கூட்டமைப்பின் இளம் வேட்பாளர்கள் அறிமுகம் 2: நம்பிக்கையான இருவர்!

பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடக்கு கிழக்கில் களமிறங்கிய இளம் வேட்பாளர்கள் பற்றிய அறிமுகத்தின் இரண்டாம் பகுதியில் நம்பிக்கையான இரண்டு வேட்பாளர்கள் பற்றிய குறிப்புக்கள் இடம்பெறுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இளம் வேட்பாளர்களில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் பா.கஜதீபனும் ஒருவர்.

யுத்தம் முடிந்த பின்னர் தமிழ் தேசிய அரசியலுக்கு வந்த இளையவர்களில் ஒருவர். ஆசிரியர் தொழிலில் இருந்து அரசியலுக்கு வந்தவர். 2009 களின் பின்னர் தமிழ் தேசிய அரசியலுக்கு வந்த இளையவர்களில் பதவிகளை பெற்ற பலர், இன்று மிக மோசமான இடத்தை போய்ச் சேர்ந்திருக்கிறார்கள். வசதி, வாய்ப்பு, பதவி என்பவற்றிற்காக எந்த சமரசத்திற்கும் செல்லலாம் என, இளையவர்கள் பற்றிய எல்லா நம்பிக்கையையும் தகர்த்தவர்களே அனேகர்.

அப்போது அரசியலுக்கு வந்தவர்களில் தீவிர தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களாக இன்றும் அர்ப்பணிப்பாக தொடர்பவர்கள், குறிப்பிடும்படியான பதவிகள் இல்லாமல், தொண்டர்களாகவே செயற்பட்டு வருகிறார்கள்.

2009 இன் பின் அரசியலுக்கு வந்து, குறிப்பிடும்படியான அரசியல் பதவிகளை பெற்றிருந்தபோதும், விமர்சனங்கள் இல்லாமல் தப்பித்த மிகமிக இளம் அரசியல்வாதிகளில் கஜதீபனும் ஒருவர்.

கடந்த வடமாகாணசபையின் சீத்துவம் ஊரறிந்தது. மாகாணசபைக்குள் கட்சிகளிற்குள் மோதாமல், தமிழ் தேசிய கூட்டமைப்பே தமக்குள் குடுமிப்பிடி சண்டையிலீடுபட்டது. நம்பிக்கையுடன் அனுப்பப்பட்ட இளையவர்களே மாகாணசபையை சீரழித்ததில் முதன்மையானவர்கள். ஆனால், அந்த பட்டியலிலும் கஜதீபன் இருக்கவில்லை.

கடந்த மாகாணசபையில் தேறிய மிகச்சில அரசியல்வாதிகளில் கஜதீபன் முதன்மையானவர். எந்த அணிகளிற்குள்ளும் சிக்காமல் இருந்தார். கடந்த மாகாணசபையில் ஏற்பட்ட அணிகள், கொள்கைக்கானவை அல்ல. அவை கூட்டமைப்பு பிரமுகர்களிற்கிடையிலான மோதலின் விளைவு. அந்த பிரமுகர்களின் கூலிப்படைகளாகவே, தற்போதைய யாழ்ப்பாண வேட்பாளர்களில் ஒருவரான ஆனல்ட் உள்ளிட்டவர்கள் செயற்பட்டார்கள். இந்த சர்ச்சைகளிற்குள் கஜதீபன் சிக்கவில்லை.

தமிழ் தேசிய அரசியல் பற்றிய புரிதல் அவருக்குள்ளது என்ற நம்பிக்கையான புள்ளி அது.

தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் மாவட்டம் தழுவிய விதமாக-கிராமங்கள் தோறும்- பிரச்சார வலையமைப்பை கொண்டிருந்த ஒரேயொரு இளம் வேட்பாளர் அவர்தான். அணிகளிற்குள் சிக்காத பொறுப்பான அரசியல் பார்வையும், அணுகுமுறையுமே அதை சாத்தியமாக்கியது.

தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு களமிறக்கிய இளம் வேட்பாளர்களில் முதன்மை தகுதியுடைய, வெற்றியடைய தகுதியுடையவர் கஜதீபன்தான். மாவட்டத்தின் வெற்றியாளர் பட்டியலில் அவருமுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு கொள்கை வழியில் பயணிப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனில், கஜதீபன் போன்ற இளம் வேட்பாளர்கள் வெற்றியடைவது அவசியம்.

வன்னியில் செ.மயூரன்

வன்னி தேர்தல் தொகுதியில் ரெலோவின் சார்பில் களமிறங்கியுள்ளார் செ.மயூரன். கடந்த மாகாணசபையில் அங்கம் வகித்தவர். மாகாணசபையில் அங்கம் வகித்து சர்ச்சைகளில் சிக்காத இன்னொரு இளம் வேட்பாளர்.

வர்த்தக பின்னணியை கொண்டவர். வவுனியாவில் நம்பிக்கையுடன் களத்தில் உள்ள இளைஞர்.

வன்னித் தொகுதியில் வெற்றியாளர் பட்டியலில் அவருமுள்ளதால், சொந்தக்கட்சியினாலேயே பிரச்சாரத்தில் ஒதுக்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவமும் நடந்தது. செல்வம் அடைக்கலாதன், வினோ நோகராதலிங்கம், மயூரன் ஆகியோர் கூட்டாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். எனினும், ஒரு கட்டத்தில் மயூரனை வெட்டிவிட்டு, மற்றைய இருவருக்கும் பிரச்சார நடவடிக்கைகள் நடந்தன. வவுனியாவில் உள்ள மூத்த ரெலோ உறுப்பினர்கள், மயூரனை எதிர்த்தமையே இதற்கு காரணம்.

இது கட்சிக்குள் கொந்தளிப்பான நிலைமையை ஏற்படுத்தியது. பின்னர் செல்வம் அடைக்கலநாதன் தலையிட்டு, நிலைமையை சுமுகமாக்கினார்.

மாகாணசபை அரசியலிலும், அதன் பின்னரும் நேர்மையான, நம்பிக்கையான அரசியல் பயணத்தை மேற்கொண்டவர் மயூரன். வெற்றிபெற தகுதியான வேட்பாளரே!

கூட்டமைப்பின் இளம் வேட்பாளர்கள் அறிமுகம்-1: பணத்திற்காக விடப்பட்ட அறிக்கை… ஈ.பி.டி.பி வழங்கிய ஜே.பி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here