சர்வதேச விசாரணை முடிந்து விட்டதா?: சுமந்திரனின் முயற்சி கோட்டாபயவையும் பாதுகாப்பதற்கானதா?

யுத்தத்தின் இறுதியில் நடந்த மனித உரிமைகள் மீறல் மற்றும் போர்க்குற்ற விவகாரங்கள் குறித்து சர்வதேச பொறிமுறையிலான விசாரணையெதுவும் இடம்பெற்றிராத நிலையில், விசாரணை முடிந்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்து வரும் திடீர் நிலைப்பாட்டிற்கு பல தரப்புக்களில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

இலங்கை மீதான குற்றச்சாட்டுக்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வலுவடைந்ததை தொடர்ந்து, மேலதிக நடவடிக்கையை தொடர்வதா இல்லையா என்பதை தீர்மானிக்க முன்னாள் ஆணையாளர் இளவரசர் செய்ட் அல் ஹூசைன் நியமித்த குழு, எடுகோள்களின் அடிப்படையிலான மேலோட்டமாக சில தகவல்களை திரட்டி, ஆவணமொன்றை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிற்கு கையளித்திருந்தது.

அது சர்வதேச விசாரணையல்ல. இலங்கை தொடர்பான ஜெனீவா அறிக்கையிலும் மிகத் தெளிவாக தாம் செய்திருப்பது ஒரு தரவு சேகரிப்பு மட்டுமே, குற்றங்கள் நிகழ்ந்துள்ள வகைமுறை பற்றியே எங்களால் ஆராய முடிந்ததென்றும் தனிப்பட்ட ரீதியாக இந்த குற்றங்களுக்கு யார் பொறுப்பு என்பதை தீர்மானிக்கும் பணி நடைபெறவில்லை என்பதை சொல்லி இருக்கிறார்கள். இது ஒரு தரவு சேகரிப்பு.

சர்வதேச விசாரணையென்பது பல படிமுறைகளை கொண்டது. இலங்கை விவகாரத்தில் நடந்திருப்பது, மிக ஆரம்ப படிமுறை. அவ்வளவே.

அந்த நடவடிக்கையில் மின்னஞ்சல் மூலமாக சாட்சியங்களை வழங்க முடியுமென அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் மிகமிக சொற்ப அளவான சாட்சியங்கள் வழங்கப்பட்டிருந்தன. அது முறையான சாட்சித் தொகுப்பல்ல. இலங்கையில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்தன என்பதை உறுதிசெய்யும் ஆவணங்கள் அதிலிருந்தன. ஆனால் இலங்கையில் என்ன நடந்தது என்பதை முழுமையாக கண்டறியும் ஆவணங்களை அந்த குழு சேகரிக்கவில்லை. அந்த ஆவணத்திற்காக வழங்கப்பட்ட சாட்சிகளை விட, மிகமிக குரூரமான போர்க்குற்றங்கள் நிகழ்ந்தன என்பதை முறையான விசாரணை பொறிமுறை மூலம் நிரூபிக்க முடியும்.

பாதிக்கப்பட்டவர்களிடம் சாட்சியங்களை பெறும் முறையான பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டிருக்கவில்லை. சர்வதேச விசாரணை நடந்து முடிந்து விட்டது என சுமந்திரன் தெரிவிக்கும்போதுதான், ஆமாம் நடந்து விட்டது என துரைராசசிங்கம் பக்கப்பாட்டு பாடுகிறார். போதாதற்கு, பொலிஸ் விசாரணை கதையையும், கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் சொன்னாராம். பொலிஸ் விசாரணை, சம்பந்தப்பட்டவர்களிற்கு தெரியாது என்றும் சொன்னாராம்.

துரைராசசிங்கம் ஒரு சட்டத்தரணி. ஆனால், அவர் வழக்கில் ஆஜராகாத சட்டத்தரணி என நகைச்சுவையாக சொல்வார்கள். விசாரணை பற்றிய அடிப்படையான அறிவுமற்றவர் என்பது இப்பொழுதுதான் தெரிகிறது. விசாரணையின் அடிப்படையே பாதிக்கப்பட்டவரிடம் பெறும் வாக்குமூலம்தான். பாதிக்கப்பட்டவராக சொல்பவரிடம் பெறும் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான், அவர் சொல்வது உண்மையா பொய்யா என்பதை பொலிசார் ஊகித்தறிவார்கள்.

