கருணா ஆனையிறவு, கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான இராணுவத்தை கொன்றாரா?: உண்மை என்ன?

“கொரோனாவை விட கொடியவன் என்பது உண்மைதான். கொரோனாவினால் 9 பேர்தான் உயிரிழந்தனர். ஆனால் நாம் ஆனையிறவில் ஒரேயிரவில் 2000, 3000 இராணுவத்தினரை கொன்றோம். அதுபோல கிளிநொச்சியில், ஜெயசிக்குறுவில் ஆயிரமாயிரம் இராணுவத்தினரை கொன்றோம்“ என கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்த கருத்து சர்ச்சையாகியுள்ளது.

கருணாவின் கருத்து அரசையும் சங்கடப்படுத்த, அவர் இப்பொழுது சிஐடி விசாரணையை எதிர்கொள்கிறார்.

அவர் தீவிரமான சட்ட நடவடிக்கை எதற்கும் உட்படுவாரா என்பதற்கு வாய்ப்புக்கள் குறைவு. அரசியல் ரீதியாக நெருக்கடியான நிலைமையை உருவாக்கலாம். அதனால் கருணா சில நெருக்கடிகளை சந்திக்கலாம். எனினும், தீவிரமான சிக்கல்கள் எதையும் அவர் சந்திக்க மாட்டார்.

அது ஏன்?

அதற்கு முன்பாக, கருணா நேற்று சிஐடியில் சாட்சியமளித்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்த ஒரு கருத்து கவனிக்கத்தக்கது. “தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய விடயத்தை பெரிதாக்குகிறார்கள்“ என கூறியிருந்தார்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக பேசுவதெல்லாம் உண்மையாகி விடாது என்பதே யதார்த்தம். அதைத்தான் அம்மான் சூசகமாக ஊடகங்களின் முன்பாக சொல்லியுள்ளார்.

அதற்கு முன்னர், சிஐடியிடம் வாக்குமூலம் வழங்கும்போது தெளிவாகவே சொல்லியிருப்பார்- அது எல்லாம் தேர்தல் பிரச்சாரத்திற்காக சொன்னது. நான் அந்த இரண்டு சண்டைக்கும் போகவேயில்லை“ என.

அதுதான் உண்மை.

அதிலும், அம்மான் உரிமைகோரியுள்ள ஆனையிறவு சமர் நடந்தபோது, அங்கு நடந்த செல் சத்தம் கூட கேட்காத தொலைவில், முகாமில் அவர் ஓய்வாக இருந்தார் என்பதே உண்மைஃ

ஆனையிறவு சமர்

ஆனையிறவு சமர் குறித்து அதிகம் விளக்க வேண்டியதில்லை. அனேக நெட்டிசன்கள், கொஞ்சம் தகவல் பிழைகளுடனானவது அதை அறிந்த வைத்திருப்பார்கள்.

ஓயாத அலைகள் 3 படை நடவடிக்கையின் ஆனையிறவு நோக்கிய தாக்குதல்களை 1999 டிசம்பர் 11ஆம் திகதி புலிகள் ஆரம்பித்து, பின்னர் சிறிய இடைவெளி விட்டு, 2000 மார்ச் 16 இல் ஆரம்பித்தனர்.

அதற்கு முன்னதாக, நவம்பர் 1ஆம் திகதி ஒட்டுசுட்டானில் ஓயாத அலைகள் 3 ஆரம்பித்தது.

ஓயாத அலைகள் 3 நடவடிக்கையிலும் கருணா பங்குகொள்ளவில்லை. தீபன், சொர்ணம், பால்ராஜ் தலைமையில் வேறு பல இளநிலை தளபதிகளுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இன்னும் தெளிவாக சொன்னால், கருணா வன்னியில் தங்கியிருந்த போதும், விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முக்கிய வலிந்த தாக்குதல்கள் எதிலும் கருணா கட்டளை தளபதியாக செயற்பட்டிருக்கவில்லை. அதற்கு காரணம்- கருணாவின் வலிந்த தாக்குதல் வரலாற்றில் சாதகமான பெறுபேறுகள் குறைவாக கிடைத்தமையே.

