நுவரெலியா மாவட்டத்திற்கு வாக்குக் கேட்டு வரும் பலருக்கு அங்கு வாக்களிக்கும் உரிமை இல்லை: திலகர் அதிரடி!

நுவரெலியா மாவட்டத்திற்கு வாக்குக் கேட்டு வந்திருக்கும் பலருக்கு அங்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. வாக்களிப்பு தினத்தன்று அவர்கள் நுவரெலியாவுக்கு வெளியே தமது சொந்த மாவட்டங்களுக்கு சென்று விடுவார்கள். அதற்கு பிறகு அடுத்த தேர்தலுக்கு வருவார்கள். நான் இந்த முறை நுவரெலியாவில் வாக்கு கேட்க வராவிட்டாலும் எனது சொந்த மாவட்டத்தில் வாக்கினைப் பதிவு செய்ய வருவேன். அதற்கு பிறகும் அங்கேயே நிலை கொள்வேன். ஏனெனில் எனது மாவட்ட மக்களின் மனங்களில் நான் வாழ்கிறேன் என முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்று இருப்பவருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் கூறிய விடயங்கள்

நுவரெலியாவில் முதல்தடவையிலேயே மூன்றாம் இடத்தில் தெரிவான உங்களை இந்த முறை நுவரெலியா பக்கம் காணவே இல்லையே?

ஆம். தேர்தல் காலத்தில் நுவரெலியா மாவட்டத்திற்கு பலர் சீசனல் வியாபாரத்துக்கு வந்திருக்கிறார்கள். நான் எப்போதும் அந்த மக்களோடு இருப்பவன்.கடந்த முறை முதன்முறையாக மக்களிடம் வாக்குக் கேட்டு சென்றபோதும் கூட நான் தேர்தல் சீசனுக்காக பயணித்தவன் அல்ல. 2000 ஆம் ஆண்டு முதல் 2004, 2006, 2009 , 2010, 2011 என ஐந்து தேர்தல்களில் என்னைத் தவிர்ந்த ஏனையவர்களுக்காக பாராளுமன்ற, மாகாண சபை, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் வாக்குக் கேட்டு வாங்கிக் கொடுத்தவன்.

2015 இல் நானே களம் இறங்கியபோது மாவட்டத்தில் ஏழு ஆசனங்களாக இருந்த எண்ணிக்கை எட்டாக உயர்ந்திருந்தது. புதிதாக கிடைக்கப்பெற்ற எட்டாவது ஆசனத்தை எனக்கு வழங்குமாறும் ஏற்கனவே இருந்தவர்கள் யாரையும் வெட்டிவிட்டு எனக்கு வாய்ப்பளிக்க வேண்டாம் மக்களிடம் வாக்கு கேட்டுச் சென்றேன். எனது இலக்கமும் எட்டாவதாக இருந்தமை வாய்ப்பாக இருந்தது. நானும் எட்டாவது இடத்தில் என்னைத் தெரிவு செய்தால் போதுமானது என்றே கோரினேன். ஆனால் மக்கள் என்னை மூன்றாம் இடத்தில் தெரிவு செய்து அனுப்பினார்கள். ஐந்தாண்டு காலம் கழித்து நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் முதலாம் இடம்பெற்றவன் என்ற பெருமையோடு திரும்பிவந்தேன். இம்முறை வாக்கு கேட்பதற்கு வராவிட்டாலும் வாக்களிக்க நிச்சயம் என வருவேன். அங்கே “அட்ரஸ்” இல்லாமல் இப்போது வாக்கு கேட்டு வந்தவர்கள் சென்ற பின்னரும் நான் வழமைபோல் அரசியல் களத்தில் நிற்பேன். மாவட்ட மக்களின் மனங்களில் நான் எப்போதும் வாழ்கிறேன்.

உங்களைத் தேசிய பட்டியலுக்கு தெரிவு செய்ய காரணம் என்ன?

அது ஒரு “டெக்டிக்” என எமது கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஊடகங்களில் தெரிவித்துள்ளார். நானாக இப்போது பல காரணங்களை கண்டு பிடித்து தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டால் எனது செயற்பரப்பு எவ்வாறு இருக்கும் என்பதை பரப்புரையாக மேற்கொண்டு நுவரெலியா, கண்டி, பதுளை, கொழும்பு மாவட்டங்களுக்கு வெளியே இரத்தினபுரி, மாத்தளை, காலி, மொனராகலை கம்பஹா போன்ற மாவட்டங்களில் எனது பரப்புரைகளை என்னுடைய பெயர் பிரேரிக்கப்பட்டு இருக்கும் “தொலைபேசி” சின்னத்துக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறேன்.

