அதிகரித்து வரும் டெங்கினைக் கட்டுப்படுத்த வேலைத்திட்டம்

நாடளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள டெங்கு நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கோறளைப்பற்று ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் அதிகரித்து வரும் டெங்கினைக் கட்டுப்படுத்தி மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஓட்டமாவடி பிரதேச சபை பல்வேறு முனைப்புக்களை மேற்கொண்டுள்ளது.

இதன் தொடரில் இப்பிரதேசத்தில் டெங்கினைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை ஆராயும் பொருட்டு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் யூ.எல்.அஹமட் தலைமையில் விஷேட கலந்துரையாடல் சபையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது டெங்கு பரவலுக்கான காரணிகள், அதனைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன், முறையற்ற, பராமரிப்பற்ற வடிகான்களாலும் வீட்டுக் கழிவுகளை அகற்ற பிரதான வடிகான்களுடன் குழாய்கள் பொருத்தப்பட்டு கழிவு நீர் பிரதான வடிகான்களில் இடப்படுவதனாலும் கழிவு நீர் தேங்கி நின்று நுளம்புகள் அதிகரித்து, டெங்கு நோய் பரவக் காரணமாவதாகவும் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் சுட்டிக் காட்டிடப்பட்டது.

அத்துடன், சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் உணவுகள், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத உணவுச் சாலைகள் தொடர்பில் கூடுதல் கவனஞ்செலுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

தவிசாளர் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் சபையின் செயலாளர் எஸ்.எம்.சஹாப்தீன், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஷாபிறா வஸீம், சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.எச்.எம்.பழீல், சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here