நல்லூர்: சிவப்பு அங்கி தொண்டர்கள், படைக்கல அணிவகுப்பு; இரண்டாவது வருடமாக தொடரும் வழக்கம் என்ன தெரியுமா?

நல்லூர் ஆலய திருவிழாவில் சிவப்பு ஆடைகள் அணிந்த தொண்டர்களின் புகைப்படங்கள் அண்மை நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அந்த படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கருத்திட்டனர். நல்லூர் ஆலய தொண்டர்கள் ஏன் திடீரென பாவாடை கட்டினார்கள்?, இதற்கு பின்னாலும் இந்தியாவா என குண்டுகளை வெடிக்க வைத்துக் கொண்டிருந்தனர்.

கண்டி பெரஹரா பாணியை நல்லூரும் பின்பற்றுகிறதா என்றும் அடித்து விட்டிருந்தார்கள்.

நல்லூர் ஆலய தொண்டர்கள் ஏன் பாவடை அணிந்தார்கள் என நெட்டிசன்களிற்கு வந்த சந்தேகத்தை போக்குவதற்காக, ஆலய நிர்வாகத்தினருடனே பேசி, தகவல்களை பெற்றோம்.

இது முதல்முறையல்ல!

சிவப்பு அங்கிகள் அணிந்த படங்கள் சமூக வலைத்தளங்களி்ல் இம்முறையே பரவினாலும், இந்த வழக்கம் கடந்த வருட திருவிழாவிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த வருடத்தில் இதைவிட பிரமாண்ட ஏற்பாடுகளுடன் சிவப்பு சட்டைக்காரர்கள் கலக்கியிருக்கிறார்கள். ஆனால் என்ன, நெட்டிசன்களின் கண்ணில் அவர்கள் படவில்லை. அவ்வளவுதான்.

குதிரை வாகன திருவிழா

நல்லூர் ஆலய திருவிழாவில் இடம்பெறும் குதிரை வாகன திருவிழாவிலேயே சிவப்பு அங்கி அணிந்தவர்களின் அணிவகுப்பு இடம்பெறுகிறது.

ஒவ்வொரு வழக்கங்களும் ஒரு காலத்தில் புதியவைதான். அவை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட அதுவே, வழக்கமாகி விடுகிறது. மரபிலும், கலாச்சாரத்திலும் அவ்வப்போது புதியவை புகுத்தப்படுவது வழக்கம்.

அப்படித்தான், கடந்த வருடத்தில் இருந்து இந்த சிவப்பு அங்கி நடைமுறை புகுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சில நடைமுறைகளும் இணைக்கப்பட்டுள்ளன.

குதிரை வாகன திருவிழாவில் முருகப் பெருமானை ஒரு மன்னராக சித்தரித்து, அவர் படையோடு உலா வருவதை போல பாவனை செய்கிறார்கள். கடந்த வருடம் ஆரம்பித்த நடைமுறை அது.

முதலில் ஆலயத்திலிருந்து முருகப் பெருமான் வெளிவீதியுலாவிற்கு தயாராகும் போது, பிரதான அர்ச்சகர் கட்டியம் கூறுவார். “ராஜராஜ, ராஜமார்த்தாண்ட“ பாணியில், நல்லூர் அரசன் வருகிறார்.. பராக் பராக் என கட்டிம் கூறுவார்.

கட்டியம் கூறும் போது

பின்னர் பிரதம அர்ச்சகர் வாளேந்தி முன்னனே செல்ல, ஏனைய அர்ச்சகர்கள் வேல் ஏந்தியபடி பின்னால் செல்வார்கள். அதன் பின்னால் சிவப்பு அங்கி அணிந்தவர்கள் சூழ முருகன் வலம் வருவார். அதன்போது அரசரிற்குரிய பரிவாரங்களை போல பேரிகை உள்ளிட்ட வாத்தியங்களை தாங்கியபடி தொண்டர்கள் வருவார்கள்.

சிவப்பு அங்கி மன்னார் கால தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. பண்டைய அரச பணியாளர்களின் உடையை ஒத்ததாக அந்த ஆடை அமைக்கப்பட்டுள்ளது. அதை தவிர, வேறு காரணங்கள் அல்ல.

இம்முறை இரண்டாவது வருடமாக இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

படங்கள்- ஐ.சிவசாந்தன், சமூக ஊடகங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here