கடந்தமுறை கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி தடுத்து விட்டார்; இம்முறை ஆட்சியமைத்தால் 1,500 ரூபா சம்பளம்: வடிவேல் சுரேஷ்

ஐக்கிய மக்கள் சக்தி பொதுத் தேர்தலை வெற்றி கொண்டு ஆட்சியமைத்தால், மூன்று மாதகாலத்திற்கு பின்னர் பெருந்தோட்டதுறை தொழிலாளர்களுக்கு 1500 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கோ , கட்சியின் ஏனைய உறுப்பினர்களுக்கோ தோட்ட உரிமையாளர்களுடன் எந்தவிதமான டீலும் இல்லை.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் அவர்கள் தொடர்பான ஏனைய விவகாரங்கள் தொடர்பில் இதுவரை காலமும் ஆட்சியிலிருந்த தலைமைத்துவங்கள் ஏமாற்றியே வந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இதேவேளை தங்களுக்கு எதிராக பல சேறுபூசல்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அதனால் தங்களது வெற்றிக்கு எந்தவித தடையும் ஏற்படுத்த முடியாது என்றும் வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் செறிவாக வாழும் மலையகப்பகுதிகளில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கே பெரும் ஆதரவு இருக்கின்றது. இதனை கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் போதும் அவதானிக்க முடிந்திருந்தது.

எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் அதை நாங்கள் உறுதிப்படுத்துவோம். மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரமதாசவின் காலத்திலேயே மலையக மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

இதற்கு நன்றித் தெரிவிக்கும் வகையில் மலையக மக்கள் அனைவரும் அவர்களது ஆதரவை சஜித் பிரேமதாசவுக்கே பெற்றுக் கொடுப்பார்கள். இந்நிலையில் இம்முறை தொலைப்பேசி சின்னத்தில் பொதுத் தேர்தலை போட்டியிட களமிறங்கியுள்ள தமிழ் மற்றும் முஸ்லீம் வேட்பாளர்களை அதிகளவில் பாராளுமன்றத்திற்கு மலையக வாழ் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் வாக்களிப்பார்கள்.

பெருந்தோட்டதுறையில் தமிழ் மக்கள் மாத்திரம் தொழில்புரிய வில்லை சிங்கள மக்களும் தொழில் புரிந்து வருகின்றனர். பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் உள்ளிட்ட எந்த உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பதற்கு இதற்கு முன்னர் ஆளும் தரப்பில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ , ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரிமசிங்கவோ முயற்சித்தது கிடையாது. ஒவ்வொரு முறையும் பெருந்தோட்டதுறையைச் சேர்ந்த மக்கள் ஏமாற்றப்பட்டே வந்துள்ளனர். தற்போது அவர்களது காணிகளும் அபகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மலையக மக்களின் பிரதிநி என்ற வகையில் அவர்களது உரிமைகளை வென்றெடுப்பதற்காக சிறைக்குச் செல்லக்கூட நான் தயாராகவே இருக்கின்றேன்.

சஜித்தின் தலைமையில் இனவாதத்திற்கு துணைபோகாத சிறந்த வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதேவேளை மலைகப்பிரதேசங்களில் எனது உறவினர்களே அதிகமாக வசித்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி எதிர்வரும் பொதுத் தேர்தலில் மலையக மக்களின் வாக்குகளை சிதறவிடாமல் தொலைபேசிக்கே அனைத்து வாக்குகளையும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். எம்மீது திட்டமிட்ட சேறுபூசல்கள் இடம்பெற்று வருகின்றன. ஆனால் அவற்றால் எமது வெற்றிக்கு இடையூறு விளைவிக்க முடியாது. நுவரெலியா, பதுளை, கண்டி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் எங்களது வெற்றி உறுதியானதே.

எமது பிரதம வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வெற்றிப் பெறச்செய்து, அவரது தலைமையில் ஆட்சியமைத்து மூன்று மாதகாலத்திற்கு பின்னர் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1500 ரூபாய் சம்பளத்தை பெற்றுக் கொடுப்போம். அதற்கான திட்டம் எங்களிடம் இருக்கின்றது. கடந்த அரசாங்கத்தில் இதனை நிறைவேற்ற முடியாமைக்கு பல இடையூறுகளே காரணம்.

ஆண்டவர் வரம் கொடுத்தாலும் பூசகர்கள் அதற்கு தடையாக இருப்பது போன்ற நிலைமையே கடந்த காலத்தில் காணப்பட்டது. ஆனால் சஜித் பிரமதாசவோ, அவரைச் சுற்றி இருப்பவர்களோ தோட்ட உரிமையாளர்களிடமோ, சம்பந்தப்பட்ட தரப்பினருடனோ டீல் செய்துக் கொண்டுள்ளவர்கள் அல்ல. அதனால் இது சாத்தியமாகும். எந்த முறையிலாவது நாங்கள் 1500 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுப்போம் என்பதை உறுதியளிக்கின்றேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here