பன்றிக்கெய்த குளம் மக்களின் பயம் தீர்கிறது: புதிய தொடருந்து கடவை அமைக்க இணக்கம்!

வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவையை மூடி அதற்கு அருகில் பாதுகாப்பான புதிய புகையிரதக்கடவை ஒன்றினை அமைப்பதற்கு இன்றைய கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைந்துள்ள புகையிரத கடவை சட்டவிரோதமானது என்றும், அப்பகுதியில் புகையிரத திணைக்களத்தால் கடவை எவையும்,
அமைக்கப்படவில்லை என்றும் புகையிரத திணைக்களம் தெரிவித்து வந்ததுடன், குறித்த புகையிரத கடவையூடான போக்குவரத்தையும் தடைசெய்திருந்தது. எனினும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளிற்கு அமைய பயணத்தடை விலத்திக் கொள்ளப்பட்ட நிலையில் இன்றையதினம் மீண்டும் குறித்த பாதையினை மூடுவதற்காக புகையிரத்திணைக்கள அலுவலர்கள் வருகைதந்திருந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், புகையிரத திணைக்கள அலுவலர்கள், ஓமந்தைபொலிசார், தெற்கு பிரதேசசபை தவிசாளர் து . நடராஜசிங்கம், பிரதேசசபை உறுப்பினர்களான கோ.அஞ்சலா, பூ.சந்திரபத்மன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்துகொண்டனர்.

அந்தவகையில் தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிலிருந்த புகையிரதக் கடவையை மூடி அதற்கு அருகில் பாதுகாப்பான புதிய புகையிரதக்கடவை ஒன்றினை அமைப்பதற்கு கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டது. புதிய பாதை அமைக்கும்வரை தற்போது பாவனையில் உள்ள பாதையை மக்கள் பாவனைக்காக விடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய கடவைக்கான வீதி அமைக்கும் பணிகள் நாளையதினமே ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் தற்போது உள்ள கடவையையே தமது பிரதான பாதை மார்க்கமாக பயன்படுத்திவருவதுடன், கடந்த இருவருடங்களிற்கு முன்னர் அக்கடவையில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் நான்குபேர் சாவடைந்திருந்தமை குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here