இலங்கையில் சர்வதேச விசாரணை நடந்து முடிந்து விட்டதென எம்.ஏ.சுமந்திரன் சொல்லத் தொடங்கிய பின்னர், இப்பொழுது இரா.சம்பந்தன் மற்றும் துரைராசசிஙகம் ஆகியோர் மத்தியகுழு கூட்டத்திலும், சர்வதேச விசாரணை முடிந்து விட்டதென சொல்லியுள்ளனர். இலங்கையில் இந்த மூவரையும் தவிர்த்து, வேறு எவருக்கும் தெரியாமல் நடந்த சர்வதேச விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் முறையாக பதிவாகவில்லை.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் நிறுவனமயப்பட்டுள்ளனர், அரசியல் கைதிகளின் குடும்பங்களிடம் அப்படியான வலையமைப்பு இல்லையென்றாலும் அவர்களிடமும் ஒருங்கிணைந்த தன்மையுள்ளது, இன்னும் பல்வேறு விதமாக பாதிக்கப்பட்டவர்கள் ஏதோ ஒரு வலையமைப்பில் இணைந்திருக்கிறார்கள், இதை தவிர, இலங்கையிலும் உள்நாட்டிலும் இதுவரை பேசப்படாத போர்க்குற்றங்களிற்கான சாட்சிகளும் மிகச்சிலர் உள்ளனர். அந்த சாட்சிகளின் வாக்குமூலங்கள் பேரதிர்ச்சி மிக்கவையாக இருக்கும். அந்த சம்பவங்கள் பற்றி இன்று தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என பேசிக்கொண்டிருப்பவர்கள் அறிந்தேயிருக்க மாட்டார்கள்.

அவ்வளவு வீரியமிக்க சாட்சியங்கள் இருந்தும், இவர்கள் எவரிடமும் சாட்சியம் பதிவாகவில்லை. மேலோட்டமான சில சாட்சியங்களை, ஆணையாளரின் குழு பதிவு செய்தது.

எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரண்டு இளைய சட்டத்தரணிகளின் முன்னிலையில் சில ஹொட்டல்களில் வாக்குமூலங்கள் பதிவாகியதாக, எம்.ஏ.சுமந்திரன் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

வீரியம்மிக்க சாட்சியங்களை தவிர்த்து, சுமந்திரன் தரப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சாட்சியங்களை பதிவு செய்த- வெறும் தரவு சேகரிப்ர் அறிக்கையை சர்வதேச விசாரணையாக சுமந்திரன் சித்தரிப்பது, தமிழ் மக்களின் கடைசி ஆயுதத்தையும் வீரியமிழக்க செய்யும் முயற்சியா என்ற நியாயமான சந்தேகமும் உள்ளது.

தமிழ் அரசியலில் இருந்த தீவிரத்தன்மையை அகற்றி, மக்கள் பிரதிநிதிகளாக இருக்கவே தகுதியற்ற- உல்லாசப்பிரியர்களான ஆர்னோல்ட் போன்றவர்களை முன்னிலைப்படுத்தி, தமிழ் தேசிய அரசியலின் தீவிரத்தன்மையின் தொடர்ச்சியை சுமந்திரன் அறுக்கும் முயற்சியில் கச்சிதமாக ஈடுபட்டு வருகிறார் என்ற விமர்சனமும் உள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் அதிகபட்ச குழப்பத்தையும், பிளவையும், அணிகளையும் சுமந்திரனே உருவாக்கியிருந்தார்.

நேற்று முன்தினம் (1) வடமராட்சியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விட்டு வெளியேறியதற்கு சுமந்திரன் பல தவறான விளக்கங்களை கொடுத்திருந்தார். விக்னேஸ்வரன்- சுமந்திரன் மோதல் உருவான முதலாவது புள்ளி, தமிழ் அரசு கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக கனடாவில் நிதி சேகரிக்க செல்ல மாட்டேன் என விக்னேஸ்வரன் சொன்னதிலிருந்துதான் உருவானது. வடமாகாணசபை தேர்தலில் பிரச்சாரத்திற்காக வழங்கப்பட்ட நிதியில் மீதியை, செலவு விபரங்களுடன் கட்சி தலைமைக்கு ஒப்படைக்க அவர் முயன்றபோது, தேர்தலிற்கு வழங்கப்பட்ட நிதியில் தலைவர்களிடம் மிகுதி வாங்கும் வழக்கம் கட்சியில் இல்லையென தனக்கு சொல்லப்பட்டதாக விக்னேஸ்வரனே பகிரங்கமாக சொல்லியுள்ளார். அதன்பின்னர், இனஅழிப்பு பிரேரணையை வடமாகாணசபையில் நிறைவேற்ற முயல, சுமந்திரன் அதை எதிர்க்க மோதல் தீவிரமானது. இதுதான் சுமந்திரன்-விக்னேஸ்வரன் மோதலின் உண்மை வரலாறு. அடிப்படையில் இது ஒரு கொள்கை நிலைப்பாடு சார்ந்ததுதான்.

இந்த மோதல் பின்னர் விஸ்பரூபமெடுத்து, சுமந்திரனின் அணியாக, கனடாவிலுள்ளவர்களால் ஒரு “அரசியல் கூலிப்படை“ உருவாக்கப்பட்டு, வடமாகாணசபையை சில தமிழ் அரசு கட்சி உறுப்பினர்கள் குழப்பியதுதான் வரலாறு.

தமிழ் அரசியலில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கச்சிதமாக அரங்கேற்றிய ஒரு முஸ்லிம் நபர், கனடா கிளையினரால் போஷிக்கப்பட்டு, தற்போது கனடாவிற்கே அழைக்கப்பட்டு விட்டார்.

