தோண்டத் தோண்ட பூதமாகும் பூர்ணா மாப்பிள்ளை விவகாரம்!

மாப்பிள்ளையின் தாய் எனக்கூறி நடிகை பூர்ணா வீட்டுக்குச் சென்ற பெண், இந்த வழக்கில் கைதான ஒருவரின் மனைவி எனத் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் கொச்சி மரட் பகுதியில் வசித்துவரும் நடிகை பூர்ணா, மலையாள சினிமாவில் ஷம்னா காஸிம் என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகை பூர்ணாவின் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக ஒரு கும்பல் அவர் பெற்றோரை அணுகியுள்ளது. அந்தக் கும்பல் மாப்பிள்ளை என்று ஒரு புகைப்படத்தைக் காட்டி அவர் துபாய் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் நகைக்கடை வைத்துள்ளதாகக் கூறியது.

மேலும் ஐதராபாத்திலிருந்த நடிகை பூர்ணாவின் மொபைல் எண்ணுக்குத் தொடர்புகொண்டு அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் பேசியுள்ளார். அப்போது துபாயில் உள்ள பிசினஸுக்கு அவசரமாக பத்து லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகக் கேட்டுள்ளார். சந்தேகம் அடைந்த நடிகை பூர்ணா, அவரிடம் வீடியோ கால் செய்யும்படி கூறியுள்ளார். சுதாரித்துக்கொண்ட அந்த நபர் இணைப்பைத் துண்டித்ததுடன் மொபைலையும் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார்.

தொடர்ந்து அந்தக் கும்பல் பணம்கேட்டு பூர்ணாவின் குடும்பத்தினரை மிரட்டியுள்ளது. இதுகுறித்து பூர்ணாவின் தந்தை மரட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை நடத்தி முதற்கட்டமாக நான்கு பேரை கைது செய்தனர்.

அவர்களின் புகைப்படங்கள் மீடியாக்களில் வெளியானதைப் பார்த்த ஆலப்புழாவைச் சேர்ந்த மாடலிங் நடிகை ஒருவர் இவர்கள் தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும், தன்னை பாலக்காட்டுக்கு அழைத்து தங்கம் கடத்த எஸ்கார்டாக செல்லும்படி கூறினர். நான் மறுத்ததால் அவர்கள் என்னை தனி அறையில் எட்டு நாள்கள் அடைத்து வைத்தனர். இதுபற்றி ஏற்கெனவே காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி அந்தக் கும்பலைச் சேர்ந்த 10 பேரை கைது செய்துள்ளனர். அதில் நடிகை பூர்ணாவின் மொபைல் எண்ணை கொடுத்த மேக்கப் மேன் ஹாரிஸ் உள்ளிட்ட சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களும் உண்டு. மேலும், இது சம்பந்தமாக நடிகர் தர்மஜன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் மாப்பிள்ளையின் தாய் எனவும், சினிமா தயாரிப்பாளர் எனவும் அறிமுகப்படுத்திக்கொண்டு பூர்ணாவின் வீட்டுக்குச் சென்றவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், மாப்பிள்ளையின் புகைப்படம் என பூர்ணாவின் பெற்றோருக்கு அனுப்பிய புகைப்படத்தில் இருப்பவரிடமும் விசாரணை நடந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “நடிகை பூர்ணா வீட்டுக்கு சினிமா தயாரிப்பாளர் ஜோணி என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டு, கடந்த ஜூன் 20-ம் தேதி ஒருவர் சென்றுள்ளார். நடிகை பூர்ணா தன்னை வீட்டுக்கு வரச் சொன்னதாகவும் அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்மீது சந்தேகம் ஏற்பட்டதால் பூர்ணாவுக்கு போன் செய்து கேட்டுள்ளனர். அதற்கு, தான் யாரையும் வீட்டுக்கு வரும்படி அழைக்கவில்லை என பூர்ணா கூறியுள்ளார். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். சினிமா தயாரிப்பாளர் ஜோணி என்ற பெயரில் அங்கு சென்றது கோட்டயம் பகுதியில் சவுண்ட்ஸ் மற்றும் பந்தல் அமைப்பகம் வைத்திருக்கும் ராஜூ என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பூர்ணாவுக்குப் பார்த்த மாப்பிள்ளை என அந்தக் கும்பல் கொடுத்த புகைப்படத்தில் இருப்பவர் டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டுவந்த காசர்கோடு பகுதியைச் சேர்ந்த யாசர் என்பது தெரியவந்தது. இதையடுத்து யாசரை கொச்சிக்கு அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கு இந்த மோசடி கும்பல் குறித்துத் தெரியவில்லை. கைது செய்யப்பட்டுள்ள ரபீக் என்பவர்தான் இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பூர்ணாவுக்கு அனுப்பி, இவரது பெயர் அன்வர் அலி எனக் கூறியுள்ளார். மணமகனின் தாய் எனக்கூறிக்கொண்டு பூர்ணா வீட்டுக்குச் சென்ற பெண் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்தப் பெண் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஒருவரின் மனைவி எனத் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்த உள்ளோம்” என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here