மண்டூர் மகேந்திரன்: தமிழ் அரசு கட்சியின் கொடியும்…கைவிடப்படும் வரலாற்று துயரமும்!

தமிழ் தேசிய அரசியலில் உண்மையாகவும், அர்ப்பணிப்பாகவும் இருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பொருளாதார நிலையில் நன்றாக இருந்ததில்லை.

கல்வி, வேலை எதையும் பொருட்படுத்தாமல் இன உணர்வுடன் தீவிரமாக செயற்படும் பெரும்பாலானவர்கள் பொருளாதாரத்தில் ஸ்திரமாவதில்லையென்பது எவ்வளவு உண்மையோ, அதைவிட துலக்கமான உண்மை- அவர்கள் அர்ப்பணித்த, நம்பிய அமைப்புக்கள் அவர்களை ஒரு கட்டத்தில் கைவிட்டு விடுவார்கள் என்பது.

தமிழ் தேசிய அரசியலின் வரலாறு முழுவதும் இந்த கசப்பான உண்மை நீடிக்கிறது.

தமிழ் மிதவாத செயற்பாட்டு காலம் தொடக்கம், பின்னாளில் ஆயுதப் போராட்ட காலம் வரை அந்த துயர நிலைமை நீடித்தது.

இதில் விதிவிலக்காக இருந்தது இரண்டு தரப்பு. ஒன்று- புலிகள். அதை பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அடுத்தது- பெரும்பாலானவர்களிற்கு கசப்பாக இருக்கும். ஆனால் உண்மைக்கு முகம் ஒன்று மாத்திரமேயல்லவா.இரண்டாவது தரப்பு – ஈ.பி.டி.பி!

விடுதலைப் புலிகள்தான் இதில் முன்னிலையில் இருந்தார்கள். தமது அமைப்பிலிருந்து மரணமடைந்தவர்களின் பெற்றோருக்கு வாழ்வாதார உதவி கிடைக்க முறையான பொறிமுறை அவர்களிடமிருந்தது.

பலிகள் அளவிற்கு இல்லையென்றாலும், ஓரளவிற்கு ஈ.பி.டி.பியும் தமது அமைப்பை நம்பி வந்தவர்களையும், தன்னை நம்பி ஈ.பி.ஆர்.எல்.எவ் இற்கு வந்தவர்களை டக்ளசும் பராமரித்தனர்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு இன்று பல பிரிவுகளாக இயங்குகிறது. இந்தியாவின் தாளத்திற்கு ஆடி, போராளிகளை நடுத்தெருவில் விட்டுவிட்டு, எல்லா ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர்களும் வசதியான வாழ்க்கையை அமைத்து விட்டனர். இன்று தமிழ் தேசிய கட்சிகளிற்கு நாளாந்தம் வகுப்பு எடுக்கும் வரதராஜ பெருமாளுக்கு, தனது கட்சியிலிருந்து எத்தனை பேர் இறந்தார்கள், எஞ்சியவர்கள் வாழ்க்கைக்கு என்ன செய்தார்கள் என்பது எதுவும் தெரியாது.

இந்தியாவிலும் இல்லாமல், இலங்கையிலுமில்லாமல் இரண்டு கரைகளிலும் நடுத்தெருவில் அந்த போராளிகள் கைவிடப்பட்டதே, அவர்களில் பெரும்பாலானவர்கள் பின்னர் அரச தரப்புடன் இணைய காரணமாகியது.

அரசியல் விமர்சனங்களிற்கு அப்பால்- கைவிடப்பட்ட போராளிகளை ஒன்று திரட்டியது, இறந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் குடும்பங்களின் வாழ்வாதார தேவைகளை ஓரளவாவது கவனித்ததில் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கு குறிப்பிடப்டியது.

அரசியல் நிலைப்பாடுகள், கொள்கைகளிற்கு அப்பால்- மனிதர்களிற்கு வயிறு என்றும் ஒன்று உள்ளதல்வா.

இந்த நீண்ட ஆலாபணை, மண்டூர் மகேந்திரனின் இறுதிச்சடங்கு மற்றும் அவரிற்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை கண்டதால் எழுத வேண்டியதாகி விட்டது.

