முதல்வர் ஆனோல்ட்டின் பரிவாரங்கள் நீக்கம்: பிரதி முதல்வரின் வாய் தவறியதால் ‘அர்ச்சனை’!

யாழ் மாநகரசபையின் முதல்வர் ஆனோல்ட்டின் பரிவாரங்களை நீக்க யாழ் மாநகரசபை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஆனோல்ட்டின் பரிவாரங்களை நீக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக 17 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

யாழ் மாநகரசபையின் முதல்வர் ஆனோல்ட், தனது பணியாளர்களாக 6 பேரை நியமித்து வைத்திருந்தார். அவர்களின் நடவடிக்கை குறித்து ஏற்கனவே பல தரப்பினரால் விமர்சனம் வைக்கப்பட்டிருந்தது. பிரதி முதல்வர் உள்ளிட்ட ஏனைய மாநகரசபை பிரமுகர்கள், நிர்வாக அதிகாரிகளை, முதல்வர் பாணியில் அவர்களே இயக்கி வந்தனர்.

இதில் இருவர் மாநகரசபைக்கே வராமல் சம்பளம் பெற்று வந்தனர்.

முதல்வராக ஆனோல்ட் நியமிக்கப்பட்டபோது, தனக்கு உதவியாளர்களாக 6 பேரை நியமிக்க கோரினார். அந்த நியமனத்தை மாநகரசபை பணியாளர்களிற்கு வழங்குமாறு மாநகரசபை உறுப்பினர்கள் கோரியபோது, ஆனொல்ட் அதை நிராகரித்திருந்தார். மாநகரசபை பணியாளர்களின் கல்வித்தகுதி போதாது என காரணம் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் ஆனொல்ட் களமிறங்கியபோது, அவர் விடுமுறை பெற்றிருந்தார். இதன்போது, தான் மீண்டும் கடமையேற்கும் வரை 3 பேரை விடுப்பில் அனுப்பியிருந்தார். எஞ்சிய மூவரும் சம்பளம் பெற்று வந்தனர்.

அதனை சுட்டிக்காட்டி, அவர்களையும் விடுப்பில் அனுப்ப இன்று யாழ் மாநகரசபையில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்போது, யாழ் மாநகரசபை பிரதி முதல்வர் வாய் தடுமாறி, வாக்கெடுப்பிற்கு விடுவதாக அறிவித்தார்.

யாழ் மாநகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பெரும்பான்மையில்லாத நிலையில், அமர்வுகளில் ஆனோல்ட் வாக்கெடுப்பை அனுமதிப்பதில்லை. எனினும், இன்று ஈசன் தவறுதலாக வாக்கெடுப்பை அறிவித்தார்.

இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, பிரதி முதல்வரை கரித்துக் கொட்டினர். இதனால் நிலைகுலைந்த பிரதி முதல்வர், தான் வாக்கெடுப்பை இரத்து செய்வதாக அறிவித்தார்.

எனினும், மாநகரசபை செயலாளர் அதை நிராகரித்தார். ஏற்கனவே அறிவித்தபடி, வாக்கெடுப்பை நடத்த அறிவுறுத்தினார்.

வாக்கெடுப்பிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 15 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி, சுதந்திரக்கட்சியின் 17 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

ஐ.தே.கவின் 3 உறுப்பினர்கள், ஈ.பி.டி.பியின் ரீகன் ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தனர்.

வாக்கெடுப்பு முடிந்த கணத்தில் அதன் முடிவை அறிந்த முதல்வர் ஆனோல்ட், பிரதி முதல்வரை தொலைபேசியில் அழைத்து, வாக்கெடுப்பிற்கு அனுமதித்தமைக்கு கடுமையான அர்ச்சனை செய்தார்.

இதேவேளை, யாழ் மாநகரசபையின் சட்டத்தரணி ஸ்ரனிஸ்லஸ் தற்போது தேர்தலில் போட்டியிடுவதற்காக விடுமுறையில் உள்ளார். அவர் முகப்புத்தகத்தில் மாநகரசபை மற்றும் அதன் உறுப்பினர்களை விமர்சித்து எழுதி வருகிறார். இதனால் அவரை மீள மாநகரசபை சட்டத்தரணியாக இணைப்பதில்லையென முடிவானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here