தேர்தல் கலகலப்பு 5: சுடலைப் பிரச்சனையை தீர்க்க 3 எம்.பிக்களை கேட்கும் சாதிச்சங்கங்கள்!

ஒவ்வொரு கட்சி தோன்றுவதற்கு பின்னாலும் ஒரு காரணமிருக்கும். ஒவ்வொரு கூட்டணி தோன்றுவதற்கு பின்னாலும் ஒரு காரணமிருக்கும். அந்தக் காரணங்கள் நல்லவையா, போலியானவையா, மக்களை ஏமாற்றுபவயைா என்பதை பொறுத்தே அந்த கட்சியின் வெற்றி தோல்வி இருக்கும்.

யாழ்ப்பாணம் புத்தூர் சுடலைப் விவகாரத்தில்- பிரச்சனை வன்முறை வடிவமெடுக்கவும், சிக்கலானதாகவும் மாறவும் பிரதான காரணமாக இருந்தது சிவப்பு கட்சியென்பது ஊரறிந்த உண்மை

இப்பொழுது இலங்கையில் மட்டுமல்ல, உலகிலேயே அசல் சிவப்புக்களெதுவும் கிடையாது. அனைவருக்கும் சாயம் வெளுத்து விட்டது. ரஷ்யாவிற்கு பெய்யும் பனிக்கு புத்தூரில் ஸ்வெட்டர் போட்டால் எப்படி கட்சி உருப்படும்?

இலங்கைக்கான கட்சியென்ற பெயரில் ஆரம்பித்து இப்பொழுது புத்தூரில் வட்டாரக்கட்சியாக வந்து நிற்கிறது புதிய ஜனநாயக மார்க்சிசி லெனினிச கட்சி. வட்டாரக்கட்சியென்ற பெயரையாவது தக்க வைக்க வேண்டுமென்பதும் புத்தூர் சுடலை விவகாரம் பூதாகரமாக ஒரு காரணம்.

புத்தூர் சுடலை விவகாரம் அந்த கட்சியின் யாழ் மாவட்ட பிரமுகர் ஒருவரின் தில்லாலங்கடி வேலையால் உருவான சிக்கல். சுடலைக்கு பக்கத்திலுள்ள காணியை குறைந்த விலைக்கு வாங்கி, அந்த பகுதி மக்களிற்கு அதிக விலையில் விற்றுவிட்டார். சுடலை அகற்றப்படுமென கூறித்தான் காணியை விற்றார். ஆனால், சுடலை அக்கறப்படவில்லை. அது பற்றி மக்கள் கேள்வியெழுப்பியபோது, அதே மக்களிற்கு சுடலை வெறியூட்டி, வன்முறையாக மாற்றப்பட்டது.

அந்த சமயத்தில் உள்ளூராட்சிசபைதேர்தல் வந்தது. அப்போது, புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சி, உள்ளூராட்சி பிரதிநிதித்துவம் கிடைத்தால் சுடலையை அகற்றலாமென அந்த பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்தது. இதனால் வாராது வந்த அருமருந்தைப் போல, நீண்டகாலத்தின் பின் ஒரு உள்ளூராட்சி மன்ற பிரதிநிதித்துவம் அந்த கட்சிக்கு கிடைத்தது.

ஆனால், சுடலை அகற்றப்படவில்லை. மாறாக, அந்த சுடலையில் தகனமுறையில் மாற்றம் செய்து, தொடர்ந்து இறுதிக்கிரியை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

சிலவாரங்களின் முன்னர் சுடலை விவகாரம் மீண்டும் சர்ச்சையானது. சில வருடங்கள் அடங்கியிருந்த சுடலை விவகாரம் மீண்டும் தூசு தட்டப்பட்டதும், நீதிமன்றத்தையே அவமதித்து, நீதிமன்ற உத்தரவிற்கு புறம்பாகவும் நடந்த சம்பவத்திற்கு பின்னணி இருப்பதாக சொல்லப்படுகிறது.

அது- எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல்.

மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணியென சில சாதிச்சங்கங்கள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளனர். பொதுவாகவே, இந்தவகை சாதிச் சங்கங்களை மக்கள் ரசிப்பதில்லை. நாலு பேர் கூடி, ஒரு பிளேன்ரி குடித்தபடி, எதையாவது பேசிக் கலைவதுதான் இந்த சாதிச்சங்கங்களின் வேலையும், பொழுதுபோக்கும்.

தேர்தலிற்கு செல்வதற்கு மக்களிடம் ஏதாவது பொறியை கிளப்ப வேண்டுமே- அதற்காகத்தான் சுடலை விவகாரத்தில் மீண்டும் சர்ச்சையேற்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த சாதிச்சங்கள ஆட்களின் பிரச்சாரங்களும் அப்படித்தான் உள்ளது. ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மத்தியில் சென்று, அங்கு சுடலை விவகாரங்கள் இருந்தால், அதை தீர்க்க தமக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை தேவையென்றும், யாழில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்கள் இணைந்தால் 3 ஆசனங்களை பெறலாமென்றும் அடித்து விடுகிறார்கள்.

யாழில் பல இடங்களில் சுடலை பிரச்சனைகள் உள்ளன என்பது உண்மை. அதை யாரும் மறுக்க முடியாது. நமது அதிகாரிகள் பொதுவாகவே ஆதிக்க மனநிலையில் இயங்குபவர்கள் என்பதும் உண்மை. இந்த விவகாரத்தை அரசியல் தலைமைகள் பொறுப்புடன் கையாளவில்லையென்பதும் உண்மை. யாழில் இயங்கும் சிவில் அமைப்புக்களிற்கும் இந்த விவகாரங்கள் பற்றிய அறிவும், புரிதலும் கிடையாது. இது எல்லாம் சேர்ந்து, தேர்தலிற்கு வாக்கு சேகரிக்க சாதியை சொல்லி பிழைப்பவர்களிற்கு வாய்ப்பாகி விடுகிறது. மேலே சொன்ன அத்தனை உண்மையை போலவே- இந்த சாதிக்கட்சிகள், இந்த விவகாரங்களை தமது வாக்கிற்கான உத்தியாக மட்டுமே பாவிக்கின்றன என்பதும் உண்மை.

கடந்த மஹிந்தவின் ஆட்சியில் வாக்கை பிளவுபடுத்தும் உத்தியாக, சாதிக்கட்சிகள் களமிறக்கப்பட்டிருந்தன. தற்போது கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் சாதிக்கட்சிகள் மீண்டும் முளைவிட்டுள்ளன.

தமிழ் இளையவர்கள் தமது முற்போக்கு, சமூக பாத்திரத்தை மேலும் வளப்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ் தேசிய கட்சிகள் தமது சமூகப் பாத்திரத்தின் பொறுப்புணர்வை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். அக அழுக்கை மறைத்து, அரசியல் செய்ய முடியாது. தமிழ் தேசிய வாதிகளின் இந்த அசமந்தமே, மக்களை பிளவுபடுத்தும் சாதிச்சங்கங்களிற்கு வாய்ப்பாக அமைகிறது. உண்மையான தமிழ் தேசியம் அக முரண்களை கொண்டதல்ல. தமிழ் தேசிய சமூகங்கள் ஒன்றுபட்டு அக முரண்களை தீர்த்து வலுவான தேசியப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here