நண்பனின் மனைவியோடு காதல்; கடத்தல் பணத்தில் தகராறு: பட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்பட்ட மீன் வியாபாரி!

கணேஷ்குமாருடன் சபரிதா

நண்பன் மனைவியுடன் ஏற்பட்ட நட்பு மற்றும் கடத்தல் பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு ஆகியவை காரணமாக மீன் வியாபாரி மீஞ்சூரில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (30). இவர் திருவொற்றியூரில் மீன் வியாபாரம் செய்துவந்தார். இவர் கடந்த 5 மாதங்களாக திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரத்தில் குடியிருந்து வந்தார். கணேஷ்குமாருடன் சபரிதா என்ற பெண்ணும் வசித்துவந்தார்.

இந்தநிலையில் நேற்று 4 பேர் கொண்ட கும்பல் கணேஷ்குமார் வீட்டுக்கு வந்தது. பின்னர் அவர்கள் கணேஷ்குமாருடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் கணேஷ்குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அந்தக் கும்பலிடம் சிக்காமல் சபரிதா உயிர் தப்பினார். பின்னர் கணேஷ்குமார் உயிரிழந்ததை உறுதிப்படுத்திவிட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

இதுகுறித்து மீஞ்சூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கணேஷ்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணைக்காக சபரிதாவை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

 

சபரிதா அளித்த தகவலின்படி போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். இதற்கிடையில் மீஞ்சூர் காவல்நிலையத்தில் பசுபதி என்பவர் தன்னுடைய கூட்டாளிகள் 2 பேருடன் கத்தி, அரிவாளுடன் சரண் அடைந்தார். அவர்களிடம் விசாரித்தபோது கணேஷ்குமார் கொலைக்கான காரணம் தெரியவந்தது.

சபரிதா

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கணேஷ்குமார் என்கிற சத்யாவின் நண்பர் பசுபதி. இவர்கள் இருவர் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் செங்குன்றத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை இந்தக் கும்பல் கடத்தி 6 லட்சம் ரூபாய் பறித்துள்ளது. கணேஷ்குமார், அடிக்கடி பசுபதி வீட்டுக்குச் சென்று வந்துள்ளார். அப்போது பசுபதியின் மனைவி சபரிதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பசுபதிக்கும் அவரின் மனைவி சபரிதாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கணவரைப் பிரிந்த சபரிதா மீஞ்சூர் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

இந்தநிலையில் வழக்கு ஒன்றில் கைதான பசுபதி, சிறைக்குச் சென்றுவிட்டார். அதன்பிறகு கணேஷ்குமார், சபரிதா இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இந்தத் தகவல் தெரிந்ததும் பசுபதி ஆத்திரமடைந்தார். சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்த பசுபதி தன்னுடைய கூட்டாளிகளுடன் கணேஷ்குமாரை கொலை செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தச் சமயத்தில் தொழிலதிபரைக் கடத்தி பணம் பறித்த வழக்கில் பசுபதிக்குரிய பங்கை கணேஷ்குமார் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் கணேஷ்குமாரிடம் பணம் கேட்டு பசுபதி மிரட்டிவந்துள்ளார்.

இந்தச் சமயத்தில் நேற்று மதியம் சபரிதா வீட்டுக்கு பசுபதி மற்றும் அவரின் கூட்டாளிகள் சென்றுள்ளனர். அங்கிருந்த கணேஷ்குமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சரண் அடைந்த பசுபதி மற்றும் அவரின் கூட்டாளிகள் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். இந்தக் கொலை வழக்கில் மேலும் ஒருவரைத் தேடிவருகிறோம். இந்த வழக்கு தொடர்பாக சபரிதா அளித்த தகவலை வாக்குமூலமாக பதிவு செய்துள்ளோம்” என்றனர்.

சபரிதா கூறுகையில், “என்னுடைய கணவர் பசுபதி எனக்கு போன் செய்து பேசினார். அப்போது உன்னைச் சந்திக்க வருகிறேன் என்று கூறினார். அதற்கு வீட்டில் கணேஷ்குமார் இருப்பதாகக் கூறினேன். அதனால் எனக்கும் பசுபதிக்கும் சண்டை ஏற்பட்டது” என்றார்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “கணேஷ்குமார் கொலை வழக்கில் பசுபதி, முத்து, மணிகண்டன் ஆகியோரை கைது செய்துள்ளோம். கொலை வழக்கில் சிறைக்குச் சென்ற பசுபதியை கணேஷ்குமார் ஜாமீனில் எடுத்துள்ளார். அப்போதுதான் சபரிதாவுக்கும் கணேஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் கணேஷ்குமாரை பசுபதி கும்பல் கொலை செய்துள்ளது” என்றார்.

