கூட்டமைப்பின் இளம் வேட்பாளர்கள் அறிமுகம்-1: பணத்திற்காக விடப்பட்ட அறிக்கை… ஈ.பி.டி.பி வழங்கிய ஜே.பி!

தேர்தலிற்கு இன்னும் மிகச்சில நாட்களில் தேர்தல் வருகிறது. கைநிறைய வாக்குறுதிகளுடன் உங்களை தேடி வேட்பாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இம்முறை எல்லா கட்சிகளிலும் இளம் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

தமிழர்களின் பிரதான கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பிலும் இம்முறை பல இளம் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஏகோபித்த தெரிவு என தமிழ் தேசிய கூட்மைப்பு தெரிவித்து வருகிறது. தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்து வந்துள்ளனர்.

அந்த வகையில், கூட்டமைப்பினால் களமிறக்கப்பட்டுள்ள இளம் வேட்பாளர்கள் பற்றிய அலசல் இது. தமிழ் சமூகத்தின் அரசியல் தேவை நோக்கு நிலையில், களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் தகுதியானவர்களா என்பதை ஆராய்வதே இந்த பகுதி.

நீண்ட போராட்ட வரலாறுடைய இனத்தின் எதிர்கால பிரதிநிதிகளை தெரிவு செய்யும்போது, ஒவ்வொருவருக்கும் அதிக பொறுப்புணர்வு அவசியம். அறிந்தவர், தெரிந்தவர், வீதி போட்டு தந்தார் என்ற காரணங்களின் அடிப்படையில் மட்டும் வாக்களிப்பது, சமூகத்தை நீண்டகால அடிப்படையில் ஆபத்தில் தள்ளும்.

வாக்காளர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், இந்த பட்டியலை தயாரித்துள்ளோம்.

இம்மானுவேல் ஆர்னல்ட்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும், யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆனல்ட்டின் ஆடம்பர பிரியம் ஊரறிந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நெருக்கடியான காலகட்டத்தில், தகுதியானவர்களை தட்டிக்கழித்து, செல்வாக்கால் பெற்றால் யாழ் மாநகரசபை முதல்வர் பதவியை அவர் எப்படி போட்டுடைத்தார் என்பது ஊரறிந்தது.

யாழ் மாநகரசபை வரலாற்றிலேயே செயற்றிறன் இல்லாத மோசமான காலகட்டம் இதுதான் என பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத ஆனல்ட், மாநகர பணத்தில் தனது ஆடம்பர வசதிகளை அதிகரிப்பதிலேயே குறியாக இருந்தவர் என்ற விமர்சனம் மாநகரசபைக்குள்ளேயே இருந்தது. மாநகரசபைக்கு எப்படியான திட்டங்களை கொண்டு வரலாம், எங்கு நிதி பெறலாம் என அவர் ஆராய்ந்ததை விட, ஆடம்பர வசதிகளை பெற என்னென்ன வழிகள் என ஆராய்ந்ததே அதிகம்.

முன்னாள் முதலமைச்சர் பாவித்த உத்தியோகபூர்வ வாகனம், அவர் பதவியிலிருந்து விலகிய பின்னர் பாவனையில் இல்லாதமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை முகர்ந்து பிடித்து, முதலமைச்சரின் வாகனம்தான் தனக்கு தேவை என மாகாண அதிகாரிகள் சிலரை தாஜா பண்ணி பெற்றுவிட்டார்.

நிர்வாக ஒழுங்கின்படி அது தவறு. ஆனால் அதிகாரிகள் சிலரும் அதை அனுமதித்தனர். அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகாரத்தில் இருந்ததால் அவர்களும் இசைந்து சென்றனர்.

பின்னர், ஆளுனர் சுரேன் ராகவன் தனது பதவியின் இறுதிக்காலகட்டத்தில்தான் இதை தெரிந்து கொண்டு, வாகனத்தை “பறித்து“ எடுத்தார்.

யாழ் மாநகரசபை முதல்வர்கள் வரலாற்றில் மட்டுமல்ல- கடந்த சில மாதங்களில் அதிகம் வெளிநாடு சென்ற இலங்கையின் ஒரே அரசியல்வாதியும் ஆனல்ட்தான். அவை அனைத்தும், மாநகரசபை வளர்ச்சிக்கான பயணங்கள் அல்ல. ஆனால், அந்த பயணங்களில் பெரும்பாலானவற்றிற்கு மாநகரசபையிலேயே நிதி கோரப்பட்டது. இ்த தேர்தலை இலக்கு வைத்து, வெளிநாட்டில் பணம் வசூலிப்பதற்கே அவர் அந்த பயணங்களை செய்தார்.

