சுமந்திரனின் தன்னிலை விளக்கம்: தர்க்கக் குறைகளும், வரலாற்று பிழைகளும்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக, இன்று இரவு தன்னிலை விளக்கமொன்றை காணொலியாக வெளியிட்டுள்ளார்.

சுமந்திரனின் தன்னிலை விளக்கத்திலும், கடந்த சில தினங்களாக சுமந்திரன் தரப்பில் வழங்கப்பட்டு வரும் விளக்கத்திலும் முக்கியமாக சுட்டிக்காட்டப்பட்டு வந்த விடயம்- முழுமையான மொழிபெயர்ப்பை படிக்காமல் விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

சிங்களம் அரைகுறையாக தெரிந்தவர்களால்தான் இவ்வளவு பிரச்சனையும் என்பதை போல, முழுமையான பேட்டியையும் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தனர்.

சுமந்திரனின் பேட்டியில், சர்ச்சைக்குரிய பகுதி மிகச்சிறிய பகுதிதான். அது ஆயுதப் போராட்டத்துடன் தொடர்புடைய பகுதி. சுமந்திரன் சொன்ன பதிலை விட, சொல்லாமல் விட்ட பதில்தான் அதில் விவகாரம்.

சுமந்திரனின் தன்னிலை விளக்கத்தில் சிங்கள அர்த்தத்தில் ஆயுத நடவடிக்கையில் ஈடுபாடுள்ளதா என்ற சாரப்பட கேள்வியெழுப்பபட்டதாகவும், அது போராட்டத்தை குறிக்காது என்றும் தெரிவித்திருந்தார்.

அதில் உண்மையான அர்த்தம் என்னவென்றால், தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை ஒரு போராட்டமாக கருதாத, அங்கீகாரிக்காத சிங்களவர்கள்தான் பெரும்பான்மையானவர்கள். ஒரு ஆயுத நடவடிக்கையாகவே அவர்கள் கருதுகிறார்கள். அந்த அடிப்படையிலேயே அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

அந்த பேட்டியின் ஆரம்பத்தில் நேர்கண்டவர், சட்டத்தரணி சுமந்திரனை நேர்காணல் செய்வதாகவோ, தென்னிந்திய திருச்சபையை சேர்ந்த சுமந்திரனை நேர்காணல் செய்வதாகவோ குறிப்பிட்டிருக்கவில்லை. அவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி, சுமந்திரன் என.

சுமந்திரன் மீது கட்சிக்குள்ளும் அண்மைக்காலமாக வைக்கப்படும் குற்றச்சாட்டு, அவர் தன்னை முன்னிலைப்படுத்திய, தனி மனித செயற்பாட்டிலேயே ஈடுபடுகிறார், கட்சியாக செயற்படுவதில்லையென.

அந்த பேட்டிக்கு சுமந்திரன் சென்றது கூட்டமைப்பின் பேச்சாளராக. அவர் கூட்டமைப்பின் பேச்சாளராக இல்லாமல், வேறு எந்த கட்சியின் பேச்சாளராக இருந்திருந்தாலும், குறிப்பிட்ட ஊடகவியலாளரால் அழைக்கபட்டோ, அதே அணுகுமுறையில் நேர்காணப்பட்டிருக்கவோ மாட்டார்.

விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட, விடுதலைப்புலிகளின் முன்னணி அரசியல் அமைப்பாக செயற்படுவதாக பகிரங்கமாக தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட கட்சியின் பேச்சாளர்.

தமிழ் அரசு கட்சியின் சுமந்திரன் ஆயுத வழிமுறையை ஏற்கிறாரா?, சுப்பன் ஆயுத வழிமுறையை ஏற்கிறாரா?, குப்பன் ஆயுத வழிமுறையை ஏற்கிறாரா என்பதெல்லாம் இந்த சமூகத்திற்கு முக்கியமல்ல. அவர்களின் நிலைப்பாடு என்னவாகவும் இருந்து விட்டு போகட்டும். அது சமூகத்திற்கு அவசியமற்றது.

