந்துரையாடல்!

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளின் மூலம் ஈட்டிய பணம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டமா அதிபர் திணைக்களம், இலங்கை பொலிஸ் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று (14) கலந்துரையாடினர்.

சட்டவிரோதமாக ஈட்டிய பணம், வாகனம், காணி, வீடு, கட்டிடங்கள் போன்றவற்றை குறித்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர், வழக்கு விசாரணைகள் நிறைவுசெய்யப்பட்டு சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும் வரை, அவற்றை அனுபவிப்பதனையும், அதன் மூலம் பணம் ஈட்டுவதனையும், அப்பணம் மற்றும் சொத்துக்களை மேலும் சட்டவிரோத நோக்கங்களுக்காக பயன்படுத்துவதையும் தடுக்கும் வகையில் முன்னெடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

கைது செய்யப்படும் நபர்களினால் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை அரசுடமையாக்குவது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக, ஆரம்பத்திலேயே சொத்துக்களை அரசாங்கத்தினால் கையகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

பண மோசடி தடுப்பு சட்டம் மற்றும் 2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதி பரிவர்த்தனை அறிக்கை சட்டத்தின் விதிகள் தொடர்பாக குறித்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், குறித்த சட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளல் மற்றும் தற்போதுள்ள விதிகளுக்கு அமைய எவ்வாறு செயற்படுத்துவது என்பன தொடர்பாக அதிகாரிகளினால் கருத்து தெரிவிக்கப்பட்டது.

அதற்கமைய ஏற்கனவே உள்ள விதிகளுக்கு அமைய உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கும், தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் பரிசீலிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, நீதியமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே.மாயாதுன்ன, பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன, மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சனோகா மொஹொட்டி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரியா ஜயசுந்தர உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here