கட்டிப்பிடி வைத்தியம்: கொரோனா காலத்தில் அன்பைப் பெற வித்தியாச முயற்சி!

உலகத்தில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் தேவையான அடிப்படையான விஷயங்களில் ஒன்று ‘கட்டிப்பிடி வைத்தியம்.’ கட்டியணைத்தல் என்பது அதீத அன்பை வெளிப்படுத்தும் முறைகளில் ஒன்று. ஆனால், உணர்வுபூர்வமானது. எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் நம்மை கட்டியணைத்து ‘எதுவுமில்லை, எல்லாம் சரியாகிவிடும்’ என்று சொல்வதற்காக அன்பு நிறைந்த ஒருவர் நமது வாழ்க்கையில் இருந்தாலே மனதுக்கு சற்று ஆறுதலாக இருக்கும்.

ஆனால், கொரோனா வைரஸ் பரவும் இந்த நேரத்தில் ‘கட்டிப்பிடி வைத்தியம்’ செய்வது கொஞ்சம் ஆபத்தான விஷயம். இந்த நாள்களில் நண்பர்களையும் குடும்பத்தினரையும் கட்டியணைக்க முடியவில்லையா? அதற்குப் பதிலாக ஒரு மரத்தைக் கட்டியணையுங்கள் என்கிறது இஸ்ரேல்.

கொரோனா பரவுவதைத் தடுக்க தனிமனித இடைவெளி மிகவும் அவசியமான ஒன்றாக மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இத்தகைய விதிமுறைகள் நிலவும் நேரத்தில் தங்களது உணர்வுகளைக் கொஞ்சம் சமாளிக்க மக்களுக்கு உதவும் வகையில் இஸ்ரேலின் இயற்கை மற்றும் பூங்கா ஆணையம் மரத்தைக் கட்டியணைக்கும் விஷயத்தை வலியுறுத்தி வருகிறது.

‘மக்கள் விரும்பாத இந்தக் கொரோனா காலகட்டத்தில், உலகம் முழுவதும் உள்ள மக்கள் இயற்கை அதிகம் உள்ள பகுதிகளுக்கு செல்லுங்கள். நன்றாக மூச்சு விடுங்கள். ஒரு மரத்தைக் கட்டியணையுங்கள். உங்களது அன்பை வெளிப்படுத்துங்கள். அன்பை நீங்களும் பெறுங்கள்’ என்று அபோல்லோனியா தேசிய பூங்காவின் இயக்குநர், ஓரிட் ஸ்டெயின்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள இந்தப் பூங்காவில் மக்கள் மரங்களைக் கட்டியணைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என ஆலோசனைகள் அதிகாரிகளின் மத்தியில் எழுந்துள்ளன. இதையடுத்து மரங்களை மக்கள் கட்டியணைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக சுற்றுலாப் பயணியாக வந்த ஹசன் என்பவர், ‘கொரோனா காலங்களில் அதிகமான நபர்களை நாங்கள் கட்டியணைக்கவில்லை. எங்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகள் என யாரையும் கட்டியணைக்கவில்லை. ஆனால், ஒரு மரத்தைக் கட்டியணைப்பது என்பது மிகவும் நல்ல விஷயம்’ என்று தெரிவித்துள்ளார். இந்த விஷயம் மக்கள் பலரிடமும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அங்கு வரும் மக்கள் மரத்தைக் கட்டியணைத்து தங்களது அன்பை வெளிப்படுத்தியும் அன்பைப் பெற்றும் செல்கின்றனர்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியுடன் இயங்க இஸ்ரேல் மக்கள் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். வயதானவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதையும் அவர்கள் தவிர்த்து வருகிறார்கள். கடந்த மே மாதங்களில் வைரஸ் பாதிப்பு அங்கு குறையத் தொடங்கியதால் இயல்பு நிலை திரும்பி வந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், கடந்த சில வாரங்களாகப் பாதிப்பு அதிகமாகவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here