தொழிலாளர் தேசிய சங்கத்தின் அடுத்த தலைவராக ஒரு தோட்டத் தொழிலாளரின் மகனே நியமிக்கப்படுவார். தொழிலாளர்களின் கஷ்டங்களை தெரியாது வளரும் எனது மகனை ஒருபோதும் தலைவராக்க மாட்டேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
வெலிஓயா மேல் பிரிவில் இன்று (4) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொழிலாளர் தேசிய சங்கம் தொழிலாளர்களால் கட்டியெழுப்பப்பட்ட ஒரு மாபெரும் தொழிற்சங்கமாகும். தோட்டங்களில் பிறந்து வளர்ந்தவர்கள்தான் இச்சங்கத்தில் முக்கிய பதவிகளில் உள்ளனர். இந்தத் தொழிற்சங்கத்தின் அடுத்தத் தலைவரும் ஒரு தொழிலாளியின் பிள்ளையே தெரிவாகுவார்.
நான் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவன். தோட்டத்திலிருந்துதான் இந்த இடத்திற்கு வந்தேன். எனக்கு தொழிலாளிகளின் கஸ்டங்கள் தெரியும். ஆனால் எனது மகனை ஒருபோதும் இந்த தொழிற்சங்க தலைவராக்க மாட்டேன். ஏனெனில் அவர் தொழிலாளர்களின் கஸ்டங்கள் தெரியாமல், கஸ்டப்படாமல் வளர்கிறார். அவரால் தொழிலாளர்களின் பிரச்சனையை புரிந்து கொள்ள முடியாது. சில கட்சிகளை போல நாம் செயற்பட மாட்டோம் என்றார்.
நுவரெலியா மாவட்டத்தில் ஐ.ம.சக்தியின் வேட்பாளர்கள் வே.இராதாகிருஷ்ணன், உதயகுமார் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.