தமிழ் அரசியலில் எந்த தகுதியும் இல்லாமல், இளையவர்கள் என்ற ஒரேயொரு தகுதியுடன் அரசியலில் நீடிக்கும் ஆனல்ட் வகையறாக்கள், தமிழ் அரசியலை தகுதி நீக்கம் செய்பவர்கள்.

அரசியல் நிலைப்பாடுகள் எதுவுமில்லாமல், வசதி வாய்ப்பிற்காக தமிழ் அரசியலிலும் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்த தயங்காத சிலரை கடந்த மாகாணசபை அடையாளம் காட்டியது. இளைஞர்கள் என்ற பெயரில் மாகாணசபைக்குள் இருந்த 3 பேரே தமிழ் சமூகத்தின் சாபமாக செயற்பட்டனர். அதில் ஆனல்ட்டும் ஒருவர்.

எம்.ஏ.சுமந்திரனுக்கும், க.வி.விக்னேஸ்வரனிற்குமிடையிலான மோதலில்- சுமந்திரனின் ஆள்,அம்பு,சேனையாக செயற்பட்டவர் ஆனல்ட். அதற்கான பலனே யாழ் மாநகரசபை முதல்வர் பதவி. அது அவரது தகுதியினால், திறமையினால், சமூகத்திற்கான அயராத உழைப்பினால் நேர்ந்ததல்ல.

ஆனால் பொதுமேடைகளில் பேசும்போது, கழுத்து நரம்புகள் படைக்க, தீவிர தமிழ் தேசியம் பேசி, அரசையும், அரச பங்காளிகளையும் ஒரு பிடி பிடிப்பதில் கில்லாடி.

அரசியலுக்கு வரும் இளையவர்களிடம், இள இரத்த சூடு இருக்கும். எதிலும் நேர்மையிருக்கும். சமரசமற்ற தன்மையிருக்கும்.

ஆனல்ட்டிடம் அது இருக்கிறதா?

யாழ் மாநகரசபை முதல்வர் பதவிக்கு எப்படி வந்தாரோ, அந்த ஏணியையும் எட்டி உதைந்தவர்.

எம்.ஏ.சுமந்திரன் விடுதலைப் புலிகள் தொடர்பில் தெரிவித்த கருத்தை தொடர்ந்துஈ ஆனல்ட் ஒரு அறிக்கை விட்டார். அதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான தகவலுள்ளது.

அண்மை நாட்களாக ஆனல்ட் தன்னையொரு சுமந்திரன் எதிர்ப்பாளராக தனக்கு நெருக்கமானவர்களிடம் காண்பித்து வந்தார். ஆனால் உண்மையில் அவர் சுமந்திரன் எதிர்ப்பாளர் அல்ல.

சுமந்திரன் விடுதலைப் புலிகள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தொன்றை தெரிவித்திருந்தார். ஆனல்ட் பல பிரதேசங்களிற்கும் சென்றார், இளைஞர்கள் சுமந்திரனின் கருத்தை கண்டித்தார்கள். தேர்தலில் வெற்றிபெற இதையொரு உத்தியாக பாவிக்க தீர்மானித்தார்.

இந்த சமயத்தில்தான், சுமந்திரனை கண்டித்து ஆனல்ட்டின் அறிக்கை வெளியானது.

அந்த அறிக்கை, ஆனல்ட் சுயமாக வெளியிட்டதல்ல. ஒரு புலம்பெயர் பண முதலையின் பின்னணியில் அதை வெளியிட்டார். அந்த அறிக்கைக்காக ஆனல்ட்டின் தேர்தல் பிரச்சாரம், செலவை ஈடுகட்டும் ஒப்பந்தங்கள் ஏதும் இருந்ததோ தெரியவில்லை.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அந்த அறிக்க வெளியாகி விட்டது… தனது குரு சுமந்திரனையே ஆனல்ட் எதிர்க்கிறார் என கூட இருந்தவர்கள் கருதுகிறார்கள்… தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மத்தியில் அப்படி அபிப்ராயத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்… இதேசமயத்தில், அந்த அறிக்கை வெளியான ஓரிருநாளில் யாழிலுள்ள எம்.ஏ.சுமந்திரனின் வீட்டுக்கு போய் சாஷ்டாங்கமாக விழுந்து விட்டார். குறிப்பிட்ட புலம்பெயர் முதலையின் வலையில் விழுந்து அறிக்கை விட்டுவிட்டேன் என அவர் வருந்தியதாகவும், அந்த விவகாரம் குறித்த ஒலிப்பதிவு ஆதாரம் சுமந்திரன் தரப்பில் உள்ளதாகவும் தகவல்.

