பிணையே இல்லாத ஆயுள்தண்டனை: நியூசிலாந்து கொலையாளிக்கு தண்டனை!

நியூஸிலாந்து கிறைஸ்ட்சேர்ச் மசூதிகளில் புகுந்து வெள்ளை நிறவெறி தீவிரவாதி தாறுமாறாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 51 முஸ்லிம்கள் பலியானார்கள். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரென்ட்டன் டேரண்ட் என்பவருக்கு பிணையே இல்லாத ஆயுள் தண்டனை விதித்து நியூஸிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவுஸ்திரேலியரான 29 வயது தீவிரவாதி பிரென்ட்டன் தன் மீது சுமத்தப்பட்ட 51 கொலை, 40 கொலை முயற்சிக் குற்றச்சாட்டு, பயங்கரவாதச் செயலுக்கான ஒரேயொரு குற்றச்சாட்டு ஆகியவற்றை ஒப்புக் கொண்டதையடுத்து 2 மசூதிகள் மீதான கொடூரத் தாக்குதல் வழக்கில் பிரென்ட்டனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, பிணை கிடையாது.

நீதிபதி கமரூன் மேண்டர், குற்றவாளி டேரண்ட்டின் குற்றங்கள் மிகவும் கொடூரமானது, ஆயுள் முழுதும் சிறை என்பது கூட அந்த கொலை பாதகங்களுக்கு பிராயச்சித்தமாகாது, மிகவும் கறைபடிந்த ஒரு பாவ கருத்தியலிலிருந்து இந்த கொலை பாதகம் நடந்துள்ளது என்று தெரிவித்தார்.

‘உன்னுடைய செயல் மனிதவிரோதமானது, தன் தந்தையின் முழங்காலைக் கட்டிக் கொண்ட 3வயது குழந்தையைக் கொலை செய்திருக்கிறாய்’ என்று நீதிபதி மேண்டர் காட்டமாக தெரிவித்தார்.

2019 மார்ச்சில் உலகையே உலுக்கிய அந்த பயங்கரவாதத் தாக்குதலில் அல் நூர் மற்றும் லின்வுட் மசூதிகளில் திடீரென துப்பாக்கியுடன் புகுந்த பிரென்ட்டன் ஈவு இரக்கமில்லாமல் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டை நடத்தினான். இதனை முகநூலில் நேரலையாக வேறு ஒளிபரப்பியதும் நியூஸிலாந்தில் மட்டுமல்ல உலகம் முழுதுமே அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.

தண்டனைக்கான 4 நாட்கள் விசாரணையில் தாக்குதலில் உயிர் பிழைத்த 90 பேரின் குடும்பத்தினரும் அன்றைய தினத்தின் பீதியிலிருந்து இன்னமும் மீள முடியாத நிலையில் நடந்ததை வேதனையுடனும், பீதியுடனும் நினைவுகூர்ந்தனர்.

நீதிமன்ற வளாகத்தில் குற்றவாளி பிரென்ட்டன் மீது மக்கள் வசைமாரி பொழிந்தனர், கோழை, அரக்கன் என்ற வார்த்தைகளினால் அவனை சாடினர்.

முன்னதாக குற்றவாளி டேரண்ட் தன் சட்டத்தரணிகளை நீக்கியதோடு விசாரணையில் தான் எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளதாகத் தெரிகிறது. அதேபோல் பிணை இல்லாத ஆயுள் தண்டனையையும் எதிர்க்கவில்லை.

தாக்குதலுக்கு முன்பாக மசூதியைப் ட்ரோன் மூலம் படம்பிடித்து மிகவும் திட்டமிட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 6 துப்பாக்கிகளுடன் மசூதிகளுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளான்.

நியூஸிலாந்தின் வரலாற்றிலேயே கறைபடிந்த ஒரு சம்பவமாகவும் நியூஸிலாந்தின் பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்தியதாகவும் இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகிறது.

விசாரணையின் போது குற்றவாளி டேரண்ட் மிகவும் ஒல்லியாகியிருந்தான். முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. தன்னைப் பற்றியே விசாரணையின் போது நகைச்சுவையாகப் பேசிய போதும் அதற்கும் சிரித்துக் கொண்டிருந்ததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here