இந்த மாவட்டத் தெரிவுகளின் அடிப்படை, ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்திருக்கக் கூடிய மாவட்டங்களில் அங்கே போட்டியிடும் அவர்களால் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நான் கூறிய ஏனைய மாவட்டங்களில் எமது மலையகத் தமிழ் மக்கள் வாழ்ந்த போதும்அங்கே சாத்தியமான மாவட்டங்களில் எமது பிரதிநிதித்துவத்தை உருவாக்குவது, சாத்தியமில்லாத மாவட்டங்களில எதிர்காலத்தில் தேசிய பட்டியல் பிரதிநிதித்துவம் மூலம் பிரதிநிதித்துவத்தை. வழங்குவது என்பதை திட்டமாக முன்வைத்து எனது பரப்புரைகளை செய்து வருகிறேன்.

நீங்கள் நுவரெலியாவில் வாக்கு சேகரிக்க செல்லாமல் இருப்பது ஒரு சரிவை ஏற்படுத்தாதா ?

நிச்சயமாக இல்லை. ஏனெனில் 2015 இல் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பாக மூன்று பேர் போட்டியிட்டு மூவரும் வெற்றி பெற்று வந்தோம். இம்முறை நான்கு பேர் போட்டியிடுகிறார்கள். எனவே பிரசார பலம் அதிகம். தவிரவும் களத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிரசாரம் மேற்கொள்ளப்படும் மூவருமே அரசியல் அனுபவம் மிக்கவர்கள். மூவருமே மூன்றாவது தடவையாக பாராளுமன்ற தேர்தலில் போட்டி இடுகிறார்கள். அதில் இருவர் இரண்டு தடவை பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் இருந்தவர்கள். மூவருமே மத்திய மாகாண சபையில் இரண்டு தடவைகளுக்கு மேல் அங்கம் வகித்தவர்கள்.

இந்த பின்னணியில் அவர்களைவிட எனக்கு அரசியல் அனுபவம் குறைவு. நான் ஒரே ஒரு தடவை பாராளுமன்றில் இருந்தவன். தேசிய பட்டியலுக்கு பிரேரிக்கப்பட்டுள்ள மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் லோடன்ஸும் அங்கே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். எனவே நானும் அங்கே வந்து ஐந்தாவது ஆளாக பிரசாரம் செய்தாலும் எமது அணியில் இருந்து மாவட்டத்தில் தெரிவாகப் போவது மூவர்தான். எனவே எனக்கு மக்களிடத்தில் உள்ள அங்கீகாரத்தை புதிய உறுப்பினர் ஒருவரை பெற்றுக் கொள்வதற்காக பங்களிப்பு செய்கிறேன். எனவேதான் இரத்தினபுரி களத்தில் இருக்கிறேன்.

சந்திரகுமாரின் வெற்றி உறுதி செய்யப்பட்டால் எமது கூட்டணிக்கு இன்றுமொரு உறுப்பினர் மாத்திரமல்ல இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களின் வரலாற்று மாற்றமாக அது அமையும். அதே நேரம் தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் மகனான எனது பங்களிப்போடு இறப்பர் தோட்டத் தொழிலாளியின் மகனான தம்பி சந்திரகுமாரை பாராளுமன்றத்தில் பார்க்கும் ஒரு மகிழ்ச்சியும் திருப்தியும் நிச்சயம் எனக்கும் கிடைக்கும்.

கடந்த முறை தேசிய பட்டியல் ஆசனம் ஒன்று உங்கள் கூட்டணிக்கு வழங்கப்படாத நிலையில் இம்முறை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறதா ?

கடந்த முறை மட்டுமல்ல அதற்கு முதல் 2010 லும் எமக்கு தேசிய பட்டியலைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அப்போது பெயரிடப்பட்டிருந்ததும் எனது பெயரே. 2015 இல் ஒருவரது பெயர் பிரேரிக்கப்பட்டபோதும் அதனை அடியொற்றிய ஒரு பிரசாரம் முன்னெடுக்கப்படவில்லை. அதனை இரத்தினபுரிக்குப் பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும் என்ற கருத்து இந்த தேர்தல் களத்தில் பேசப்பட்டது. ஆனால், கடந்த தேர்தல் காலத்தில் அந்த நிபந்தனை முன்வைக்கப்பட்டதா என்பதை நான்றியேன். மாறாக தேசிய பட்டியல் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை பதுளையிலும் போட்டியிடும் ஆசனம் வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரவிந்தகுமாருக்கான வேட்பாளர் தெரிவைப் பெற்றோம். அவர் வெற்றி பெற்று விட்டதால் தேசிய பட்டியல் தொடர்பில் போதுமான அழுத்தம் கொடுக்கவில்லை என்பது உண்மைதான்.

