தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் மாற்று அணி நாமே; ஏனையவர்கள் ஒரே குட்டையில் ஊறிய கிளைகளே:டக்ளஸ் தேவானந்தா!

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் மாற்று அணி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியாகவே இருக்கும் என செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரும் நோக்கில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை இன்றையதினம் வன்னி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வன்னிவிளான் குளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலம் தெரிவிக்கையில் –

எமது கட்சியானது வடக்கு கிழக்கு மாகாணம் உட்பட 7 மாவட்டங்களில் இம்முறை போட்டியிடுகின்ற நிலையில் மக்கள் எமது கட்சியின் பின்னால் அணிதிரண்டு வரும் நிலையில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை வழங்குவதற்கு தயாராக இருக்கிறேன்

மக்கள் கோரியதன் அடிப்படையில் இம்முறை வீணைச் சின்னத்தில் எமது கட்சி களமிறங்கிய நிலையில் மக்கள் தமது வாக்குப் பலத்தினால் எமது கட்சியை பேரம் பேசும் சக்தியாக மாறுவதற்கு சிறந்த அடித்தளத்தை வழங்க வேண்டும்

தன்னையும் காத்து தன்னை நம்பியுள்ள மக்களையும் பாதுகாப்பதே சிறந்த தலைமைத்துவத்தின் வெளிப்பாடாகும். அவ்வாறல்லாமல் கிடைக்கும் சந்தர்ப்பங்களை தமது நலனுக்காக பயன்படுத்திவிட்டு மக்களை ஏமாற்றும் தலைமைத்துவத்தை இதுவரை நாம் மேற்கொள்ளவில்லை

சந்திரிக்கா அரசாங்கத்தில் வலி வடக்கை சுவீகரிக்க முற்பட்டபோது 9 நாடாளுமன்ற உறுப்பினர்களை கைவசம் வைத்திருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சி நாடாளுமன்றத்தை பகிஸ்கரிப்போம் எனக்கூறி வலிவடக்கு சுவீகரிப்பை தடுத்தது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்த போது தமிழ் மக்களின் அழிவைக்கூட இவர்களால் காப்பாற்ற முடியவில்லை. நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை தமது சொந்த அரசியல் நலனுக்காக பயன்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை இதனை மக்கள் தற்போது உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்

நாம் செல்லும் இடமெல்லாம் மக்கள் பல ஏமாற்றத்துடன் தமது குறைகளை யாரிடம் சொல்வது என்று அறியாது பரிதவித்த நிலைகளை கண்ணாலே கண்டு வருகிறோம். அண்மையில் யாழ் வர்த்தக சமூகத்தை சந்தித்த போது தங்கள் பிரச்சனைக்கு தீர்க்கமான முடிவை எடுக்கக்கூடிய அரசியல் தலைமை தோழர் டக்ளஸ் தேவானந்தாவிற்கே காணப்படுவதாக தெரிவித்தனர்

இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் எம்மோடு அணி திரள்வதை தடுக்க முடியாத ஊடகங்களும் ஒரு சில அரசியல் வாதிகளும் எமது கட்சி மீது சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்

எமது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பொன்னையன் என்பவரை ஒரு பத்திரிகையின் முதலாளி பணத்தை கொடுத்து எமது கட்சி மீது அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார்

பொன்னையனுக்கு தெரியும் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி மீது எவ்வளவுதான் குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும் டக்ளஸ் தேவானந்தா அதனை பொருட்படுத்தமாட்டார் என்பது அறிந்ததால் அவர் இவ்வளவு துணிவாக பேசி வருகிறார்

இதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளரான திருமதி விஜயகலா மகேஸ்வரன் கடந்த காலத்தில் என்மீது சேறு பூசுவதற்காக பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி வந்தார்

இவ்வாரம் நெடுந்தீவு பிரதேசத்தில் அவர் அன்று தெரிவித்த கிணற்றினுள் ஆயுதங்கள் மனித எச்சங்கள் இருப்பதாக தெரிவித்த நிலையில் பொலிசார் நீதிமன்ற உதவியுடன் அதனை அகழ்வாராய்ச்சி செய்தனர் இறுதியில் எந்தவிதமான தடயங்களும் மீட்கப்படவில்லை ஆகவே எம் மீது எவ்வளவு தான் பழிகளை போட்டாலும் காலம் எமது நியாயத்தையே பறைசாற்றி நிற்கிறது.

எனினும் ஊடகவியலாளர்கள் இவ்வாறு அவதூறுகளை சுமத்துவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறு கெட்டுவருகின்றதன் அடிப்படையில் குறித்த அவதூறு தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்கள் தமது எதிர்கால பயணத்தினை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு மாற்றத்திற்கான ஓர் அணியாக எம்முடன் சேர்ந்து பயணிப்பதற்கு இம்முறை தயாராக இருக்கிறார்கள் என்றும் மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here