வீடு இன்று புற்றெடுத்து விச நாகங்களின் கூடாரம்; மாவை வெடிகுண்டு: அருந்தவபாலன்!

தமிழரசுக் கட்சியின் வீடு இன்று புற்றெடுத்து விச நாகங்கள் சூழ்ந்து எல்லாமே அழிந்து போகின்ற நிலையில் ஏனையவர்களை வீட்டுக்குள் கூப்பிடுவது நகைச்சுவையானது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்களை மீள இணைப்பது தொடர்பாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வெளியிட்ட கருத்துக்கு தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே க.அருத்தவபாலன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அருந்தவபாலன் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் காலத்தில் பல ஏமாற்றுக் கதைகளை கூறுவது தெரியும். ஒரு வகையில் அந்த வீட்டுக்குள் அவர்களுடன் நெருக்கமாக பழகியவன் என்ற அடிப்படையில் எனக்கு கூடுதலாகவே தெரியும்.

எனவே இது கூட ஒரு தேர்தல்கால குண்டுதான். அடிக்கடி திரு மாவை சேனாதிராஜா குண்டுகள் போடுவார். அந்த வகையாக ஒரு தேர்தல் குண்டாகவே இதனை கருதுகின்றோம்.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொதுவாக மக்கள் வெறுக்க தொடங்கியிருக்கின்றார்கள். அதற்கு ஆதரவளித்த மக்கள் பெரும்பாலும் அதிலிருந்து வெளியேறி மாற்று அணியாக நீதியரசன் விக்னேஸ்வரன் அணியை தெரிவு செய்து எங்களுக்கு ஆதரவை தந்து ஆதரவு பெருகிக்கொண்டிருக்கின்றது.

இந்த ஒரு வேளையில் சென்றவர்களை மீழ இணைப்போம் என்று சொல்வதையெல்லாம் அதாவது அவர்களுடைய அந்த வீடு என்பது இன்று புத்தெடுத்து விச நாகங்கள் சூழ்ந்து எல்லாமே அழிந்து போகின்ற ஒரு நிலையில் ஏனையவர்களை அந்த வீட்டுக்கு கூப்பிடுவதென்பது மிகவும் நகைச்சுவையான ஒன்று.

இந்த தேர்தலுடன் அவர்கள் மக்களுடைய அரசியலில் இருந்து அகற்றப்படுவார்கள் என நாங்கள் கருதுகின்றோம் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here