கோடீஸ்வரனால் அம்பாறையில் கூட்டமைப்பிற்குள் பெரும் பிளவு: மாவையின் கூட்டத்தையே புறக்கணித்தனர் வேட்பாளர்கள்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளர் க.கோடீஸ்வரனிற்கு கூட்டமைப்பிற்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாவட்டத்திலுள்ள வேட்பாளர்களில் பெரும்பாலானவர்களும் அவரை எதிர்க்கிறார்கள். இதனால் இம்முறை பொதுத்தேர்தலில் கோடீஸ்வரன் சிக்கலை சந்திப்பார் என கருதப்படுகிறது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) சார்பில் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர் கோடீஸ்வரன். அவரது சகோதரரான சந்திரகாந்தன் அப்போது தமிழ் அரசு கட்சி சார்பில் போட்டியிட்டார். இதன்போது, தமிழரசுக்கட்சி தரப்பிலிருந்து கோடீஸ்வரனை களமிறக்க வேண்டாமென அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. எனினும், அதனை பொருட்படுத்தாமல் செல்வம் அடைக்கலாதன் அவரை களமிறக்கினார்.

எனினும், அண்மையில் மாவை சேனாதிராசாவுடன் இரகசிய உடன்படிக்கை மேற்கொண்டு, தமிழ் அரசு கட்சி பக்கம் தாவினார். மாவை சேனாதிராசாவின் தேர்தல் பிரச்சார செலவில் ஒரு பகுதியை கோடீஸ்வரன் ஏற்றதாக அப்போது கட்சி வட்டாரத்திற்குள் பேசப்பட்டது.

இதுதவிர, கடந்த ஒக்ரோபர் அரசியல் குழப்பத்தில், அரச தரப்பிற்கு அவர் தாவ தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டத்திற்குள்ளும் ஒரு அச்சம் நிலவியிருந்தது.

பல்வேறு காரணங்களினால் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் அரசு கட்சிக்குள் கோடீஸ்வரன் மீதான அதிருப்தி அதிகரித்துள்ளது.

சில தினங்களின் முன்னர் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் அம்பாறைக்கு சென்றபோது, இதனை நேரில் உணர்ந்து கொண்டனர். அம்பாறை மாவட்ட வேட்பாளர்களுடனான சந்திப்பு கோடீஸ்வரன் வீட்டில் நடத்த திட்டமிடப்பட்டது. எனினும், கோடீஸ்வரன் வீட்டுக்கு வர மாட்டோம் என மாவட்டத்தின் 7 வேட்பாளர்கள் மறுத்து விட்டனர்.

பின்னர், சந்திப்பு இடம் – பொதுவான இடமொன்றிற்கு மாற்றப்பட்டது. அங்கும் பெரும்பாலானவர்கள் கலந்து கொள்ளவில்லை. 3 வேட்பாளர்களே கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களில் ஒருவர் ஆரம்பத்தில் மறுத்ததாகவும், கட்சி தலைமை வலியுறுத்தி கேட்டுக்கொண்டதால் கலந்து கொண்டதாகவும் தெரிய வருகிறது.

வேறு இரண்டு வேட்பாளர்கள் மண்டபத்திற்கு வந்திருந்தபோதும், கோடீஸ்வரன் கலந்து கொள்ளும் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என மாவை சேனாதிராசாவிடம் தெரிவித்து விட்டு, கூட்டம் ஆரம்பிக்க முன்னரே அங்கிருந்து வெளியேறி விட்டனர்.

மாவட்டத்திலுள்ள 10 வேட்பாளர்களில்- கோடீஸ்வரன் தவிர்ந்த 9 பேரில், ஒரேயொருவர்தான் கோடீஸ்வரன் தரப்புடன் இணைந்த செயற்படுகிறார்.

மாவட்டத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், இம்முறை இளம் வேட்பாளர் ஒருவர் அம்பாறையில் தெரிவாகலாமென கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here