மட்டக்களப்பில் விநியோகிக்க கொழும்பிலிருந்து இரகசியமாக வந்த பிரசுரங்கள்: வெளியாகும் தகவல்!

அண்மைக் காலமாக சில தமிழ் ஊடகங்கள் கருணா அம்மானைச் சாதாரண அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராகச் சித்தரித்துப் பொய்யும் புரட்டும் நிறைந்த கட்டுக் கதைகளைச் சோடித்து அவருக்கு எதிரான விசமத்தனமான பிரச்சாரங்களைத் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றது என கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்-

எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் கருணா அம்மான் அம்பாறை மாவட்டத்தில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான அகில இலங்கை தமிழர் மகா சபையின் ‘கப்பல்’ சின்னத்தில் தலைமை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவருக்கான வெற்றி வாய்ப்பு அம்பாறை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கருணாஅம்மான் வெற்றி பெற்றால் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள அம்பாரை மாவட்டத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் அபிலாசைகள் நிறைவேறி விடுமே என முஸ்லிம் அரசியல்வாதிகள் அங்கலாய்கிறார்கள். கருணா அம்மான் வெற்றியடைவதை முஸ்லிம் அரசியல்வாதிகள் எவரும் விரும்பவில்லை. காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடையே அரசியல் ரீதியாகச் செல்வாக்குப் பெற்றிருந்தால் தான் கிழக்குத் தமிழர்களுக்கு எதிரான பாரபட்சமான நடவடிக்கைகளை முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்குதடையின்றி மேற்கொள்ளலாம்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டும் காணாதது போல் நடந்து கொள்ளும். தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குக் கிழக்குத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதை விடவும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் முகம் கோணாமல் நடந்து கொள்வதுதான் முக்கியம். அதனால் முஸ்லிம் அரசியல்வாதிகள் பணத்தை வாரி இறைத்துத் தமிழ் ஊடகங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் பயன்படுத்திக் கருணா அம்மானைத் தமிழர்களிடையே ஒரு கொடூரமானவராகச் சித்தரித்து வருகிறார்களா? என்ற சந்தேகம் வலுப்பெற்று வருகிறது.

அண்மையில் சமூக ஊடகம் ஒன்றில் உரையாற்றிய வெளிநாட்டில் வதியும் தமிழர் ஒருவர் கருணா அம்மானை தாறுமாறாகத் தூற்றிய அவரது உரையின் போது ஒரு கட்டத்தில் இஸ்லாமியச் சகோதரர்களின் வேண்டுகோளின் பேரில்தான் அந்த உரையை அவர் ஆற்றுவதாகக் குறிப்பிட்டமை முழுப் பூசணிக்காயையும் சோற்றில் மறைக்க முடியாமல் தனது பின்னணியின் உண்மையை அவர் அவிழ்த்து விட்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

அதுபோலவே மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையான் வெற்றி பெறுவதில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இஷ்டமில்லை. பிள்ளையானுக்கு எதிராகவும் திட்டமிட்டு முகநூல் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. ஒருபுறம் தமிழ்ப் பெயர்களுக்குள் ஒளிந்து கொண்டு முஸ்லிம் நபர்களே கருணா அம்மானுக்கும் பிள்ளையானுக்கும் எதிராக இம் முகநூல் பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும் மறுபுறத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு முஸ்லிம் வர்த்தகர்கள் ஊடாக பணம் வழங்கப்பட்டு அவர்களைக் கொண்டும் கருணா அம்மானுக்கும் பிள்ளையானுக்கும் எதிரான முகநூல் பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும் சந்தேகம் நிலவுகின்றன. தமிழர்களைப் பணம் கொடுத்து வாங்கி விடலாம் என்பது முஸ்லிம் அரசியல்வாதிகளினதும் முஸ்லிம் வர்த்தகர்களினதும் உளவியலாகும். இதற்குக் காலங்காலமாக வழி சமைத்துக் கொடுத்தது இதுகால வரையிலான தமிழர்தம் அரசியல் தலைமைகள் என்பதே பாதிக்கப்பட்ட தமிழர்களிடையே பரவலான கருத்தாக உள்ளது.

