வைத்தியத்துறை மாபியாவிற்கு பணிந்த வடக்கு நிர்வாகம்: சிற்றூழியர்களிற்கு மட்டும் கட்டுப்பாடு: போராட்டங்கள் ஆரம்பம்!

வடமாகாண நிர்வாகத்தினால் அமுல்ப்படுத்தப்படும் முற்றிலும் அநீதியான- ஓரவஞ்சனையாக கட்டுப்பாட்டிற்கு எதிராக வடக்கிலுள்ள வைத்தியசாலைகளின் சிற்றூழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இன்று சில வைத்தியசாலைகளின் சிற்றூழியர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். எனினும், வரும் நாட்களில் இந்த போராட்டம் தீவிரமடைந்த, வடக்கு சுகாதாரத்துறை பெரும் நெருக்கடியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கைரேகை அடையாளமிடும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கைரேகை அடையாளமிடுதலிற்கு எதிராக ஏன் போராட வேண்டும்?, அது ஒரு நிர்வாக நடைமுறைதானே என மேலோட்டமாக தோன்றலாம். ஆனால், இதற்கு பின்னால் வைத்தியத்துறை மாபியா ஒளிந்துள்ளது. அந்த மாபியாத்தனத்துடனேயே சிற்றூழியர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஏன் போராட்டம்?

வடக்கு முழுவதிலுமுள்ள அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் சிற்றூழியர்கள் அனைவரும் கடமைக்கு வரும்போதும், போகும் போதும் கைரேகை அடையாளமிட வேண்டுமென அண்மையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார்.

மேலோட்டமான பார்வைக்கு இது நல்லதொரு நிர்வாக நடவடிக்கை, அரச பணியை நவீனமயப்படுத்துவதை போல தோன்றினாலும், அது மோசமான நடவடிக்கையொன்று. அதாவது வைத்தியத்துறை மாபியாவை வளர்க்க துணை போகும் செயல்.

ஏனெனில், இந்த சுற்றறிக்கையின்படி வைத்தியர்கள், தாதியர்கள், ஆய்வுகூட பரிசோதகர்கள் கையொப்பமிடத் தேவையில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் வைத்தியர்களையும் கையொப்பமிட வைக்கலாமா என வடக்கு மாகாண நிர்வாகம் முயன்று பார்த்தது. வைத்தியர்கள் அதற்கு கண்டிப்பாக மறுத்து விட்டனர்.

இதையடுத்து, வைத்தியர்கள் தவிர்ந்த மற்றைய அனைத்து தரப்பினரையும் கையொப்பமிட வைக்கலாமென வடக்கு நிர்வாகம் முயன்றது. இதற்கு தாதியர்கள் உடன்படவில்லை. வைத்தியர்கள் கையொப்பமிடாத பட்சத்தில் நாமும் கையொப்பமிட மாட்டோம், வைத்தியர்கள் கையொப்பமிட்டால் நாமும் கையொப்பமிடுவோம் என்றார்கள்.

வைத்தியர்களுடன், தாதியர்களிற்கும் விதிவிலக்களிக்க வடக்கு நிர்வாகம் முடிவெடுத்தது. இதன்போது, ஆய்வுகூட பரிசோதர்களும் போர்க்கொடி தூக்கினர். வைத்தியர், தாதியர் கையொப்பமிடாத பட்சத்தில் நாமும் கையொப்பமிட மாட்டோம் என்றார்கள். அவர்களிற்கும் வடக்கு நிர்வாகம் விதிவிலக்களித்தது.

எஞ்சியது சிற்றூழியர்கள். நிர்வாகத்தை நவீனப்படுத்தும் முயற்சியை சிற்றூழியர்களிடம் ஆரம்பித்துள்ளது வடக்கு நிர்வாகம்.

மேலதிக நேர கொடுப்பனவு

கைரேகை அடையாளமிடல் நடவடிக்கையை அமுல்ப்படுத்துவதற்கு ஒரு காரணம்- மேலதிக பண விரயத்தை கட்டுப்படுத்துவது என வடக்கு நிர்வாகம் சொல்கிறது. அதாவது சிற்றூழியர்கள் பலர், கடமை நேரத்தில் சமூகமளிக்காமல் மேலதிக நேரத்தில் கடமையாற்றி, மேலதிக நேர கொடுப்பனவை பெறுகிறார்கள் என்பது குற்றச்சாட்டு.

அதை மறுக்க முடியாது. அதில் உண்மையுள்ளது. ஒரு பகுதி சிற்றூழியர்கள் அப்படி நடக்கிறார்கள் என்பது உண்மை.

ஆனால், அதைவிட பேருண்மை- வைத்தியர்களில் ஒரு பகுதியினரும் அப்படி நடக்கிறார்கள் என்பது.

வடக்கு நிர்வாக தகவல்களின்படி, இப்படி சிற்றூழியர்களிற்கு செலவாகும் மேலதிக நேர கொடுப்பனவை விட, பல மடங்கு அதிக மேலதிக நேர கொடுப்பனவு வைத்தியர்களிற்காக செலவாகிறது.

பண விரயத்தை தடுக்க வேண்டுமெனில், முதலில் வைத்தியர்களிற்காக செலவாகும் மேலதிக நேர கொடுப்பனவை கட்டுப்படுத்த வேண்டும்.

மில்லியன் கணக்கில் வைத்தியர்களிற்கு செலவாகும் மேலதிக நேர கொடுப்பனவை கட்டுப்படுத்தாமல், இலட்சங்களில் செலவாகும் சிற்றூழியர்களின் கொடுப்பனவை கட்டுப்படுத்துவதன் மூலம், நிதி வீண் விரயத்தை கட்டுப்படுத்தலாமென வடக்கு நிர்வாகம் போடும் கணக்கு விசித்திரமானது.

வைத்திய மாபியா

வைத்தியத்துறை மாபியாத்தனம் பற்றி புதிதாக எதுவும் சொல்லத் தேவையில்லை. அதிலும் குறிப்பாக வடக்கில்- யாழ்ப்பாணத்தில் அது மோசமாக கட்டத்தை எட்டியுள்ளது.

அரச வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவிற்கு சென்றால் சத்திரசிகிச்சைக்கு சென்றால் தாமதமாகும், தனியார் வைத்தியசாலையில் வைத்தியரை சந்தித்தாலே விரைவான சத்திரசிகிச்சை சாத்தியமாகுமென்ற நிலை இன்றும் யாழ் போதனா வைத்தியசாலையை மையப்படுத்தி எழுந்துள்ள வைத்திய மாபியா கலாச்சாரத்தின் ஒரு அங்கம்.

இப்படி ஏராளம்.

அந்த வைத்திய மாபியாக்களுடன் மோத முடியாமல், சிற்றூழியர்களிற்கு மட்டும் வடக்கு நிர்வாகம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இது நிர்வாகத்தை வினைத்திறனாக்குமா? அல்லது வைத்தியத்துறை மாபியா தனத்தை வளர்க்குமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here