தமிழர் விடுதலை கூட்டணி, இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கிய- அர்ப்பணிப்பான- தன்னலமற்ற செயற்பாட்டாளர் என எல்லா மூத்த தலைவர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். ஆனால், இறுதிச்சடங்கில், அவரது உடலுக்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் கொடியை போர்த்த குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை.

இது அரசியல் நிலைப்பாட்டால் நடந்த சம்பவமல்ல. விரக்தியால் நடந்த சம்பவம்.

தமிழ் தேசிய உணர்வென்பது பெரும்பாலானவர்களின் இதயத்திலிருந்து எழுவது. அந்த உணர்வை பகடைக்காயாக வைத்து, தொண்டர்களின் அர்ப்பணிப்பில் வாழும் சுயநலமுள்ள தலைவர்களினால் இப்படியான விரக்திகள் உருவாகிறது.

மண்டூர் மகேந்திரன்

கடந்த 19ஆம் திகதி மண்டூர் மகேந்திரன் காலமானார். 1960களின் பிற்பகுதிகளிலிருந்த தமிழ் தேசிய உணர்வுடன் உண்மையாகவும்- அர்ப்பணிப்பாகவும் செயற்பட்ட உன்னதமான ஒரு மனிதன் அவர்.

ஆரம்பத்தில் மாணவர் பேரவையில் சேர்ந்தியங்கினார். பின்னர், இளைஞர் பேரவையில் இயங்கினார். பின்னர் தமிழர் விடுதலை கூட்டணி, இலங்கை தமிழ் அரசு கட்சியென அவரது செயற்பாடு இறுதிவரை தொடர்ந்தது.

மே 22 1972ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்த போது, தமிழ் தலைவர்கள் எதிர்த்தார்கள். மே 22 என மண்டூர் மகேந்திரன் ஒரு நூல் வெளியிட்டார். இதனால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். இந்தக்காலப்பகுதியில் மாவை சேனாதிராசாவும் அந்த சிறையில் இருந்தார். இதனால் இருவரும் நல்ல நண்பர்களாக இறுதிவரை இருந்தனர்.

மகேந்திரனின் மரணச்செய்தி கேட்டதும், உடனே மட்டக்களப்பிற்கு சென்று இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார் மாவை.

சுதந்திரன் பத்திரிகை இயங்கியபோது, அமிர்தலிங்கத்தின் தங்குமிடத்திலேயே வசித்தபடி மகேந்திரன் அந்த பத்திரிகையில் பணிபரிந்தார்.

மூத்த தலைவர்கள் எல்லோருடனும் நெருக்கமாக பழகிய மகேந்திரன், கட்சியின் புதுவரவுகளால் ஒதுக்கப்பட்டிருந்தார். புது வரவுகள் பலரிற்கு மகேந்திரன் வகையானவர்களை தெரிந்தேயிருக்கவில்லை.

60 வருடங்களிற்கு மேலாக தமிழ் உணர்வுடன் செயற்பட்ட ஒரு மனிதனின் இறுதிக்காலம் எப்படியிருந்திருக்குமென யோசிக்க மனது கனக்கிறது.

அவர் நம்பிய இயக்கத்தின் கொடியை, அவரது உடலில் போர்த்த குடும்பத்தினர் விரும்பவில்லையென்பது- அவரது துயரத்தை சேர்ந்து அனுபவித்தவர்களின் பிரதிபலிப்பென்பதை விட வேறு எப்படி சொல்வது?

இன்றுள்ள தமிழ் தேசிய கூட்மைப்பின் எம்.பிக்களை புகழவும், துதிபாடவும் பலருள்ளனர். யார் அதிகம் துதிபாடுகிறார்கள் என்ற போட்டியில் வெல்பவர்கள், எம்.பியின் மூலம் அரச வேலைவாய்ப்பை பெற்றுக்கொண்டு சென்று விடுகிறார்கள். ஆனால் தமிழ் தேசிய உணர்வென்பது எம்.பியை புகழ்வதல்ல என்ற உண்மையை தெரிந்த மகேந்திரன் வகையானவர்கள், தனிப்பட்ட ஆதாயங்கள் எதையும் பெற்றுக்கொள்வதில்லை.

