மலேசியாவிலிருந்து வந்த 45,000 பொதிகளில் முகவரி அழிந்தது!

மலேசியாவில் இருந்து கடல் மார்க்கமாக வந்த சுமார் 45,000 தபால் பொதிகளில் முகவரி தெளிவின்மையால் உரிமையாளர்களுக்கு விநியோகிக்க முடியாமல் இருக்கின்றது.

அதனால் இதுதொடர்பாக அந்த நாட்டுடன் கலந்துரையாடி முகவரிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மாறாக இதில் எந்த மோசடியும் இடம்பெறவில்லை என பிரதி தபால்மா அதிபர் துசித உலங்கமுவ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எமது நாட்டில் இருந்து ஒன்லைன் மூலம் கோரிக்கை விடுத்து மலேசியாவில் இருந்து கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்ட சிறியவகையான தபால் பொதிகள் சுமார் 50,000, சில தினங்களுக்கு முன்னர் எமக்கு வந்து சேர்ந்துள்ளன.

இந்த பொதிகள் விமானம் ஊடாக கொண்டு வருவதற்கே பொதி செய்யப்படிருந்தபோதும் விமான சேவைகள் இடம்பெறாதமையால் கடல் மார்க்கமாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

அத்துடன் 3 மாதத்துக்கும் அதிக காலம் குறித்த பொதிகள் தேங்கி இருந்தமையால் காலநிலை மாற்றம் போன்ற காரணத்தினால் அதில் பொறிக்கப்பட்டிருந்த முகவரி தெளிவில்லாமல் இருக்கின்றது. அந்த எழுத்துக்கள் குறிப்பிட்ட காலத்தில் அழியும் தன்மையுடையவை. அதனால் இவற்றை உரிமையாளர்களுக்கு விநியோகிக்க முடியாமல் இருக்கின்றது. என்றாலும் குறித்த பொதிகளின் பார்கோட் இலக்கங்களை பயன்படுத்தி உரிமையாளர்களின் முகவரியை பெற்றுத்தருமாறு மலேசிய தபால் சேவை திணைக்களத்திடம் கேட்டிருக்கின்றோம்.

மேலும் குறித்த தபால் பொதிகள் கொராேனா வைரஸ் ஆரம்பிக்க முன்னர் மலேசிய தபால் சேவைக்கு ஒப்படைத்திருக்கின்றன. என்றாலும் விமான சேவைகள் இடம்பெறாதமையால் ஒரு மாதத்துக்கும் அதிக காலத்துக்கு பின்னர் அவர்கள் கடல் மார்க்கமாக அவற்றை அனுப்பியுள்ளனர். மே மாதம் இறுதியில் இந்த தபால் பொதிகள் எமது தபால் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.

என்றாலும் 3 மாதத்துக்கும் அதிக காலம் தாமதித்து எமக்கு கிடைக்கும்போது பொதிகளில் அச்சிடப்பட்டிருக்கும் முகவரி வாசிக்க முடியாதளவுக்கு தெளிவில்லாமல் போயிருக்கின்றது. இதில் யாருக்கும் குற்றம் தெரிவிக்க முடியாது. அவர்களும் விமானம் மூலம் அனுப்பவே நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். என்றாலும் முடியாமல் போன நிலையிலே கடல் மார்க்கமாக அனுப்ப நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

விமானம் மூலம் வந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. எங்களுக்கு 3 நாட்களுக்குள் அவை கிடைத்திருக்கும். கடல் மார்க்கமாக அனுப்பும் பொருட்கள் எமக்கு கிடைப்பதற்கு ஒரு மாதத்துக்கும் அதிக காலம் எடுக்கின்றது. இருந்தபோதும் முகவரி தெரியும்வகையில் இருந்த 5 ஆயிரத்துக்கும் அதிக தபால் பொதிகளை உரிமையாளர்களுக்கு ஒப்படைத்திருக்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here