கரையான் என திட்டினாரா?: ஆனோல்ட் தரப்பு கொந்தளிப்பு!

“அவன் ….. இடம் காசு வாங்கி இந்த திட்டத்தை செய்யப் போகிறீர்களா?… நான் காசு தர மாட்டேனா?“

இவ்வாறு இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர் ஒருவர் இவ்வாறு பிரதேச மக்களிடம், சாதியை குறிப்பிட்டு தன்னை இழிவுபடுத்தியதாக, இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் இ.ஆர்னோல்ட் தரப்பு கொதிப்படைந்துள்ளது.

இதற்கான ஒலி ஆதாரம் தம்மிடமுள்ளதாகவும், விரைவில் அதை வெளியிடவுள்ளதாகவும் ஆனோல்ட் தரப்பிலிருந்து அறிய முடிகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் உள்ள ஆகப்பெரிய சிக்கல் விருப்பு வாக்கு முறை. இந்த முறைமையினால், சொந்தக்கட்சிக்குள்ளேயே வெட்டுக்குத்துக்கள் தலைவிரித்தாடி வருகிறது. ஒரு காலமும் இல்லாத விதமாக, இந்த முறை இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது.

இந்த மோதலால் அரச தரப்பு கட்சிகள் மிக சாவகாசமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றன. தென்னிலங்கை கட்சிகளிற்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதால் என்ன ஆபத்து என்பதை மக்களிற்கு யாரும் புரிய வைக்கவில்லை. கட்சிக்குள் மோதல், அதை தவிர்த்தால், தமிழ் தேசிய கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்குள்ளேயே மோதல் உள்ளது.

இந்த மல்லுக்கட்டலில் தென்னிலங்கை கட்சிகள் அடித்தாடிக் கொண்டிருக்கின்றன.

இந்த மல்லுக்கட்டலுடன் தொடர்புடைய ஒரு சம்பவம் இது-

யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தனித்தும், மாவை சேனாதிராசாவுடனும் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்த கதையாக, எம்.ஏ.சுமந்திரனுடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தவிர்த்துள்ளார்.

பகிங்க வெளியில் எம்.ஏ.சுமந்திரனை விமர்சிப்பதை போல தோற்றத்தை காண்பிப்பது, இரவில் இரகசியமாக எம்.ஏ.சுமந்திரனின் வீட்டிற்கு சென்று அவரை சமாளிக்க முனைவதென இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ஆனோல்ட்.

விடுதலைப் புலிகள் தொடர்பான சுமந்திரனின் கருத்தை தொடர்ந்து, ஆனோல்ட்டும் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். எனினும், ஓரிரு நாளில் எம்.ஏ.சுமந்திரனின் வீட்டுக்கு சென்று அதற்கு மன்னிப்பு கோரினார். அறிக்கை வெளியிட்டதற்கான காரணங்களையும் கூறியே மன்னிப்பு கோரியிருந்தார். அது பற்றி பின்னர் விரிவாக தெரிவிக்கிறோம்.

அண்மையில் ஆனோல்ட் யாழ் தேர்தல் மாவட்டத்தின் ஒரு பகுதிக்கு சென்றிருந்தார். இதன்போது, குடிநீர் கிணறு ஒன்றை அமைப்பதற்காக 60,000 ரூபா பணம் வழங்கியிருந்தார்.

ஆனால், சிறிது நாளிலேயே அந்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் ஆனோல்ட்டை சந்தித்து, அந்த பணத்தை மீள வழங்கி விட்டார். இதற்கான காரணத்தை அவர் சொல்லவில்லை. பணம் திரும்பி வந்ததால், ஆனோல்ட் தரப்பு பயங்கர அப்செட்.

பணம் திரும்பி வந்த விடயத்தை அறிந்ததும், தமிழ் பக்கம் ஆனோல்ட் தரப்பு முக்கியஸ்தர்கள் சிலருடன் பேசினோம். அவர்கள் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டனர்.

தமிழ் அரசு கட்சியின் இன்னொரு வேட்பாளர், குறிப்பிட்ட பகுதி பொதுஅமைப்புக்களுடன் பேசியதாகவும், ஆனோல்ட்டின் சாதியை குறிப்பிட்டு பேசி, அவரிடம் பணம் வாங்கி குழாய்க்கிணறு அமைக்கப் போகிறீர்களா என கேட்டதாகவும், அந்த பிரமுகரின் அதிருப்தியையடுத்து பிரதேச அமைப்பு பணத்தை மீள தந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

அந்த பிரமுகர் கேட்டதாக ஆனொல்ட் தரப்பிலிருந்து குறிப்பிடப்பட்ட வசனமே, இந்த பகுதியின் ஆரம்பத்தில் உள்ளது.

அடுத்து வரும் நாட்களில் ஆனோல்ட் தரப்பு அடித்து ஆடும் என தெரிகிறது. தேர்தல் வருவதால் சக வேட்பாளர்களை விழுத்துவதும் வேட்பாளர்களின் தலையாய பணியாக உள்ளது. அப்படி ஆனோல்ட் தரப்பு கையிலெடுத்த விவகாரமா? அல்லது உண்மையிலேயே அப்படி நடந்ததா என்பதை முறையான ஆய்வின் மூலமே கண்டறியலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here