கேடயத்தில் களமிறங்கிய மு.சந்திரகுமாரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான கேடயச் சின்னத்தில் போட்டியிடுகின்ற சுயேச்சைக் குழு 5 நேற்று (18) தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்துள்ளது.

குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பன்மைத்துவத்தை வலியுறுத்திய அரசியல் உரிமை, சமூக நீதி ஆகியவற்றைப் பேணுவதும் வலியுறுத்துவதும், இதற்கமைந்த முறையிலான அரசியல் உறுதிப்பாடு சமூக அந்தஸ்து பொருளாதார வளர்ச்சி சமநிலையான வளப்பகிர்வு ஆகியவற்றை உறுதி செய்தல். மாகாணங்களுக்கான சமஸ்டி அதிகாரத்தைப் பெறுதல்.

தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைக்கான தீர்வும் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கான தீர்வும் ஒரே நிலையில் காணப்படும். இதுவே எமது நிலைப்பாடாகும். அரசியல் அதிகாரத்துக்காகப் போராடுவதாகச் சொல்லிக் கொண்டே எமது மக்களைப் பலவீனப்படுத்தும் அரசியல் வழிமுறையை நிராகரித்து பலவீனப்படுத்தப்பட்டிருக்கும் மக்களைப் பலமான மக்களாக மாற்றுவதே எமது முதன்மைச் செயற்பாடாகும்.

இதற்கு ஏற்றவாறே எமது அரசியல் கோட்பாட்டினையும் நடைமுறைத் தந்திரோபயத்தையும் அணுகுமுறைகளையும் வகுத்திருக்கிறோம்.

இது முற்று முழுதான எதிர்ப்பு அரசியலும் அல்ல. முற்று முழுதான சரணாகதி அரசியலும் அல்ல. ஆட்சியிலிருக்கும் தரப்புகளோடு இணைந்து செயற்பட வேண்டிய விடயங்களில் இணைந்தும் விலகிச் செயற்பட வேண்டிய விடயங்களில் விலகியும் ஒடுக்கப்படும் மக்களுடைய விடுதலைக்கான அரசியலை முன்னெடுக்கிறோம்.

இத்தகைய புதிய அணுகுமுறையின் மூலம் எமது மக்களின் தனித்துவத்தைப் பேணுவதோடு நியாயமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் முடியும். மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொள்ளவும் இயலும். நாம் சர்வதேச சமூகம் மறுத்துரைக்க முடியாத வகையில் எமது அரசியல் வழிமுறைகளை உருவாக்கியுள்ளோம்.

இலங்கைத்தீவின் இன்றைய அரசியல் நிலவரம் கொரோனாவினால் உலகளாவிய ரீதியில் மாறிவருகின்ற அரசியல் – பொருளாதார சூழல் இலங்கையைக் குறித்த பூகோள அரசியல் போன்றவற்றைக் கவனத்திற் கொண்டதாகவே எமது அரசியல் கோட்பாடுகளும் செயற்பாடுகளும் வகுக்கப்பட்டுள்ளன.
என சுயேச்சைக் குழு 5 இல் போட்டியிடுகின்ற சமத்துவக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொருளாதாரம். இளைய தலைமுறையினருக்கான தொழில் வாய்ப்பு, கல்வி உட்கட்டுமான அபிவிருத்தி போன்ற விடயங்களில் முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here