தேர்தல்த் தேவைகளுக்காக மட்டுமே தமிழ்த் தேசியம் என்று கோஷித்துக் கொண்டு கடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாக அரசியல் அரங்கிலே உலா வந்தவர்கள் செய்த வேலை என்னவென்றால் கிழக்குத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் நலன்களையெல்லாம் தங்கள் கட்சி அரசியல் நலன்களுக்காக முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் அடகுவைத்தமையேயாகும். கிழக்குத் தமிழர்களின் இன்றைய கையறு நிலைக்குக்காரணம் இதுகாலவரையிலான தமிழர்தம் அரசியல் தலைமைகளின் தீர்க்கதரிசனமற்ற செயற்பாடுகளே. அதனாலேயே கிழக்குத் தமிழர்கள்அத்தகைய அரசியல் தலைமைகளின் மீது அதிருப்தியுற்று நம்பிக்கை இழந்து தங்களுக்கென தனித்துவமான மாற்று அரசியல் பாதையொன்றினை இப்போது அவாவி நிற்கின்றார்கள். அதன் வெளிப்பாடுதான் கிழக்கின் தனித்துவ அரசியல் அடையாளமான கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு ஆகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையானின் கட்சிக்கு அதிக ஆசனங்கள் சென்றுவிடக்கூடாது என்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் சிலருக்கு முஸ்லீம் வர்த்தகர்கள் நிதியுதவி அளிப்பதாகவும் கதை அடிபடுகிறது. கடந்த கிழக்கு மாகாணசபை ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸிடம் பெருந்தொகைப் பணம் பெற்றுக் கொண்டுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை தாரை வார்த்தது என்று அப்போது பரவலாகப் பேசப்பட்ட விடயம் உண்மைதானோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஞா.கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) அவர்கள் அண்மையில் படகுத் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறப்பட்டுள்ள விடயங்களின் உள்ளார்ந்த அர்த்தம் இதுதானோ என இப்போது என்று எண்ணத் தோன்றுகிறது.

2008ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது பிரிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடமாட்டோம் என அன்று ஆஷாடபூதித்தனமாக அறிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ{டன் ஏற்பாடு செய்து கொள்ளப் பெற்ற எழுதா உடன்படிக்கையின் பிரகாரம் அத்தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கி இருந்தது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி எப்படியாவது கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி விட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது பாராளுமன்ற ஆசனத்தை ராஜினாமாச் செய்து விட்டுத் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டார். பஷீர் சேகுதாவுத் தனது பாராளுமன்ற ஆசனத்தை ராஜினாமாச் செய்துவிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டார். அதுபோலவே அப்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளராகப் பதவி வகித்த ஹசன் அலி தனது பாராளுமன்ற ஆசனத்தை ராஜினாமாச் செய்து விட்டு அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டார்.

அப்போது நிலவிய ஆபத்து நிறைந்த அரசியல் சூழ்நிலையிலும் பிள்ளையான் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கி இருந்த போதிலும் கூட பிள்ளையான் முதலமைச்சராக வருவதைத் தடுப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை முதலமைச்சர் ஆக்குவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திரைமறைவில் பல முயற்சிகளை மேற்கொண்ட விடயம் பின்னாளில் பலரும் அறிந்ததே. அத்தேர்தலில் மட்டக்களப்பிலே தமிழர்கள் பசீர் சேகுதாவுத்தை ஆதரிக்கக்கோரும் துண்டுப் பிரசுரங்களைக் கொழும்பில் இருந்து ஒரு மலையக அன்பர் மூலம் மட்டக்களப்பிலுள்ள மண்டூர் மகேந்திரன் என்பவரிடம் சேர்ப்பிக்கும் படி மாவை சேனாதிராஜா கொடுத்தனுப்பி இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அப்போது இப் பிரசுரங்களை மண்டூர் மகேந்திரன் விநியோகம் செய்ய விரும்பாது அவரது வீட்டிலேயே ‘சும்மா’ வைத்து விட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இவ்வாறான திரைமறைவுத் துரோகங்களை இனியும் தொடர அனுமதிக்கக் கூடாது. நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி தமிழ் மக்களுக்கு வஞ்சனை செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வாய்ச்சொல்லில் மட்டுமே வீரர்கள் என்பதை காலம் இப்பொழுது நிரூபித்துக் காட்டியுள்ளது. வைக்கோல் பட்டறை நாய் போலத் தாங்களும் செய்ய மாட்டார்கள் செய்பவனையும் விடமாட்டார்கள்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கை ஓங்கி கிழக்கில் முஸ்லிம் அரசியல் வாதிகளினால் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாரபட்சமான நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையும் என்பதை நன்றாகத் தெரிந்திருந்தும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் இறுதி நேரத்தில் சஜித்பிரேமதாசவை ஆதரிக்கத் தீர்மானித்தமை கிழக்குத் தமிழர்கள் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அக்கறையில்லையென்பதையே எடுத்துக் காட்டுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தமிழ் மக்களின் நலன்களை விடவும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் நலன்கள்தான் அதி முக்கியமானவை. எனவே இதைத்தெளிவாகப் புரிந்து கொண்டு கிழக்குத் தமிழர்கள் அரசியலில் மிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். முஸ்லிம் அரசியல்வாதிகளினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரதும் மற்றும் இவர்களுக்கு ஊதுகுழலாய் உள்ள தமிழ் ஊடகங்களினதும் விஷமத்தனமான பிரசாரங்களுக்கு எடுபடாமல் அம்பாறையிலும் திருகோணமலையிலும் கப்பல் சின்னத்தையும் மட்டக்களப்பில் படகுச் சின்னத்தையும் அமோக வெற்றி பெறச் செய்து கிழக்குத் தமிழர்களின் இருப்பைக் காப்பாற்றுவோமாக என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here