இதுதான் சுமந்திரன் சறுக்கும் இடம்.

ஆயுத நடவடிக்கையை ஏற்கிறாரா என கேள்வியெழுப்பப்பட்டது. தமிழர் பிரச்சனையை ஆழமாக புரிந்து கொள்ளாதா, நிலவரங்களை புரிந்து கொள்ளாதா- இந்த விவகாரங்களில் மேலோட்டமான அறிவுடையவராகவே- அவர் இருப்பது கேள்விகளில் துலக்கமாக தெரிந்தது.

இந்த வகையானவர்களையும் கண்டு ஒதுங்கி செல்ல முடியாது. எமது நிலைப்பாடுகளுடன் ஒத்திருக்காதவர்களுடனும் பேச வேண்டுமென சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். சுமந்திரன் அதைத்தான் செய்திருக்க வேண்டும். வழக்கமாக துருத்திக் கொண்டு தெரியும் சுமந்திரன் வெளித் தெரிந்தேயிருக்க தேவையில்லை. கூட்டமைப்பின் பேச்சாளராகவே அவர் பேசியிருக்க வேண்டும்.

அது ஆயுத நடவடிக்கையல்ல, அதன் பின்னணிகளையே அவர் பேசியிருக்க வேண்டும். அதை செய்யவில்லை. அதுதான் விவகாரம்.

இது பேட்டியின் சிங்கள மொழி பெயர்ப்பு புரியாமல் விமர்சனம் எழுந்ததாக கூறுவது பிரச்சனையின் தார்ப்பரியம் புரியாத விளக்கம்.

சுமந்திரனின் தன்னிலை விளக்கத்தில், அஹிம்சை பற்றி குறிப்பிட்டிருந்தார்.

தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் அரசு கட்சி, அது அஹிம்சையை வழிமுறையாக கொண்ட இயக்கம், அதில் இணைந்திருந்தேன் என கூறி, தனது ஆயுத விருப்பின்மைக்கு இன்னொரு விளக்கமும் சொல்லியிருந்தார்.

இது மிகமிக தவறான விளக்கம்.

எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஈழத்து காந்தி என அழைக்கப்பட்டவர். அவர் உண்மையில் ஈழத்து காந்திதான். ஆனால், செல்வநாயக்தின் பின்னர் ஒரு உள்ளூர் காந்தி கூட தமிழ் அரசு கட்சியில் இருந்தது கிடையாது. அது அஹிம்சை வழிமுறையை கொண்ட கட்சியென சொல்லவும் முடியாது.

செல்வநாயகத்தின் இறுதிக்காலங்களில் ஆயுத இயக்கங்கள் ஆரம்பித்து விட்டன. செல்வநாயகத்தை தவிர்ந்த ஏனைய தமிழ் மிதவாத தலைவர்கள் எல்லோரும் போராளி இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்கள். போராளி இயக்கங்களின் வளர்ச்சியில் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர்களின் பங்கு என்னவென்பது ஒன்றும் சிதம்பர ரகசியம் கிடையாது. போராளிகள் சிறை சென்றபோது அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் உள்ளிட்டவர்கள் நீதிமன்றம் சென்றார்கள். அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், தர்மலிங்கம் போன்றவர்கள் அவர்களின் வீடுகளிற்கு சென்று உதவினார்கள். அதாவது தமிழ் ஆயுத போராட்ட வளர்ச்சியில், அப்போதைய தமிழர் விடுதலை கூட்டணி தலைவர்களின் மறைகரங்களும் ஒத்தாசையாக இருந்தது.

அமிர்தலிங்கத்தின் பூரண சம்மதத்துடன், அவரது மகனொருவர் ஆயுத இயக்கமொன்றையே ஆரம்பித்தார். மாவை சேனாதிராசாவும் அதில் தொடர்பிலிருந்தார்.

