இளையோர் கோசங்களும், இளைஞர் அணிகளும்!

தமிழ் தேசிய அரசியலிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பிலும், இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள்ளும் அண்மையில் திடீனெ முளைத்த சுலோகம்- இளையவர்களிற்கு வழிவிடுங்கள் என்பது. தேர்தல் சமயத்தில் இந்தவகையான சுலோகம் எழுவது வழமையானதுதான். ஆனால், இம்முறை கொஞ்சம் அதிகமாகவே ஒலித்தது.

அதற்கான காரணத்தை தேடினால், இரண்டு இடங்களில் போய் முட்டுப்பட வேண்டியிருக்கும்.

இந்த சுலோகத்தின் அடிமுடியை தேட ஆரம்பித்தால், முதலாவது- இளைஞர்களும் அல்லாது, முதியவர்களும் அல்லாமல் இடையில் நிற்பவர்களில் போய் முட்டுப்பட வேண்டியிருக்கும். இளைஞர்களை உசுப்பேற்றி விட்டு, மூத்தவர்களை ஒதுங்க வைக்கலாமா என்றும் முயற்சித்து பார்க்கிறார்கள்.

இரண்டு- இளையவர்களிடமும் வரும் நாற்காலி ஆசை. தமிழ் தேசிய அரசியலில் என்றுமில்லாதவாறு, இன்றுதான் செயற்பாட்டு பாரம்பரியமில்லாதவர்கள் முன்னிலை பெறலாமென்ற சூழல் தோன்றியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் மிகச் சொற்பமான அளவிலேயே அர்ப்பணிப்பான செயற்பாட்டு ஆளுமைகள் உள்ளனர்.

யாராவது ஒருவருக்கு அடிமையாக இருந்தால், அவர் முன்னிலை பெறலாம். சயந்தன், ஆர்னோல்ட் வகையறாக்கள் முன்னிலை பெற்றது அந்த வகையில்தான்.

இதனால், அரசியலில் “வயதுக்கு வந்த உடனேயே“ இளையவர்கள் ஏதாவது பதவியை விரும்புகிறார்கள். தமிழ் தேசிய அரசியல் முன்னிறுத்தும் இளையவர்களில் பெரும்பாலானவர்கள் செயற்றிறன் அற்றவர்களாகவும், பதவி மோகிகளாகவும், அரசியலை உழைப்பதற்காக பாவிப்பவர்களாகவும் மாறிவருகிறது.

இந்த கலாச்சாரத்தை மாற்ற முடியுமா என தெரியவில்லை. தமிழ் தேசிய அரசியலில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிடி நழுவிச் செல்வதற்கான பிரதான காரணங்களில் இதுவுமொன்று. செயற்பாட்டு பாரம்பரியமிக்க இளையவர்களை அவர்கள் திரட்டவில்லை.

முன்னர் ஒரு காலத்தில்தான்- டக்ளஸ் தேவானந்தாவையும், அங்கஜன் இராமநாதனையும், விஜயகலாவையும் வேலைவாய்ப்பு வழங்கி ஆட்திரட்டுவதாக சொன்னார்கள். இன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலான இளைஞர்களும் அந்த வகையானவர்கள்தான். நாடாளுமன்ற உறுப்பினர்களிற்காக தேர்தலில் வேலை செய்யும் பட்டதாரிகள் பலர் கொள்கை, கோட்பாடு பற்றி வாய்கிழிய பேசினாலும், பின்னால் இருக்கும் டீலிங் பெரியது.

இதையெல்லாம் சரி செய்யாத வரை, தமிழ் தேசிய அரசியலை சரி செய்ய முடியாது. அப்படியான ஒரு காலம் உருவாகும்வரை, தமிழ் தேசிய அரசியலென்பது, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்குமிடையிலான குடுமிப்பிடி சண்டையாகத்தான் இருக்கும்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தீர்மானங்களை எடுக்கும் நிலையிலுள்ள ஒரு முக்கியஸ்தர் அண்மையில் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார். சில மாதங்களின் முன்னர், கட்சிக்குள் பெரிய சர்ச்சை உருவாகியிருந்தது- கட்சியின் இளைஞர் அணி (வாலிபர் முன்னணி) தெரிவில்.

ஒவ்வொரு தரப்பும், ஒவ்வொருவரை முன்னிலைப்படுத்த, இறுதியில் மட்டக்களப்பை சேர்ந்த சேயோன் இளைஞரணி தலைவரானார். கிளிநொச்சியை சேர்ந்த சுரேன் செயலாளரானார். நிர்வாக பொறுப்புக்களில் ஏனைய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தெரிவானார்கள்.

கட்சியின் இளைஞரணி கிட்டத்தட்ட பேச்சுமூச்சற்று கோமா நிலையில் இருந்தபோதுதான், அதற்கு ஒட்சிசன் கொடுக்கும் முயற்சியாக இளைஞரணி நிர்வாகம் தெரிவானது. எனினும், நிர்வாக தெரிவின் போதுதான் இளைஞரணி மூச்சு விட்டது. அதன் பின்னர், அது அணியாக திரண்டு செயற்படவில்லை.

இளைஞரணி தலைவர் கி.சேயோன் கட்சியின் நீண்டகால செயற்பாட்டாளர். தமிழ் அரசு கட்சிக்குள் உள்ள மிகக் குறைந்தளவான செயற்பாட்டாளர்களில் அவரும் ஒருவர். ஆனால், இளைஞரணியாக அவராலும் செயற்பட முடியவில்லை.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞரணி செயற்பட்டு வருகிறதுதான். ஆனால், இளைஞரணியாக திரளவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு குட்டி ஜமீனின் (எம்.பிக்கள்) கீழ் அந்த இளைஞர்கள் இயங்குகிறார்கள். இளைஞரணி கூட்டமாக இளையவர்கள் திரள்வதை விட, எம்.பிக்களின் ஆதரவாளர்களாக அவர்கள் வருவதாக இளைஞரணி பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

இளைஞரணி கூட்டங்களை நடத்தி தீர்மானங்களை எடுப்பது, அதிகபட்ச சோதனையான விடயம், தமது தீர்மானங்கள் ஒரு எம்.பியின் நலனிற்கு பாதகமாக இருந்தால், அவரது ஆதரவாளர்கள் பிரச்சனையை ஆரம்பித்து விடுவார்கள் என இன்னொரு நிர்வாகி தமிழ்பக்கத்திடம் குறிப்பிட்டார்.

பொதுவாகவே தமிழ் கட்சிகளின் இளைஞரணி என்பது, தெருநாய் பிரசவிக்கும் குட்டிகள்தான். நிர்வாகத்தை தெரிவு செய்து விடுவதுடன் கட்சிகளின் பணி முடிந்து விடும். எப்படியோ பிழைத்துக் கொள்ளுங்கள் என்ற அணுகுமுறையைத்தான் கடைப்பிடிப்பார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட எல்லா தமிழ் கட்சிகளும் பிரதான கட்சிகளிடம் அல்லது வெளிநாட்டு தூதரகத்திடம் சம்திங் பெறுகிறார்கள். ஆனால், அதை யாருமே இளையவர்களை செயற்பாட்டாளர்களாக்க பயன்படுத்துவதில்லை.

செயற்பாட்டு பாரம்பரியமிக்க இளையவர்கள் உருவாகாத வரையில், அர்ப்பணிப்பு மிக்க அரசியலை கட்டியெழுப்ப முடியாது என்பதே உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here