யாழில் பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்த உயர்கல்வி நிலையம்: நீதிமன்றத்தில் வழங்கிய வாக்குறுதி!

யாழ்பாணம் ஆரிய குளம் பகுதியில் உள்ள தனியார் உயர் கல்வி நிலையம் ஊடாக, இந்திய பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்ட மாணவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொடுக்க சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆவண செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆரிய குளம் பகுதியில் உள்ள தனியார் உயர் கல்வி நிலையம் ஊடாக இந்திய காமராஜர் பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு கால பகுதி வரையில் பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு பட்ட சான்றிதழ்களை வழங்காது தனியார் உயர் கல்வி நிலையம் இழுத்தடிப்பு செய்து வந்துள்ளது.

அதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தை நேரடியாக தொடர்பு கொண்ட போது , குறித்த தனியார் நிறுவனத்தால் மாணவர்களின் பணம் செலுத்தப்படவில்லை என பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் மாணவர்களால் குறித்த தனியார் நிறுவனத்திற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் , தனியார் நிறுவனம் பொலிஸ் விசாரணைக்கும் சரியான முறையில் ஒத்துழைக்காது செயற்பட்டுள்ளனர்.

அதனால் நீதிமன்றை நாடுவதற்கு சமூக நல வழக்காக தொடர்பு கொள்வது மாணவர்கள் தீர்மானித்து சில சட்டத்தரணிகள் பின்னடித்த போதிலும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு சமூக நல வழக்காக எடுத்து மாணவர்களிடம் கட்டணம் எதுவும் பெறாது வழக்கு தாக்கல் செய்தார்.

சன்றிதழ்கள் வழங்கப்படாது , 81 மாணவர்கள் பாதிக்கப்பட்ட போதிலும், யாழ்,நகரை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் 29 மாணவர்கள் சார்பில் வழக்கு தாக்கல் செய்யபட்டது.

குறித்த வழக்கு குருநகர் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ள ப்பட்ட போது, மாணவர்கள் சார்பில் சட்டத்தரணி வி. மணிவண்ணன் முன்னிலையானார். தனியார் உயர் கல்வி நிலைய நிர்வாகிகள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி குறுகிய காலத்திற்குள் மாணவர்களுக்கான பட்ட சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாக மன்றில் உறுதி வழங்கினார்.

குறித்த கல்வி நிலையத்தால் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பட்ட சான்றிதழ்களை கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக இழுத்தடிப்பு செய்து வந்தமையால், பலரும் தொழில் வாய்ப்புக்களை பெறவும், வேலைகளில் பதிவு உயர்வுகளை பெறவும் முடியாது இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here