போராட்டமும், சிறைச்சாலையுமாக இளமையை கழித்த மகேந்திரனின் தனிப்பட்ட வாழ்க்கையில் பொருளாதாரம் நன்றாக இருக்கவில்லை. சிறைக்கொட்டடியில் இரத்தமும் சதையுமாக வீசப்பட்டிருந்தேன் என அவர் வீரவசனம் பேசியபடி தேர்தலில் நின்றிருந்தால் வெற்றிபெற்றிருக்கவும் வாய்ப்பிருந்தது. ஆனால், அவர் உண்மையான செயற்பாட்டாளராக இருந்ததால் அந்த பாதையை தெரிவுசெய்யவில்லை.

அவருக்கு இரண்டு மகன்கள். வறுமையான தந்தையால் தமது பிள்ளைகளை எந்த நாட்டிற்கு அனுப்பி படிக்க வைக்க முடியும்? முடிந்த அளவில் உள்ளூரிலேயே படிக்க வைத்தார்.

இலங்கையல் வேலை வாய்ப்பை பெறுவது எவ்வளவு குதிரைக்கொம்பு என்பது எல்லோருக்கும் தெரியும். யாராவது தெரிந்த அரசியல் புள்ளியின் சிபாரிசும், பணமும் அவசியமென்றாகி விட்டது. வறுமை, பிள்ளைகளின் வேலைவாய்ப்பின்மை என வாழ்க்கை நெருக்கிய ஒரு கட்டத்தில், கிழக்கு மாகாணசபையின் அமைச்சராக இருந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கத்திடம் சென்றதாகவும், கிழக்கு மாகாணசபையில் ஒரு வேலைவாய்ப்பை மகனிற்கு பெற்றுத்தர அவர் கோரியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் நிர்வாகரீதியான காரணமொன்றை சுட்டிக்காட்டி அவர் அந்த கோரிக்கையை ஏற்கவில்லை.

பின்னர் மட்டக்களப்பு எம்.பியொருவரிடமும் இதேவிதமான கோரிக்கையை முன்வைத்ததாகவும், அவரும் கண்டுகொள்ளவில்லையென்றும் கூறப்படுகிறது. இந்த இரண்டு காரணத்தினால் மட்டும் அந்த குடும்பம் கோவிக்கவில்லை. நீண்ட புறக்கணிப்பின் வலியாக அது இருக்கலாம்.

இப்போது, அதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா தெரியவில்லை. அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பதும் முக்கியமல்ல. நம்மை ஆத்ம பரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது.

மண்டூர் மகேந்திரனின் இறுதித்தருணத்திலும், இறுதிச்சடங்கிலும் மகேந்திரனுக்கும், குடும்பத்திற்கும் துணையாக இருந்தவர் அருண் தம்பிமுத்து. அவர் முன்னர் சுதந்திரக்கட்சிக்காரர். இப்பொழுது கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கிறார். உதயசூரியன் சின்னத்தில் தற்போது தேர்தலில் போட்டியிடுகிறார்.

அருண் தம்பிமுத்து அவரை கவனித்துக் கொண்டதில் எந்த பிரச்சனையுமில்லை. தமிழ் தேசியவாதிகள் யாரும் அந்த பொறுப்பை ஏன் எடுக்கவில்லையென்பதே கேள்வி.

இது இலங்கை தமிழ் அரசுக்கட்சிக்கு மட்டும் உரிய கேள்வியல்ல. தமிழ் அரசு கட்சிக்கு எதிரானவர்கள் புளகாங்கிதப்பட முடியாது. ஏனெனில் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து தரப்பின் பலவீனமும் இது.

தமிழ் தேசிய உணர்வுடன் பயணித்த ஒருவரின் அந்திம காலத்தில்- அந்த உணர்வுடனேயே இறந்தவரை- கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கும் ஒருவர் பராமரிக்கிறார். அவர் இறந்த பின்னர், உடலில் கட்சிக் கொடியை போர்த்த செல்கிறோம்.

நமது வழிமுறைகள்தான் இதுவரை வெற்றியடையவில்லை. தமிழ் தேசிய அமைப்பின் பொறிமுறைகளிலும் குறைபாடுகளுள்ளதா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here