எம்சிசி உடன்படிக்கை ஆனது இலங்கைக்கு பொருத்தமானது. அதில் கையொப்பம் இட முடியும். இதனால் இலங்கையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள முடியும் என்று ஜன செத்த பெரமுன கட்சியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் ஸ்ரீ ஜீன ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இன்று எமது நாட்டில் படித்த இளைஞர் யுவதிகள் மருத்துவ கல்விக்காக பணங்களை செலவழித்து வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ கற்கையை மேற்கொள்கின்றார்கள். ஆனால் அவர்கள் மீண்டும் எமது நாட்டிற்கு வருகை தந்து சேவையை வழங்குவது இல்லை. இதனால் தனியார் மருத்துவ பீடங்களை இங்கே உருவாக்க வேண்டும். இதன் மூலம் வெளிநாடுகளில் கல்வி கற்கின்ற எமது நாட்டை சேர்ந்தவர்களை திருப்பி அழைத்து வெளிநாட்டுக்கு செல்கின்ற எமது மாணவர்களுக்கும் எமது நாட்டிலே மருத்துவக் அட்டை வழங்க முடியும் இதன் மூலம் அவர்கள் எமது நாட்டிலே சேவை செய்யக்கூடிய ஒரு வாய்ப்பினை ஏற்படுத்த முடியும்.
அதேபோன்று வன்னி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கணவனை இழந்த பெண் தலைமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்த யுவதிகளுக்கு தொழில் சம்பந்தமான பயிற்சிகளை வழங்கி சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கான வசதிகளை மேற்கொள்ள வேண்டும். அதனை எம்மால் இந்த வன்னி மாவட்டத்தில் மேற்கொள்ள முடியும் என்பதையும் தெரிவித்து கொள்கின்றேன்.
மேலும் படித்த இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை எம்மால் பெற்றுக்கொடுக்க முடியும். தற்போது சர்ச்சையில் உள்ள எம்சிசி உடன்படிக்கையானது பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. அந்த வகையில் அந்த உடன்படிக்கையில் காணி தொடர்பான விடயங்களை நீக்கி ஏனைய போக்குவரத்து தொடர்பான விடயங்களை உள்ளடக்கியதாக இந்த உடன்படிக்கையை முன்னெடுக்க முடியும்.
எனவே இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதன் மூலம் எமது நாட்டிலே பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள முடியும்.
அதேபோன்று இந்த வன்னி மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம். எனவே வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று நாங்கள் பாராளுமன்றம் செல்லுவோமானால் இந்த வன்னி மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தி மாற்றத்தை ஏற்படுத்துவோம். என தேரர் தெரிவித்தார்