பசுபதியுடன் சபரிதா

ஜெயலட்சுமி மீஞ்சூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது-

“எனக்கு மகன் உள்ளான். நான் கல்லூரியில் பி.எஸ்ஸி படித்திருக்கிறேன். எனக்கும் கணேஷ்குமார் என்கிற சத்தியாவுக்கும் 1.11.2013 இல் பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் திருமணம் நடந்தது. என் கணவருடன் பழகிய ஆட்கள் சரியில்லாத காரணத்தால் என் கணவரை கடந்த 24.1.2020 இல் செங்குன்றம் போலீஸார் ஆள்கடத்தல் மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். சிறையிலிருந்தபோது என் கணவருக்கு விஸ்வநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 24.3.2020 இல் கொரோனா நோய் வேகமாகப் பரவியதன் காரணமாக சிறையிலிருந்த என் கணவரை விடுதலை செய்தார்கள்.

அவருக்கு சிறையில் பழக்கமான விஸ்வநாதன் என்பவருடன் சேர்ந்து என் வீட்டுக்கு வந்து 2 நாள்கள் தங்கியிருந்தார். என் கணவர் ஜெயிலுக்கு செல்வதற்கு முன் கேசவபுரத்தில் சபரிதா என்ற பெண்ணுடன் பழகிவந்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு என்னை அவர் அடித்தார்.

மேலும், கடந்த 5.5.2020 இலிருந்து என் கணவர் என்னிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். பின் 15.6.2020 இல் காலை 9.15 மணிக்கு என் கணவரின் நண்பனான விஸ்வநாதன் எனக்கு போன் செய்து மீஞ்சூர் கேசவபுரத்தில் சபரிதாவுடன் தங்கியிருந்த என் கணவரை சபரிதாவின் கணவர் பசுபதியும் அவரின் கூட்டாளிகளான எழில்முத்து மற்றும் மணிகண்டன் ஆகியோர் பைக்கில் வந்து கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டதாகக் கூறினர்.

உடனே நான் கேசவபுரத்துக்கு வந்து பார்த்தபோது என் கணவரின் தலை, முகம், இடது கை மணிக்கட்டு மற்றும் கழுத்து ஆகிய இடங்களில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த போலீஸார் என் கணவரின் சடலத்தைக் கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனவே, என் கணவரை கொலை செய்தவர்களின் மீது நடவடிக்கை எடுத்து என் கணவரின் சடலத்தை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்கு பதிவு செய்துள்ளார்.

இந்த வழக்கில் பசுபதி, அவரின் கூட்டாளிகளான எழில்முத்து, மணிகண்டன் ஆகியோர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். பசுபதி போலீஸாரிடம் அளித்த தகவலில்,

“நான் சிறையிலிருந்த சமயத்தில் என் மனைவி சபரிதாவின் மனதை கணேஷ்குமார் மாற்றிவிட்டார். நான் குடியிருந்த வீட்டின் அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து சபரிதாவும் கணேஷ்குமாரும் தங்கியிருந்தனர். அவர்கள் இருவரையும் எச்சரித்தேன். ஆனால், கேட்கவில்லை. அதனால்தான் கொலை செய்தேன்” என்று கூறியுள்ளார்.

சபரிதாவிடம் போலீஸார் கொலை குறித்து நீண்ட நேரம் விசாரித்தனர். அப்போது அவர் சில முக்கிய தகவல்களைக் கூறியுள்ளார்.

போலீஸாரிடம் சபரிதா, “ஒரு மாதமாக நானும் கணேஷ்குமாரும் சேர்ந்து வாழ்ந்தோம். என் கணவர் பசுபதிக்கும் கணேஷ்குமாருக்கும் வாய்தகராறு இருந்து வந்தது. இந்தச் சமயத்தில்தான் பசுபதி, என்னிடம் நேற்று போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கணேஷ்குமார் `உனக்கு பசுபதி ஏன் போன் செய்கிறார்’ என்று சண்டை போட்டார். மேலும், அவர், `நீ என்கூடதான் இருக்கிறாய் என்பதை பசுபதியிடம் தைரியமாகச் சொல்லு… நாங்கள் இருவரும் சேர்ந்து வாழப்போகிறோம்’ என்று கூறும்படி தெரிவித்தார்.

சபரிதாவிடம் விசாரிக்கும் போலீஸ்

உடனே நான், “தேவையில்லாத பிரச்னை ஏற்படும்“ என்று கூறினேன். மேலும், “விவாகரத்து வாங்க வேண்டும்“ என்றேன். ஆனால், கணேஷ்குமார் அதைக் கேட்காமல் பசுபதிக்கு போன் செய்து, “நான் இங்குதான் இருக்கிறேன்… உன்னால் முடிந்ததைச் செய்“ என்று தெரிவித்தார்.

அதன்பிறகுதான் பசுபதி மற்றும் அவரின் கூட்டாளிகள் வந்து கணேஷ்குமாரை கொலை செய்துவிட்டனர். என்னையும் கொலை செய்ய முயன்றனர். ஆனால், நான் தப்பி ஓடிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here