பின்னர் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற அமைப்புக்களுடன் 1989களில் தமிழர் விடுதலை கூட்டணி தேர்தலிலும் போட்டியிட்டிருந்து.

தமிழீழ விடுதலைப்புலிகளினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. அதை சிலர் வசதியாக மறுக்கிறார்கள். ஆனால் ஒரு சிறு சம்பவம் சொல்லலாம். தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கும் பேச்சு நடந்து கொண்டிருந்த சமயத்தில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் பேச்சில் ஈடுபட்டிருந்த அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஒரு கட்டத்தில் பின்வாங்கினார். கூட்டணி சின்னமாக சைக்கிள் இருக்க வேண்டுமென்றார். அது முடியாதென்றபோது, யாழில் மட்டுமாவது சைக்கிள் வேண்டுமென அடம்பிடித்துக் கொண்டிருந்தார்.

அந்த நாட்களில் ஒருநாளில், ரெலோ அலுவகத்திற்கு பேச்சிற்கு சென்றிருந்த பத்திரிகையாளர் சிவராம், அங்கிருந்த தொலைபேசியில் அப்பாத்துரையுடன் பேசினார். அப்பாத்துரையிடமிருந்து சாதகமான பதில் வரவில்லையென்றதும், “அம்மான் (பொட்டு) சொன்னவர்… உங்களிற்காக 2 ரவுண்ஸ் வைத்திருப்பதாக.. உங்களிடம் சொல்லிவிட சொன்னார்“ என்றார். பின்னர் அப்பாத்துரை உடனடியாக இணங்கினார்.

பின்னர் பொட்டம்மானை அவர் சந்தித்து, இப்படி சொன்னீர்களா என வினாவினார். அவர் மறுத்திருந்தார். ஆனால், நீங்கள் இணைய வேண்டுமென்பதை விரும்புகிறோம் என்பதையே சொல்லியனுப்பினோம் என்றார். இதனால் சிவராம் மீது தீராத கோபத்தில் அப்பாத்துரை இருந்தார். சிவராமின் மரணத்தின்போது, தனக்கு நெருக்கமாக இருந்தவர்களுடன் இந்த சம்பவத்தை அவர் பலமுறை கூறியுமிருக்கிறார்.

விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு, 2004 தேர்தலில் விடுதலைப் புலிகளை ஏக பிரதிநிதிகளாக அங்கீகரித்தது. புலிகள் ஏக பிரதிநிதிகள் என்பதை நிரூபிக்க, கூட்டமைப்பை வெற்றியடைய செய்யுங்கள் என்றுதான் பிரச்சாரம் செய்தனர்.

புலிகளை எகபிரதிநிதிகளாக அங்கீகரித்து, அவர்களின் கொள்கைகளிற்கு பக்கத்துணையாக இருப்போம் என கூட்டமைப்பினர் பகிரங்கமாக அறிவித்த காலப்பகுதியில் புலிகள் தோசை சுட்டுக்கொண்டிருக்கவில்லை. அப்போதும் துப்பாக்கிகள்தான் வைத்திருந்தார்கள்.

எம்.ஏ.சுமந்திரன் தன்னையொரு அகிம்சைவாதியாகவும், அஹிம்சை வழியில் பயணித்த கட்சியில் இணைந்ததாகவும் கூறுவது மிக தவறு. விடுதலைப் புலிகளின் “பொலிட்டிக்கல் வெர்சன்“ இலேயே அவர் இணைந்தார்.

