போதைப்பொருள் வழக்கில் ராகிணி திவேதி எப்படி சிக்கினார்?: பரபரப்பு தகவல்கள்!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகை ராகிணி திவேதி சிக்கியது எப்படி என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக சின்னத்திரை நடிகை அனிகா உள்பட 3 பேரை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்திருந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கன்னட திரை உலகில் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நடிகர், நடிகைகளுக்கு போதைப்பொருட்கள் வினியோகித்தது, அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் கன்னட திரை உலகை சேர்ந்த நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததும், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.

மேலும் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியின் காதலர்களான ரவிசங்கர், ராகுல் ஆகிய 2 பேரும் முதலில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நடிகர், நடிகைகள் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சிகளுக்கு போதைப்பொருட்கள் வினியோகித்தது தெரியவந்தது. அத்துடன் ரவிசங்கர் கொடுத்த தகவலின் பேரில் கன்னட திரை உலகின் பிரபல நடிகையான ராகிணி திவேதியை நேற்று முன்தினம் மாலையில் போலீசார் கைது செய்தார்கள்.

ராகிணி திவேதியை காணொலி காட்சி மூலமாக கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், போதைப்பொருள் விவகாரம் குறித்து, அவரிடம் விசாரிக்க 3 நாட்கள் காவலில் எடுத்துள்ளனர். நேற்று முன்தினம் எலகங்காவில் உள்ள ராகிணி திவேதி வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், போதைப்பொருள் விவகாரம் தொடர்பான முக்கிய ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்திருந்தது. அந்த ஆதாரத்தின் பேரிலும், நண்பர் ரவி சங்கர் கொடுத்த தகவலின் பேரிலும் நடிகை ராகிணி திவேதி கைது செய்யப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில், போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ராகிணி திவேதி போலீசாரிடம் சிக்கியது எப்படி என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது நடிகை ராகிணி திவேதியின் நண்பரான ரவி சங்கர், ஜெயநகரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றினார். போதைப்பொருள் விவகாரத்தில் தற்போது அவர் கைதாகி இருப்பதால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரவி சங்கரின் உறவினர் மேல் சபை உறுப்பினராக இருந்து வருகிறார். இதன் காரணமாகவும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றியதாலும் முக்கிய பிரமுகர்களின் கார்களுக்கு பேன்சி எண் வாங்கி கொடுப்பதன் மூலமாக ரவி சங்கருக்கு கன்னட திரை உலகத்தை சேர்ந்தவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதுபோல தான் நடிகை ராகிணி திவேதியுடனும் ரவி சங்கருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் 2 பேரும் காதலர்களாக மாறியுள்ளனர். இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் ரவி சங்கருக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதுடன், கன்னட திரை உலகில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளில் அவர் போதைப்பொருட்களை வினியோகித்து வந்தாக தெரிகிறது. இவ்வாறு நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளில் ரவி சங்கர் மற்றும் நடிகை ராகிணி திவேதி உள்பட கன்னட திரை உலகத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த போது- கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி எலகங்காவில் உள்ள ரெசார்ட்டில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த விருந்து நிகழ்ச்சியில் நடிகை ராகிணி திவேதி, ரவி சங்கர், முக்கிய பிரமுகர்கள், தொழில்அதிபர்கள் உள்பட 25 பேர் மட்டுமே பங்கேற்க ரெசார்ட் நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. ஊரடங்கால் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக ரெசார்ட்டில் நள்ளிரவு 12 மணிக்கு பின்பு தான் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ. உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தினர்.

அதுபோல, நடிகை ராகிணி திவேதி, ரவி சங்கர் உள்ளிட்டோரும் போதைப்பொருட்கள் பயன்படுத்தியுள்ளனர். இதுபற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவி சங்கரிடம் நடத்திய விசாரணையிலும், அவரது செல்போனை ஆய்வு செய்த போது கிடைத்த ஆதாரத்தின் பேரிலும் நடிகை ராகிணி திவேதி கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி நடிகை ராகிணி திவேதியிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர். அதே நேரத்தில் நடிகை ராகிணி திவேதிக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு இருந்ததா?, வேறு எந்தெந்த விருந்து நிகழ்ச்சிகளில் அவர் போதைப் பொருளை பயன்படுத்தினார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பெங்களூருவில் போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ராகிணி திவேதியை நேற்று முன்தினம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது போலீஸ் காவல் நாளையுடன் (திங்கட்கிழமை) நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நேற்று ராகிணி திவேதியிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்திருந்தனர். ஆனால் நேற்று காலையில் தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும், முதுகுவலி இருப்பதாகவும் போலீசாரிடம் ராகிணி திவேதி கூறியுள்ளார். இதையடுத்து, அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை நடத்தி ஓய்வெடுக்கும்படி கூறினார்கள்.

இதன் காரணமாக நேற்று ராகிணி திவேதியிடம் போலீசார் விசாரணை நடத்தவில்லை. இதனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவரிடம் விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்துள்ளனர். இன்று ஒரு நாள் மட்டுமே விசாரணை நடத்த வாய்ப்புள்ளதால், நாளை அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே நேரத்தில் நாளை ராகிணி திவேதியின் ஜாமீன் மனு மீதான விசாரணையும் கோர்ட்டில் நடைபெற உள்ளது. போதைப்பொருள் வழக்கில் ராகிணி திவேதி 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதால், அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

பெங்களூருவில் போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ராகிணி திவேதியை போலீசார் கைது செய்து, 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர், மகளிர் பாதுகாப்பு மையத்தில் நேற்று முன்தினம் இரவு தங்க வைக்கப்பட்டார். அங்குள்ள அறையில் மேலும் 2 பெண்களுடன் நடிகை ராகிணி திவேதியும் தங்க வைக்கப்பட்டார். அவருக்கு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் எந்த விதமான சலுகைகளையும் போலீசார் வழங்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

மகளிர் பாதுகாப்பு மையத்தில் ராகிணி திவேதி தங்க வைக்கப்பட்டதால், அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு ராகிணி திவேதியை சந்தித்து பேச, அவரது பெற்றோர் மகளிர் பாதுகாப்பு மையத்திற்கு சென்றிருந்தனர். ஆனால் அவரை சந்தித்து பேசுவதற்கு பெற்றோருக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக ராகிணி திவேதியின் பெற்றோர் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here