கொட்டகலை காணி அபகரிப்பு வழக்கு: அட்டன் நீதிமன்றத்தில் முன்னிலையான இராணுவ அதிகாரிகள்!

58வது படையணியின் மேஜர் ஜெனரல் பிரியங்கரா பெர்னாண்டோ உள்ளிட்ட பல இராணுவ உயிரதிகாரிகள் இன்று (15) ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்

கொழும்பு வணிக உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் குத்தகைக்கு விடப்பட்ட நிலம் மற்றும் கட்டிடங்களை குத்தகைக்கு பெற்ற பொதுமகன் ஒருவரின் அனுமதியின்றி- பலாத்காரமாக இராணுவம் அவற்றை கைப்பற்றியுள்ளதாக தொடர்ந்த வழக்கில் இவர்கள் முன்னிலையாகினர்.

ஹட்டன்- நுவரெலிய பிரதான வீதியில் உள்ள கொட்டகலை கொமர்சல் பகுதியில் உள்ள இந்த ஆதனங்களிற்குள் கடந்த ஜூலை முதல் இராணுவத்தின் 58வது படையணியினர் பலாத்காரமாக நுழைந்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முறைப்பாட்டாளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 66 ன் கீழ் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

58வது படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியங்கர பெர்னாண்டோ, பிரிகேட் கட்டளையதிகாரி, 58 படைப்பிரிவின் பல அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் உட்பட சிலர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டனர்.

இன்றைய வழக்கு விசாரணையில் இராணுவத்தின் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி ஜெயகித் மதுரத்ன மற்றும் இராணுவ சட்டத்தரணிகள் திறந்த நீதிமன்றத்தில் இராணுவத்திற்கு எதிராக இதுபோன்ற வழக்கை விசாரணைக்கு எடுக்க முடியாது என்று கூறினார்.

இரு தரப்பு சட்டத்தரணிகளின் சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர், ஹட்டன் மாவட்ட நீதிபதி ஜே. ட்ரோஸ்கி, பிரதிவாதிகள் தரப்பில்  பூர்வாங்க ஆட்சேபனை இருந்தால், அதை இந்த மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here