ஆனால், இந்த முறை என் பெயர் உட்பட இன்னும் இருவரது பெயர்கள் தேசிய பட்டியலுக்கு பிரேரிக்கப்பட்டு இருக்கிறது. அதனை எனது பிரசாரங்கள் மூலமாக அழுத்தமாக முன்வைத்து வருகிறேன். எனவே 2010, 2015 இல் போல் தேசிய பட்டியல் விடயத்தில் எமது அணி வாளாவிருக்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தி வழங்காமல் இருக்கவும் முடியாது. இந்த முறையும் பெற்றுக் கொள்ளாவிட்டால் அது தமிழ் முற்போக்கு கூட்டணியின் பெரும் பலவீனமாகிவிடும். மற்றபடி எனக்கு தேசிய பட்டியல் கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் வாக்கு சேகரிப்பில் ஈடுபடவில்லை. கிடைக்கப்பெற்றால் எனது செயற்பரப்பு எப்படியாக இருக்கும் என்ற அடையாளப்படுத்தலையே செய்கிறேன்.

களத்தில் போட்டி இட்டு இருந்தால் மக்கள் கைகளிலும் தேசிய பட்டியல் மூலம் பிரேரிக்கப்பட்டால் தலைவர்களிடத்திலும் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். நான் எப்போதும் மக்கள் மீது நம்பிக்கை கொண்டவன். தேசிய பட்டியலுக்கு என்னை பிரேரித்த கூட்டணி தலைவர்கள் அவர்களது நம்பிக்கையை நிறைவேற்றுவார்கள் என நம்புவோம்.

தலைநகரில் தலைவர் மனோ கணேசனின வெற்றி வாய்ப்பு குறித்து?

இதில் என்ன சந்தேகம். தலைவர் மனோவில் எனக்கு பிடித்ததே அவரது மனோதைரியம்தான். தலைநகர் தமிழர் தலைமைத்துவம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் உதாரணமாக திகழ்ந்திருக்கிறார். இனி அந்த இடத்திற்கு யார் வந்தாலும் வரலாற்றில் முதல் இடத்தில் இருக்கப்போவது மனோ கணேசன்தான். எனவே அவருக்கான இடம் எப்போதும் நிரந்தரமானது.

இவ்வாறான உங்கள் எதிர்வினைகள் உங்களது அணிக்குள்ளே புரிந்துணர்வை குழப்பாதா?

இல்லை. இதற்கு பெயர்தான் ஜனநாயகம். ஓர் அணியில் இணைந்து அரசியல் பயணம் செய்யும் போது அங்கே நடக்கும் சரி பிழைகளைச் சீர்தூக்கிப் பார்த்து அதற்கு பதிற்குறி வழங்குவதற்கு தைரியம் இல்லாத யாரும் அரசியல் களத்துக்கு வரக்கூடாது. உள்கட்சியாக, கூட்டணியாக இருந்தாலும் சரி எதிரணியாக இருந்தாலும் சரி அரசாங்கமாக இருந்தாலும் சரி அங்கே தவறு இடம்பெற்றால் அதனை சுட்டிக்காட்டும் தைரியம் எனக்கு எப்போதும் இருக்கிறது. நீங்கள் தேசிய பட்டியலை ஏற்றுக் கொள்ளாமல் தனித்து அல்லது மாற்றணியில் போட்டியிட்டு இருக்க வேண்டும் என சிலர் எனக்கு ஆலோசனை வழங்கினார்கள். இருபது வருடகாலமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பில் இருந்து ஓடி இரண்டு மாத தேர்தல் காலத்துக்காக தனித்தோ அல்லது மாற்று அணியையோ ஆதரிக்கும் அரசியல் சிறுபிள்ளையல்ல நான். தமிழ் முற்போக்கு கூட்டணி உயர்பீடத்திர் என்னோடு அமர்ந்திருந்த சிலர் இந்த தேர்தலில் அவ்வாறு நடந்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும். என்னை அந்தப் பட்டியலில் பார்ப்பது தவறு. தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் சுற்றிப்பார்க்க வந்த சுற்றுலா பயணியல்ல நான். இத்தகைய
கூட்டணியை மலையகம் சார்ந்து உருவாக்க 2000ஆம் ஆண்டில் இருந்தே முயற்சி மேற்கொண்டவன் என்பதை கூட்டணி தலைவர் மனோ கணேசன் அறிவார். எனது வெளிப்படைத் தன்மை எனக்கான நியாயம் என்வசம் இருக்கிறது. எனக்கு தேசிய பட்டியல் மூலம் வாய்ப்பு நிச்சயம் வழங்கப்படும் என்பதை கூட்டணி தலைவர்கள் மூவரும் பகிரங்கமாக அறிவித்து வருகிறார்கள். அதனை அவ்வாறு நினைவேற்றுவது அவர்களது பொறுப்பு. அவர்கள் அதனை நினைவேற்றாதுவிட்டால் அதற்கான நியாத்தையும் அவர்களே முன்வைக்க வேண்டும். நான் மக்களால் நிராகரிக்கப்பட்டவன் அல்ல. மனதார அங்கீகரிக்கப்பட்டவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here