‘தேர்வில் பயமாக இருக்கிறது… நான் சோர்ந்து விட்டேன்… என்னை மன்னித்து விடுங்கள்’: மாணவி எழுதிய கடைசி கடிதம்!

மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா, தற்கொலை செய்வதற்கு முன்பு 7 பக்கத்தில் தமிழ் கலந்த ஆங்கிலத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மேலும் செல்போனில் பேசி ஆடியோவும் பதிவு செய்துள்ளார்.

நீட் தேர்வு அச்சத்தில் மாணவி மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா சில தினங்களின் முன்னர் தற்கொலை செய்திருந்தது, அந்த தேர்வு குறித்த வாதப்பிரதிவாதங்களை எழுப்பியுள்ள நிலையில், மாணவி எழுதிய இறுதி கடிதமும் வெளியாகியுள்ளது.

கடிதத்தின் தொடக்கத்தில் இந்த கடிதத்தை படிப்பவர்கள், அதனை எனது குடும்பத்தினரிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறியபடி கடிதத்தை தொடங்கி உள்ளார்.

அந்த கடிதத்தில் ஜோதி ஸ்ரீதுர்கா எழுதியிருப்பதாவது:-

இந்த கடிதத்தை படிக்கும் போது நான் இருக்க மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு தெரியும் நான் எடுத்த முடிவு சரியானது அல்ல. எனது முடிவுக்காக உங்களை நீங்களே குற்றம் சுமத்தி கொள்ளாதீர்கள். இது யாருடைய தவறும் அல்ல. இந்தனை வருஷம் என்னை நீங்க ரொம்ப நல்லா பார்த்துக்கீட்டிங்க. என்னை அதிகமாக நேசித்தீர்கள். என் மீது மிகவும் அதிகமாக அன்பு செலுத்தினீர்கள். எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்தீர்கள். என் மீது அதிகமாக எதிர்பார்ப்பு வைத்திருந்தீர்கள். நான் எதிர்காலத்தில் அதிக மக்களுக்கு உதவி செய்வேன் என்று என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தீர்கள்.

அம்மா, நீங்க என்னை ரொம்ப லவ் பண்ணீங்க. ரொம்ப பொக்கிஷம் மாதிரி பார்த்துக்கொண்டீர்கள். நான் என்ன முடிவு எடுத்தாலும் ஆதரவாக இருந்தீர்கள். நான் எவ்வளவு கோபப்பட்டாலும், என்றைக்குமே நீங்க என்னை திட்டியதே இல்லை. என்னை விட நான் உங்களைத்தான் அதிகமாக நேசித்தேன், அம்மா.

அம்மா இது உங்கள் தவறல்ல. உங்கள் மீது குற்றம் சுமத்தி கொள்ளாதீர்கள். நீங்கள் சோகமாக இருக்காதீர்கள். தம்பி ஸ்ரீதர் உங்களை நம்பிதான் இருக்கிறான். நீங்களே சோகமாக இருந்தால் அவனை யார் பார்த்துக்கொள்வது? அம்மா இதை மறந்து விடுங்கள். அதில் இருந்து கடந்து விடுங்கள்…, கடந்து விடுங்கள்… நீங்க செய்கிற சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் ஐஸ்கிரீம் ரொம்ப பிடிக்கும்.

அப்பா… எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். உங்களை அதிகம் நேசித்தேன். உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். எனக்காக நீங்கள் எதையும் செய்தீர்கள். அனைத்து சூழ்நிலைகளையும் கையாளுவதற்கு கற்றுத்தந்தீர்கள். எல்லோர் மீதும் அன்பு செலுத்த சொல்லித் தந்தீர்கள். நல்ல விஷயங்களை கற்றுத்தந்தீர்கள். என்னை முழுமையாக பாதுகாத்து வந்தீர்கள். நீங்கள் தான் எனது ஹீரோ. உங்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். என்னிடம் இருந்து அதிகமாக எதிர்பார்த்தீர்கள்.

அப்பா நான் நன்றாக படித்தேன். கடந்த மாதிரி தேர்வில் 590 மதிப்பெண் எடுத்தேன். இருந்தாலும் தேர்வு மீது எனக்கு பயமாக இருக்கிறது. இது உங்களுடைய தவறல்ல. எனது கடைசி ஆசை என்னவென்றால் எனது இந்த முடிவுக்காக உங்கள் மீது குற்றம் சுமத்திக்கொள்ளாதீர்கள். தம்பி ஸ்ரீதர் வாழ்க்கை உங்களை நம்பி தான் இருக்கிறது. அப்பா நீங்கள் சோகமாக இருக்காதீர்கள். எனது இந்த முடிவை கடந்து விடுங்கள். மறந்து விடுங்கள். இரவு அதிக நேரம் பயணம் செய்யாதீர்கள். அதுவும் தனியாக நீண்ட பயணம் செல்லாதீர்கள்.

