2015 தேர்தலை போல இம்முறையும் யாழில் தேர்தல் முடிவில் மாற்ற திட்டமா?; மொஹமட்டின் நியமனத்தின் பின்னணி என்ன?: விக்னேஸ்வரன் அதிர்ச்சி கேள்வி!

201ஆம் ஆண்டு தேர்தலில் யாழ் தேர்தல் மாட்டத்தில் நடந்த “தில்லாலங்கடி“ வேலை மீண்டும் இடம்பெற போகிறதா என வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

2015 தேர்தலில் சில “பிழையான“ சம்பவங்களிற்கு துணை போனதாக கூறப்படும் மொஹமட் என்ற அதிகாரி, ஓய்வுபெற்ற பின்னரும் மீளவும் அழைக்கப்பட்டு, யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியது இதற்காகவா என்ற அதிர்ச்சிக் கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2015 ஆம் ஆண்டுயாழ் தேர்தல் மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் தொடர்பில் சில பிரச்சனைகள் உள்ளதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான தேர்தல் முடிவுகள் முழுநாளும் தாமதிக்கப்பட்டு, மறுநாள் பிற்பகலே வெளியிடப்பட்டது.

அந்த நேரத்தில் அதற்கு பொறுப்பாக இருந்தவர் மொஹமட் என்ற உத்தியோகத்தர் ஆவார். அப்போது தேர்தல் அதிகாரியாக இருந்தவர், இப்போது இளைப்பாறி விட்டார். இருப்பினும் அவரை தெரிந்தெடுத்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

2015ஆம் ஆண்டு தேர்தலில் சில பிழையான சம்பவங்கள் இடம்பெற்றதாக எனக்கு சொல்லப்பட்டது. ஆனால அந்த பிழையான சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை என்பது உண்மை.ஆனால் அன்று நடந்த சம்பவங்கள் தொடர்பாக தமிழ் மக்களிடம் பல கருத்துக்கள் உள்ளன.

இம்முறையும் அவ்வாறான சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது.

அம்முறை பிழையான சம்பவங்கள் நடக்க முக்கியமாக இருந்த நபரான மொஹமட், மீண்டும் இங்கு அனுப்பப்பட காரணம் என்ன? அதுவும் அவர் இளைப்பாறி சென்றுவிட்ட பின்னர், அவரை தெரிவு செய்து அனுப்பிதயன் பின்னணி என்ன?யாழ்ப்பாணத்தில் மட்டும்தான் இப்படி அதிகாரியொருவரை அனுப்பியுள்ளனர். ஏனைய மாவட்டங்களிற்கு இப்படி அதிகாரிகளை அனுப்பவில்லை.

இதற்கு பின்னால் அரசாங்கம் எப்படியான எண்ணங்களை வைத்துள்ளது என்பது விளங்கவில்லை.  ஆனால், ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாட்டில் ஈடுபட போகிறது என்பது கணிப்பு என்றார்.

2015 யாழ் மாவட்ட தேர்தல் தொடர்பில் தமிழ் அரசியலரங்கில் சில சர்ச்சைக்குரிய தகவல்கள் உலாவிக் கொண்டிருக்கின்றன. சில வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டதாகவும், சிலர் வெற்றியடைய வைக்கப்பட்டதாகவும் பேச்சுண்டு. அண்மையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் உரையாற்றிய போது, தானும் அருந்தவபாலனும் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இதேவேளை, சில வாரங்களின் முன்னர் இணையத்தள செய்திகளில், 2015 தேர்தலில் யாழில் செயற்பட்ட இரண்டு அதிகாரிகளை மீள அழைத்து வரப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்பின்னர் வானொலி நேர்காணல் ஒன்றில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் இரட்ணஜீவன் கூல் பின்வருமாறு தெரிவித்திருந்தார். “யாழ்ப்பாணத்திற்கு அச்சுதனையும், மொஹமட்டையும் மீள அனுப்பி, தேர்தல் முடிவுகளில் மாற்றம் செய்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவரை வெற்றியடைய வைக்க (இரட்ணஜீவன் கூல் அந்த வேட்பாளரின் பெயர் குறிப்பிட்டார்) நான் முயற்சிப்பதாக செய்திகள் வந்தன. உண்மை அதுவல்ல. அவர்கள் இருவரையும் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவத பற்றி நாம் யோசிக்கவில்லை“ என்றார்.

எனினும், கடந்த வாரம் இரண்டு அதிகாரிகளும் யாழ் தேர்தல் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here