சுமந்திரனுக்கும் தமிழ் அரசு கட்சிக்கும் தொடர்பு ஏற்பட்டது ஆனந்தசங்கரியின் வழக்கு காலத்தில். அப்பொழுது புலிகளின் பொலிட்டிக்கல் வெர்சனின் வழக்கை செய்தார். 2010 இன் முன்னரேயே தமிழ்அரசுகடசியுடன் அரசியல் விவகாரம் சார்ந்த வழக்குகளில் ஈடுபட்டதாகவும் சுமந்திரன் முன்னர் கூறியிருக்கிறார். புலிகள் தோசை மட்டுமே சுடுவார்கள் என அப்பொழுது சுமந்திரன் நினைத்திருப்பார் என வாய்ப்பில்லை. புலிகளின் கொள்கைளை ஏற்ற கட்சியுடன் அப்பொழுதே இணைந்து பணியாற்ற ஆரம்பித்து விட்டார்.

2010 இலேயே சுமந்திரன் எம்.பியாகினார் என ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், 2004இல் தம்மை பற்றி ஏற்படுத்திய அடையாளத்தை இழப்பதாக தமிழ் அரசு கட்சியோ, கூட்டமைப்போ எப்பொழுதும் பிரனடப்படுத்தியதில்லை.

ஆக, தன்னை ஆயுத வழியில் ஆர்வமற்ற ஒருவர் என சுமந்திரன் வலிந்த அடையாளங்களை ஏற்படுத்துவதில் அர்த்தமில்லை.

சுமந்திரனின் தன்னிலை விளக்கத்தில் மோசமான திரிவுபடுத்தல் ஒன்றுள்ளது. சுமந்திரனை விமர்சித்தவர்கள் அனைவரும் இப்பொழுதும் ஆயுதப் போராட்டத்தை விரும்புகிறார்கள், மக்களை பிழையாக வழிநடத்துகிறார்கள், அவர்களை மக்கள் ஆதரிக்க கூடாது என குறிப்பிட்டிருந்தார்.

இதுவும் தவறான திசைதிருப்பல். சுமந்திரனை விமர்சித்தவர்கள் யாருமே தற்போது ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக சொல்லவில்லை. ஆயுதப் போராட்டமே வழியென சொல்லவில்லை. சுமந்திரனை கண்டித்தவர்களில் பலர் முன்னோடி ஆயுதப் போராளிகள். ஆயுதப் போராட்டம் சாத்தியமற்றதென அவர்களில் பெரும்பாலானவர்கள் 90களின் முன்னரே அதை கைவிட்டு விட்டார்கள். அதாவது சுமந்திரன் மாணவனாக இருந்தபோதே, அவர்கள் வரலாற்றிலிருந்து பாடம் கற்று விட்டனர்.

இப்பொழுது தன்னை விமர்சித்தவர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆதரிப்பதாக சுமந்திரன் குறிப்பிடுவது மோசமாக திசைதிருப்பல்.

முன்னர் ஒரு காலத்தில் நடந்த ஆயுதப் போராட்டத்தை கொச்சை செய்ய வேண்டாம் என்றுதான் அவர்கள் சுமந்திரனிடம் கோரினார்கள். முன்னர் நடந்த ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம் என்பது, இனியும் ஆயுதப் போரை முன்னெடுக்கப் போவதான தோற்றத்தை சுமந்திரனிற்கு ஏற்படுத்தினால்- அவர் ஆயுதப் போராட்டத்தை மிக கொச்சையான பார்வையுடன் அணுகுகிறார் என அர்த்தம்.

சுமந்திரன் தனது தன்னிலை விளக்கத்தில், தன்னை நேர்கண்டவர் தன்னை மடக்க கேள்வி கேட்டார், அவருக்கு அப்படித்தானே பதிலளிக்கலாம், வேறு விதமாக பதிலளித்தால் சிங்கள மக்கள் மத்தியில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தி விடும் என்றார்.

இந்த வாதத்தின் பின்னாலுள்ள தர்க்க பலவீனம், சட்டத்தரணியாக சுமந்திரனுக்கு புரியாததல்ல.

இந்தப் பதில், பேட்டியில் சுமந்திரன் பொய் சொன்னார் என்றும் அர்த்தமாகும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here