தயவு செய்து அழாதீர்கள். இதை உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்று எனக்கு தெரியும். நீங்கள் தேர்வு செய்யும் ஆடை தான் எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களது உடல் நிலையை நன்றாக பார்த்துக்கொள்ளவும். இந்த உலகத்தின் சிறந்த தந்தை நீங்கள். இரவு அதிக நேரம் செல்போன் பார்க்காதீர்கள். அப்பா மறக்காம அடிக்கடி உடலை பரிசோதித்து கொள்ளவும். எப்போவும் போல சந்தோஷமாக இருக்கவும். அனைவரையும் சந்தோஷமாக வைத்திருக்க உங்களால் மட்டும்தான் முடியும். உங்களிடம் நான் நிறைய பேச வேண்டும். ஆனால் நேரம் இல்லை.

தம்பி ஸ்ரீதர்…, ஐ லவ் யூ ஸ்ரீதர். என்னை நீ அதிகம் மிஸ் செய்வாய் என்று தெரியும். நான் ஒரு கோழை. உன்னுடைய அன்புக்கும், மரியாதைக்கும் தகுதியவற்றவளாக ஆகி விட்டேன். அப்பா, அம்மாவை நன்றாக பார்த்துக்கொள். எனக்காக அழுகாதே, சோகமாக இருக்காதே.

நீயும் சோகமாக இருந்தால் அப்பா, அம்மாவை யார் பார்த்து கொள்வது? நீயும் பெரியவன் ஆகி விட்டாய். மேல்படிப்பு படிக்க போகிறாய். நன்றாக படிக்கவும். என்னை மறந்து விடவும்.

செல்போனில் விளையாட்டு விளையாடதே. அப்படி விளையாடினால் அதற்கு அடிமையாகி விடுவாய். அப்பா-அம்மா உன்னைத்தான் நம்பி இருக்கிறார்கள். உன்னையும், சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வைத்துக்கொள். அனைவரும் என் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். ஒருவேளை எனக்கு சீட்டு கிடைக்கலைனா உங்களுடைய அனைவரின் உழைப்பும் வீணாகி வலியை ஏற்படுத்தி விடும். எனவே என்னை மன்னித்துவிடுங்கள். நான் சோர்வடைந்து விட்டேன்.

இவ்வாறு அவர் கடிதத்தில் எழுதியுள்ளார்.

ஆடியோ பேச்சு விவரம்

செல்போனில் தான் பதிவு செய்த ஆடியோவில் ஜோதி ஸ்ரீதுர்கா பேசியிருப்பதாவது:-

அப்பா யாரையும் குறை கூறாதீர்கள். இது யாருடைய தப்பும் இல்லை. நான் பரீட்சைக்கு நன்றாகத்தான் படித்து உள்ளேன். ஆனாலும் எனக்கு பயமாக இருக்கிறது. ஒருவேளை நான் பெயில் ஆகி விடுவேனா என்று பயமாக இருக்கிறது. மேலும் எனக்கு சீட் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் எல்லோரும் ஏமாந்து விடுவீர்கள். அப்பா, அம்மா, தாத்தா எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். தயவுசெய்து சோகமாக இருக்காதீர்கள். ஸ்ரீதர் இருக்கான். ஸ்ரீதருடைய எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதால் நீங்கள் சோகமாக இருக்கக்கூடாது.

எல்லோரும் என்னை மிகவும் எதிர்பார்த்திருக்கிறீர்கள். ஆனால் எனக்கு தான் பயமாக உள்ளது. இதற்காக யாரையும் குற்றம் சொல்ல வேண்டாம். இது என்னுடைய முடிவு தான்.

சாரி. எனக்கு ரொம்ப சந்தோஷமான குடும்பம் கிடைத்தது. எனக்குத்தான் அதை பாதுகாக்க தெரியவில்லை. அம்மா உன்னை விட்டு நான் பிரிகிறேன். அம்மா என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி அழுது கொண்டே அந்த ஆடியோ பதிவை முடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here