இரவில்- பொதுக்கூட்டங்களிற்கு பின்னர் சுமந்திரன் வீட்டிற்கு சென்று இரகசிய உறவை பேணியபடி, பகிரங்கமாக சுமந்திரன் விமர்சகராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

அர்ப்பணிப்பானதும், விட்டுக் கொடாததுமான தமிழ் தேசிய அரசியலின் தேவையை ஆனல்ட்டினால் நிச்சயமாக பூர்த்தி செய்ய முடியாது. அவர் வெற்றியடைவது தமிழ் தேசியத்தை பலப்படுத்தும் என்பதற்கான உத்தரவாதங்களை நடைமுறை ரீதியாக ஆனல்ட் இதுவரை நிரூபித்திருக்கவில்லை.

அதேவேளை, யாழ் மாவட்ட வெற்றியாளர் பட்டியலிலும் அவரில்லை.

வேதநாயகன் தபேந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இம்முறை களமிறக்கப்பட்டுள்ள இன்னொரு புதிய வேட்பாளர் தபேந்திரன். அரசியலுக்கும் புதியவர். தேர்தலுடன்தான் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

தபேந்திரன் இலகுவாக இந்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. நிறைய இழுபறியின் பின்னரே இடம்பிடித்தார்.

பொதுவாகவே, தேர்தல் அரசியலென்பது ஒரு மசாலா மாதிரி. எல்லாவித கலவையும் இருக்க வேண்டும். சமத்துவம், சமூகநீதி, சமூக தளைகளை உடைத்தல் என தமிழ் தேசியவாதிகள் பேசினாலும், நிஜத்தில் அப்படியெதுவும் நடப்பதில்லை. அதனாலேயே இம்முறையும் சாதி ரீதியாகவும் ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு வேட்பாளரை பரிந்துரைக்கும்படி கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் அரசு கட்சியின் சாதி ரீதியாக பிரதிநிதித்துவத்தை வலியுறுத்துபவர்களிடம் கோரியிருந்தார்.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள் சிவயோகம், அ.பரஞ்சோதி வகையறாக்களே அந்த அணியினர். அவர்கள் தமது உறவுமுறையான தபேந்திரனை பிரேரத்தார்கள். தமிழ் அரசு கட்சியின் சாதிய பிரதிநிதிகள் சிவயோகனும், பரஞ்சோதியுமா? அவர்கள் நியமிக்கும் உறவினர்களே வேட்பாளர்களா என்ற கேள்வி ஏனைய சமூங்களிடம் இல்லாமலுமில்லை.

தபேந்திரனை வேட்பாளராக்குவது குறித்து தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட போது, தபேந்திரனின் கடந்தகாலம் குறித்து விவாதிக்கப்பட்டது.

அவர் ஈ.பி.டி.பி அனுதாபியாக இருந்தார், அவர் வெளிப்படையாகவே முகப்புத்தகங்களில் அந்த கருத்தை பகிர்ந்தார் என ஒரு எம்.பி முறையிட்டார். அவரது ஜே.பி பட்டம் ஈ.பி.டி.பியினால் வழங்கப்பட்டது என்றும் சொல்லப்பட்டது.

ஈ.பி.டி.பியின் முன்னாள் யாழ் மாவட்ட எம்.பி அலன்ரின்- உதயனின்- சிபாரிசில் அந்த ஜே.பி பட்டம் வழங்கப்பட்டது என கூறப்பட்டது.

அதைவிட, அதிர்ச்சியளிக்கும் பிறிதொரு எம்.பி சுமத்தினார். அது குறித்து எழுதுவது முறையல்ல. ஆனால், அந்த கூட்டத்திலிருந்தபடியே ஒரு எம்.பி நபர் ஒருவருக்கு அழைப்பேற்படுத்தி, அந்த குற்றச்சாட்டு உண்மையா என விசாரித்தார். மறுமுனை நபர் அதை மறுத்தார். இதன் பின்னரே அவருக்கு நியமனம் வழங்கப்பட்டது.

அப்போது ஒரு எம்.பி இப்படி சொன்னார்- “சரி… சரி. ஒரு ஈ.பி.டி.பிக்கு ஆசனம் கொடுக்கிறீர்கள். கொடுங்கள்“ என்றார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சாதிய ரீதியான வாக்குகளை குறிவைத்து அவர் களமிறக்கப்பட்டிருந்தாலும், தமிழ் தேசிய வாக்குகளில் மிகப்பெருமளவானவை சாதிய ரீதியாக அளிக்கப்படுபவை அல்ல. ஆனால், புத்தூர் சாதிக்கட்சி களமிறங்கி, சாதிய பிளவை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது, ஓரளவு தபேந்திரனுக்கு சாதகமாக அமையலாம். எனினும், முன்வரிசை வெற்றியாளர்களிற்குள் அவர் இல்லை.

(வரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here