நுவரெலியாவிற்கு வரவிருந்த 5 தேசிய பாடசாலைகள் தடுக்கப்பட்டன: திகாம்பரம் அதிர்ச்சி தகவல்!

நுவரெலியா மாவட்டத்துக்கு ஐந்து தேசிய பாடசாலைகள் அமைப்பதற்கு 2014 இல் அனுமதி கிடைத்திருந்தது. எனினும், இங்குள்ள அமைச்சர் ஒருவரும், விஜேசிங் போன்ற கல்விகற்ற துரோகிகளுமே இதனை தடுத்துநிறுத்தி சமூகத்துக்கு அநீதியிழைத்தனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் நேற்று (25) மாலை இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த நான்கரை வருடங்களாக மக்களுக்கு உணர்வுப்பூர்வமாக சேவையாற்றிவிட்டு, அவற்றை பட்டியலிட்டுக்காட்டியே நாம் வாக்கு கேட்கின்றோம். ஆனால், திகாம்பரம் முன்னெடுத்த திட்டங்கள் சரியில்லை. மோசடி இடம்பெற்றுள்ளது என குறைகூறிதான் சிலர் வாக்கு சேகரித்து வருகின்றனர். நான்கரை வருடங்கள் நான் ஏமாற்றினேனா, சேவையாற்றினேனா என்பது மக்களுக்கு தெரியும். எனவே, வேலைசெய்யாமல் மக்களை இதுவரை காலமும் ஏமாற்றி வந்தவர்களை மக்கள் நிராகரிக்கவேண்டும்.

இம்முறை கொழும்பில் மனோவும், கண்டியில் வேலுகுமாரும், பதுளையில் அரவிந்தகுமாரும் வெற்றிபெறுவது உறுதி. நுவரெலியா மாவட்டத்தில் நாங்கள் மூவரும் வெற்றிபெறுவோம். திலகரையும் இணைத்துக்கொண்டு மொத்தம் 7 பேர் பாராளுமன்றம் செல்வது உறுதி. எனவே, பொதுத்தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவு இல்லாமல் ஆட்சியமைக்க முடியாது.

நான் உங்களில் ஒருவன், தொழிலாளியின் பிள்ளை. அரசியல்வாதி அல்லது முதலாளியின் மகனாக இருந்து அமைச்சராகியிருந்தால் என்னாலும் உணர்வுபூர்வமாக வேலை செய்ய முடியாமல் போயிருக்கும். மக்களோடு மக்களாக வாழ்ந்து, கஷ்டங்களை அனுபவித்ததால்தான் என்னால் மக்களுக்கான சேவையை உரிய முறையில் வழங்கமுடிகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பாடசாலை இல்லை என்று முத்தையா முரளிதரனின் சகோதரர் பிரபு கூறுகின்றார். நுவரெலியா மாவட்டத்துக்கு 5 தேசிய பாடசாலைகளை அமைப்பதற்கு 2014 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் அனுமதி பெற்றிருந்தேன். அப்போது பந்துல குணவர்தனவே கல்வி அமைச்சராக இருந்தார்.

இதனை கேள்வியுற்றதும் இங்குள்ள அமைச்சர் அவசரமாக அதிபர்களை அழைத்து குறிப்பாக ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் அதிபர் விஜேசிங்க போன்றோர், இங்கு தேசியப்பாடசாலை தேவையில்லை, மாகாண அதிகாரம் இருந்தால்போதும் என கடிதம்மூலம் அறிவித்தனர். அதன்பின்னர் அமைச்சரும், அதிபர்களும் தேசியப்பாடசாலை தேவையில்லை என கூறுகின்றனர், வழங்கமுடியாது என பந்துல குணவர்தன குறிப்பிட்டார். இப்படியான துரோகிகளே தேசியப்பாடசாலையை தடுத்துநிறுத்தினர்.” என்றார்.

க.கிஷாந்தன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here