தேர்தல் கலகலப்பு 7: யாழில் 7 ஆசனங்களையும் குறிவைத்த காமெடி கணக்கு!

தேர்தல் என்பது எப்பொழுதும் சீரியஸான விடயமாக இருக்காது. அதில் சில பல காமெடியன்களும் இருப்பார்கள். அவர்களால்தான் தேர்தல்களம் சுவாரஸ்யமாக இருக்கும்.

பொதுவாக தமிழ் சூழலில் சீரியஸான கட்சிகளே எப்பொழுதும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. சீரியஸான கட்சிகளிற்குள் எண்டரெயின்ற்மென்ற் இருப்பது குறைவாக இருக்கும். எப்பொழுதுதாவது உள்வீட்டு மோதல்கள் நடந்தால் மட்டுமே அது ஏற்படும். மற்றும்படி, களம் சீரியஸாக இருக்கும்.

ஆனால், அண்மைக்காலமாக “ஆசைப்பட்ட எல்லாவற்றையும் காசிருந்தால் வாங்கலாம்“ என்ற போர்முலாவை அடியொற்றி தேர்தல் வர்த்தகத்தில் குதித்துள்ள வர்த்தகர்களால், தமிழ் அரசியலும், தேர்தல்களமும் வடிவேல் பட பாணியில் உச்சபட்ச என்டரெயின்ற்மென்றாகியுள்ளது.

அவர்கள் செய்யும் அட்ராசிட்டிகளால், தமிழ் அரசியல் அரசியல் களம் அதிகளமாகி வருகிறது.

அந்தவகையில் மோஸ்ட் என்டரெயின்ற்மென்ற் பேர்வழியாக தமிழ் அரசியல்களத்தில் இருப்பவர்களில் ஒருவர் கணேஷ் வேலாயுதம்.

பிரித்தானிய குடியுரிமையுள்ள வர்த்தகர். தேர்தல் உத்திகளும், அரசியல் சூட்சுமமும் புரியாமல் கடந்த 10 வருடங்களாக வடக்கில் அரசியல் செய்கிறேன் பேர் வழியென பணத்தை இறைத்து வருகிறார்கள்.

கடந்த தேர்தலில் சுயேட்சை அணியாக களமிறங்கினார். பொதுவாகவே தமிழ் சூழலில் சுயேட்சை அணிகளின் வெற்றி வாய்ப்பு மிக கடினமானது. ஆனால், கணேஸ் ஒரு காமடி கணக்கிட்டிருந்தார். யாழ்ப்பாணத்தின் 7 ஆசனங்களும் தனக்குத்தான் என அவர் உறுதியாக நம்பினார்.

கனவு காண்பது நல்லது, பெரிதினும் பெரிதாக கேட்டால்தான் ஓரளவு பெரிதாக கிடைக்கும் என்ற சூத்திரத்தின் அடிப்படையிலான கணக்கல்ல அது. 7 கிடைக்குமென நம்பினால்தான் 3 ஆசனமாவது கிடைக்குமென்பதால் அப்படி கணக்கிட்டிருக்கலாமென நீங்கள் நினைத்தால்… அதுதான் தவறு.

அந்த தேர்தல் சமயத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு தொலைக்காட்சி நிலையத்தில் நேர்காணலிற்காக கணேஸ் வேலாயுதம் சென்றிருந்தார். நேர்காணல் நடந்தது… முடிந்தது. பின்னர் நெறியாளருடன் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தபோது, தமது அணிக்கு எத்தனை ஆசனம் கிடைக்குமென கருதுகிறீர்கள் என நெறியாளரிடம் கேட்டுள்ளார்.

பொதுவாக இந்த வகையான கேள்விகள் சங்கடமானவை. வெறும் 100 வாக்குகள்தான் பெறுவார் என்றாலும், முகத்திற்கு நேராக கேட்கும்போது, நாகரிகமாக- கேட்பவரின் மனம் நோகாமல் பதில் சொல்வதுதான் பெரும்பாலானவர்களின் வழக்கம்.

நெறியாளரும் அப்படியானவர். எத்தனை ஆசனம் என்பதிருக்கட்டும், முதலில் கட்டுக்காசு கிடைக்க வழியை பாருங்கள் என்பதுதான் உண்மையான பதிலாக இருந்திருக்கும். அது நெறியாளருக்கும் தெரியும். ஆனால் அவர் கொஞ்சம் நாகரிகமாக, “நீங்கள் இன்னும் கடுமையாக வேலை செய்ய வேண்டும். அப்படி செய்தால் 2,3 ஆசனங்களிற்கு முயற்சி செய்யலாம்“ என்றிருக்கிறார்.

உண்மையில் இதைக் கேட்டு கணேஸ் சந்தோசமடைந்திருப்பார் என நீங்கள் நினைத்தால்… அது தவறு. அவருக்கு முகம் சிவந்து கோபம் வந்து விட்டது. “எமக்கு 7 ஆசனமும் வரவிருக்கிறது.. நீர் என்ன விளையாடுகிறீரா?“ என எகிறியிருக்கிறார். போதாததற்கு, “இந்த முறை நாம் 7 ஆசனங்களையும் கைப்பற்றுகிறோம். நாம் 7 ஆசனத்தை கைப்பற்றினால் இந்த வேலையை விட்டுவிட்டு எமது கட்சி பணிக்கு வாரும்.“ என மேசையில் அடித்து விட்டு எழுந்து சென்றார்.

அந்த தேர்தலில் யாழ் நகரத்தில் ஒரு இசை நிகழ்ச்சியையும் நடத்தினார். கிட்டத்தட்ட 80 இலட்சத்திற்கு கிட்டவாக செலவிட்டு, இந்தியாவிலிருந்து இசைக்குழுவை வரவழைத்து இந்த இசை நிகழ்ச்சி நடந்தது. இசைக்குழுவிற்கு நிறைய பார்வையாளர்கள் வந்திருந்தனர்.

எல்லா கணக்கையும் கூட்டிக்கழித்த பார்த்து, யாழ்ப்பாணத்தின் 7 ஆசனங்களும் தனக்குத்தான் என எல்லோரிடமும் அடித்து சொன்னார். உறுதியாக நம்பினார். முடிவு எல்லோருக்கும் தெரிந்ததுதான். கட்டுக்காசும் இல்லை.

இம்முறை சஜித் அணியில் களமிறங்கியுள்ளார். இம்முறை யாழில் தமக்கு 3,4 ஆசனங்களாவது கிடைக்கும் என அந்த அணி உறுதியாக நம்புகிறதாம்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்திலிருந்து சஜித்திற்கு கெட்டகாலம் என்கிறார்கள். இவ்வளவு கெட்டகாலமென யாராவது ஜோதிடர்கள் சொல்லியிருப்பார்களா என்பது தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here