கேலிக்கூத்தான தேர்தல்களில் பெருமளவானவர்கள் தெரிவானார்கள்: சிறிதரனின் கருத்தை ஆதரிக்கிறார் சுமந்திரன்!

யுத்தம் முடிந்த பின்னரே தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளை சுதந்திரமாக தெரிவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்து, சிறிதரனின் கருத்தை பாதுகாக்க முனைந்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.

முன்னைய காலத்தில் (விடுதலைப் புலிகளின் காலத்தில் நடந்த தேர்தல்களும்) நடந்த கேலிக்கூத்தான தேர்தலில் தமழர்களின் பிரதிநிதிகள் என்று சிலர் தெரிவு செய்யப்பட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் நடந்தது. இதில் கருத்து தெரிவிக்கும்போதே இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இதுவரை ஒரேவிதமாகவே இருந்துள்ளது. அதில் மாற்று செய்திகளிற்கு இடமிருக்கவில்லை. 1956ஆம் ஆண்டிலிருந்து வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் ஆகக்குறைந்தது ஒரு சமஷ்டி தீர்விற்காவாவது வாக்களித்து வந்துள்ளார்கள். இது ஒரு நீண்டகால ஜனநாயக தீர்ப்பு. எந்த சலனமும் இடையில் ஏற்படவில்லை.

ஒருவர், இருவர் வெறு கட்சிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் ஒட்டுமொத்தமாக யாருக்கு ஆணை கொடுத்துள்ளனர் என பார்த்தால், 1956ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை அசையாத ஒரேவிதமான ஆணைதான் கொடுக்கப்பட்டுள்ளது. சமஷ்டி என்பதுதான் அந்த ஆணை. 1977ஆம் ஆண்டு தேர்தலில் தனிநாட்டுக்கான ஆணையையும் வழங்கினார்கள்.

அப்படி நாங்கள் ஒரே நிலைப்பாட்டில் இருந்தபோதும், இடையில் யுத்தகாலத்தில் அது குழப்பப்பட்டுள்ளது. மக்களின் பிரதிநிதிகள் இல்லாமல் நாடாளுமன்றம் இருந்துள்ளது. அல்லது கேலிக்கூத்தான தேர்தல்கள் மூலமாக ஏராளமானவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் இன்று யுத்தம் முடிந்துள்ள நிலையில், மக்கள் வாக்களித்து தமது பிரதிநிதிகளை தெரிவுசெய்யலாம் என்ற நிலைமையில், நாங்கள் எங்கள் அந்த ஒரே நிலைப்பாட்டை திரும்பவும் திரும்பவும் தெரியப்படுத்துவது அத்தியாவசியமானது என்றார்.

அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி, சிறிதரன், 2004 தேர்தலில் தான் 75 கள்ள வாக்கிட்டதாக தெரிவித்தார். அதே கருத்தை வலுப்படுத்தும் விதமாக எம்.ஏ.சுமந்திரனும் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். தமது அரசியல் எதிராளிகளான “விடுதலைப்புலிகள் அரசியல்“ செய்வதாக கூறப்படும்- தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகிய- அரசியல்வாதிகளை கொச்சைப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இந்தவிதமாக பிரச்சாரங்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு காலகட்டத்தில் உருவாக்க முனைந்த ஜனநாயக கட்டமைப்புக்களை கீழ்மைப்படுத்தும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here