கிழக்கில் புளுகுணாவ, வவுணதீவு உள்ளிட்ட பல முகாம்கள் மீதான தாக்குதல்களை கருணா வழிநடத்தினார். அந்த தாக்குதல்களில் இராணுவத்தினரின் உயிரிழப்பிற்கு நிகரான உயிரிழப்பு புலிகளிலும் ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் படையணிகளிலேயே ஓர்மமான போரிடும் படையணியாக கிழக்கு படையணியே இருந்தது. போர் முனைகளில் அவர்களின் ஓர்மமே புலிகளிற்கு சாதகமாக அமைந்தது. மாறாக, தந்திரோபாயங்கள் அல்ல. இதுதான் கருணாவின் பலமும், பலவீனமும்.

ஒரு சமயத்தில், சமர்களிற்கெல்லாம் தாய்ச்சமர் என பிரபாகரன் விதந்தோதிய ஜெயசிக்குறு முறியடிப்பு சமரை கருணா வழிநடத்தியிருந்தார். அதில் கருணாவின் பங்கு பெரியது. அதில் சந்தேகமில்லை. எதிர்த்தரப்பின் முறியடிப்பு சமர்களில், ஓர்மமும், ஆன்மபலமும் அவசியம். கிழக்கு படையணியுடன் முறியடிப்பு சமரில் கருணா புகழீட்டியதன் பின்னணி இதுதான்.

இந்த சாதக, பாதகத்தை சரியாக கணக்கிட்டிருந்ததால்தான் வன்னியில் வலிந்த தாக்குதல்களில் கருணா களமிறக்கப்படவில்லை.

ஆனையிறவு சமர் ஆரம்பித்தபோது, கருணா தலைமையிலான கிழக்கு படையணிகள் களமிறக்கப்பட்ட போதும், பின்னர் அவர்களும் களத்திலிருந்து அகற்றப்பட்டனர். புலிகள் அமைப்புடன் கருணாவிற்கு முறுகல் ஏற்பட்டு, 2004 இல் அவர் அமைப்பை விட்டு பிரிந்தார் என்பது வரலாறு.

ஆனால், 1999 ஆம் ஆண்டே அதன் முதல் நிகழ்வு இடம்பெற்றது.

ஆனையிறவு சமரில் கலந்து கொண்டிருந்த கிழக்கு படையணியினர் தாளையடி பகுதியில் சமர் நடந்த கட்டத்தில், பால்ராஜின் கட்டளையை ஏற்க மறுத்திருந்தனர். “அம்மான் கொமாண்ட் பண்ணினால் மாத்திரமே செய்வோம்“ என இளநிலை கட்டளை தளபதியொருவர் கறாராக கூறி, தனது அணியுடன் பேசாமல் இருந்து விட்டார். அதனால் சமரில் தேக்கம் வந்தது. பின்னர், வடக்கு போர் முனையிலிருந்து கிழக்கு அணியினர் அகற்றப்பட்டனர்.

கருணாவுடன் கிழக்கு அணியினர், கிழக்கிற்கே அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்போது, நடந்த சம்பவங்களை ஏற்கனவே தமிழ் பக்கத்தில் வெளியான இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன தொடரில் குறிப்பிட்டுள்ளோம். அப்பொழுது காரசாரமாக கண்டித்தே, கருணாவை அனுப்பி வைத்தார் பிரபாகரன்.

கிளிநொச்சி சமர்

கிளிநொச்சியை கைப்பற்ற புலிகள் 2 முறை மேற்கொண்ட நடவடிக்கையிலும் கருணா கலந்து கொள்ளவில்லை. கிழக்கு படையணி இதில் முக்கிய பங்காற்றியது. ஆனால், அவர் ஜெயசிக்குறு தடுப்பரணையே கவனித்தார்.

நாவிதன்வெளியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில், நாங்கள் கொன்றோம் என்றே கருணா குறிப்பிட்டிருந்தார். இதில் நாங்கள் என்பது, புலிகளையே குறிக்கும். ஆகவே, கருணாவும் பொய் சொன்னார் என கொள்ள முடியாது. அது அரச தரப்பிற்கும் தெரிந்திருக்கும்.

இப்பொழுது சிக்கல்- அந்த விடயத்தை அவர் பேசிய காலகட்டமே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here