தமிழர் அரசு மலர்ந்து விட்டதென தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரகடனம் செய்த வடமாகாணசபையை சீரழிப்பதில் ஒரு முஸ்லிம் நபர் முதன்மை பாத்திரம் வகித்து, அதன் பிரதிபலனாக கனடாவில் குடியேறியுள்ளார் என்பது, முஸ்லிம் நல்லிணக்கம் பேசிவரும் தமிழ் தேசியவாதிகள், தமது பலவீனம் குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது.

முஸ்லிம் நல்லிணக்கம் பேசினால், பொருத்தமான ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அடையாளம் காண முடியாமல், ஒரு குழுவால் முன்னிலைப்படுத்தப்பட்ட முஸ்லிம் நபரை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து, தமிழ் அரசியலில் ஏற்பட்ட குழப்பம் ஒரு வரலாற்று பாடமாக இருக்கட்டும்.

சர்வதேச விசாரணை இல்லையென்பவர்கள் அரசாங்கத்தை பாதுகாக்கிறார்கள் என சுமந்திரன் வாய் கூசாமல் பொய் சொல்கிறார். ஆனால், நடக்காத சர்வதேச விசாரணையை நடத்து விட்டதாக சுமந்திரன் கூறுவதுதான் உண்மையில் கோட்டாபய அரசாங்கத்தை பாதுகாப்பதாகும். தமது தேவைகளின் அடிப்படையில் தமிழர் விவகாரத்தில் தலையிட்ட சர்வதேசம், தற்போது சங்கடங்களின்றி அதிலிருந்து விலகிச் செல்லவும் சுமந்திரனின் நிலைப்பாடு உதவும்.

வெளியான சர்வதேச விசாரணை அறிக்கையினால்தான், சவேந்திர சில்வா மீது அமெரிக்கா பயணத்தடை விதித்தது என்றும், அது சர்வதேச அறிக்கையில்லையென்பவர்கள், சவேந்திர சில்வாவை பாதுகாக்கிறார்கள் என்றும் சுமந்திரன் சொல்கிறார். அரசயலை சுமந்திரன் தவறாக புரிந்து வைத்திருக்கிறார் போல படுகிறது. அதனால்தான் தமிழ் அரசு கட்சி இருக்கும்போதே, தனியாக சுமந்திரன் அணியை உருவாக்கினார். அனைத்து இடங்களிலும் நான், நான் என பேசுகிறார். சவேந்திர சில்வாவிற்கு பயணத்தடை விதிப்பதல்ல விவகாரம்.

போர்க்குற்றங்கள் நடந்தபோது, சவேந்திர சில்வா ஒரு 58வது டிவிசன் தளபதி. அவரது பிரிவினர் முன்னேறிய பகுதிகளில் அதிகளவு போர்க்குற்றச்சாட்டு பதிவாகியிருக்கலாம். ஆனால், அதற்கு உத்தரவிட்டது யார் என்பது கண்டறியப்படுவதுடன், போர்க்குற்றம் நிகழ்த்தும் ஆட்சிஅதிகார மனநிலையை அகற்றுவதுமே முக்கியம். அதற்கு, சுமந்திரன் பங்குகொண்ட, தரவு சேகரிப்பு முயற்சி போதாது. தானும் பங்குபற்றியதால், இதற்கு மேல் எதுவும் நடக்காமல், தரவு சேகரிப்பு முயற்சியை இத்துடன் விடயத்தை முடித்து, போர்க்குற்ற விசாரணையாளர் என்ற பெருமையை சுமந்திரன் பெற முயல்கிறாரா? தனது பெருமைக்காக, இனத்தின் அவலத்தையும் ஈடு வைக்க துணிந்தாரா? அல்லது, இந்த முயற்சியின் மூலம் தற்போது கோட்டாபய ராஜபக்ச அரசையும் காப்பாற்ற முயல்கிறாரா?

எது இதில் உண்மை?

தமிழ் தேசிய அரசியல் என்பது சுமந்திரன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமாரின் மோதல்கள் அல்ல. தேர்தல்களிற்காக அவர்கள் சொல்லும் பொய்களுமல்ல. சமூக, இனப்பொறுப்புள்ளவர்கள் இந்த மோதல்களில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். தேர்தல் அரசியல் சண்டைகளை, தமிழ் தேசிய உணர்வுபூர்வ பரப்பிற்குள் நகர்த்தும் கீழ்த்தரமான அரசியலுக்கு எதிராக, சமூகப்பொறுப்புள்ளவர்கள் குரல் கொடுக்க வேண்டும்.

ஏனெனில், தமிழ் தேசிய அரசியலென்பது, சுமந்திரன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமாரின் மோதல்கள் அல்ல. அது இறந்தவர்களாலும், வாழ்பவர்களாலும் உருவாக்கப்பட்டது. அதற்காக வகைதொகையற்ற உயர்களை உரமாக்கியது. இனிப் பிறக்கப் போகும் சந்ததிக்கானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here