ஆறாம் திருத்தச்சட்டத்தை நிராகரித்த மறைந்த முன்னாள் முதல்வர் ராஜா விசுவநாதன் !

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இசை நிகழ்ச்சிக்கு வந்த ரி.எம்.சௌந்தரராஜனை, அப்போதைய மேயர் ராஜா விசுவநாதன் வரவேற்று உரையாற்றிய போது.

தமிழர்கள் தமது அரசியல் பெருவிருப்பினை சுதந்திரமாக முன்வைப்பதனை தண்டனைக்குரிய குற்றமாக கொள்கின்ற இலங்கையின் ஆறாம் திருத்தச்சட்டத்தினை சமீபத்தில் மறைந்த முன்னாள் யாழ் முதல்வர் ராஜா விசுவநாதன் நிராகரித்திருந்ததோடு, அதன் மீது சத்தியப்பிரமாணம் எடுக்க மறுத்திருந்தார்.

ஈழக் குறிக்கோளில் நம்பிக்கை கொண்ட ஒருவராக இருந்துள்ளதோடு, தனது பதவிக்காலத்தில் இலங்கையின் பிரதமர் ஒருவரை வரவேற்க்க மறுத்த நெஞ்சுரம் கொண்ட துணிச்சல்மிக்க ஒருவராகவும் காணப்பட்டார்.

அமரர் ராஜா விசுவநாதன் தொடர்பில் அன்றை காலகட்டத்தில் வெளிவந்த முக்கியமான ஆங்கிய பத்திரிகையொன்றின் பத்தியொன்று பின்வருமாறு கூறுகின்றது :

ஈழக் குறிக்கோளில் நம்பிக்கை கொண்ட ஒருவர் அதே நேரத்தில் வெற்றிகரமான மேயராகவும் இருக்க முடியுமா? முடியாது என்பதைச் சொல்லத் தேவையில்லை. பிரதமர் யாழ் நகரத்துக்கு வருகை தந்த போது அவருக்கு நகராட்சி சார்பில் வரவேற்புக் கொடுக்க மறுக்கும் நெஞ்சுரம் கொண்ட நகர மேயர் ராஜா விசுவநாதனைப் போன்ற ஒரு மேயர் நகர மேம்பாட்டுக்குச் சிறிதாவது அரசின் ஆதரவும் நிதியுதவியும் கிடைக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.

1979 ஜூன் மாதம் மேயராகப் பதவிப் பொறுப்பேற்ற போதே திரு விசுவநாதன் இந்த உண்மையை உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் ஊழலுக்கு எள்முனையளவும் இடந்தராதவர் என்று பெயர்பெற்ற சட்டத்தரணியும் மேயருமான அவர் தம் பதவிக் காலம் முடியப் போகும் நேரத்தில் வேறொரு கசப்பான உண்மையை உணர்ந்திருக்கிறார். மெய்யாகவே ஈழக் குறிக்கோளில் நம்பிக்கை கொண்ட ஒருவராக தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நகராட்சி அரசியலில் வெகுவாக முன்சென்று விட முடியுமென எதிர்பார்ப்பதற்கில்லை என்பதே அந்தக் கசப்பான உண்மை.

திரு விசுவநாதனின் பதவிக் காலம் முடிவதற்கு இன்னும் ஒரு மாதக் காலம்தான் உள்ளது என்ற நிலையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் உயர்தலைமை அவரைக் கைகழுவக் காரணம் அவர் யாழ் நகரத்துக்கு நல்லதொரு நிர்வாகம் வழங்கத் தவறி விட்டார் என்பதாக இருக்குமானல் புரிந்து கொள்ளலாம். ஆனால் ஈழச் சிக்கலில் உறுதியான நிலையெடுத்து விட்டுக்கொடுக்காமல் நின்றார் என்பதால் நகராட்சி அரசியலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைமைக்கு ஒத்துவராதவராகிப் போனதே காரணம் என்றால் இரங்கத்தக்க நிலைதான் என்பது உறுதி.

ஓராண்டுக்கு மேலாயிற்று, 1982 மார்ச்சு 13 சாட்டர்டே ரெவ்யூ இதழ் அதன் பின்பக்கத்தில் ‘அமைச்சருக்குத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மரியாதை, யாழ் மேயர் புறக்கணிப்பு’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது. காணிவளத் துறை அமைச்சர் காமினி திசநாயகா கிளிநொச்சிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் வருகை புரிந்தது பற்றிய செய்தி அது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முதுபெரும் தலைவரும் மாவட்ட வளர்ச்சி மன்றத் தலைவருமான நடராஜா அமைச்சருக்கு மாலைமரியாதை செய்வதற்காக கிளிநொச்சிக்கே சென்றார், மற்ற தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏதோ ஒரு வகையில் அமைச்சர் வருகையில் தங்களை தொடர்புபடுத்திக் கொண்டார்கள் என்னும் அதே நேரத்தில் மேயர் விசுவநாதன் மட்டும் விலகிநின்று பெருமை பெற்றார். சுப்ரமணியம் பூங்காவில் காற்றாலை நிறுவப்பட்டது தொடர்பான வரவேற்பு விழாவில் கூட அவர் பங்கேற்க மறுத்து விட்டார். அவருக்குத் தெரியாமலே இந்த விழா நடத்தப்பட்டு, அதற்குச் சற்றொப்ப 4,000 ரூபாயும் செலவிடப்பட்டது. நாம் வெளியிட்ட செய்தி, பாவம், அந்த மேயருக்குச் சங்கடத்தையே ஏற்படுத்தியது என்று அந்த நேரம் இந்த இதழின் ஆசிரியருக்குத் தகவல் கிடைத்தது.

மேயரின் உள்ளத்தில் நியாயமாகவே கசப்புண்டாகக் காரணம்: தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி வெளிப்படையாக அறிவித்துள்ள கொள்கைப்படி நிலையெடுத்தமைக்காக அவர் பழிசுமந்து நின்றார் என்பதே. தலைமையமைச்சர் யாழ் வருகையின் போது அவரைப் பெருமைப்படுத்த நகராட்சி வரவேற்பு நல்க திரு விசுவநாதன் மறுத்து விட்டார் என்றால், சரி, அதுதான் கட்சி வகுத்துக் கொடுத்த கொள்கைவழி. எங்கள் மேயர் கட்சிக் கட்டளைப்படியே செயல்படுகிறார் என்று தலைமையமைச்சரிடம் சொல்ல தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்குத் துணிவுண்டா? இல்லை என்றே வேண்டியுள்ளது.
‘பிரதமரை வரவேற்க மறுத்து அவருக்கு வருத்தமளித்த பின் அவரிடமிருந்து சலுகைகள் கிடைக்கும் என்று மேயர் எதிர்பார்க்க முடியாது.’ சாட்டர்டே ரெவ்யூ இது குறித்துக் கேட்ட போது மேயர் ஆதங்கப்படுகிறார்:

‘உள்ளாட்சி அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது நிதி வழங்குவதாக உறுதியளிப்பார்கள், ஆனால் பிறகு வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடிய வில்லை என்று சாக்குப்போக்குச் சொல்லி விடுவார்கள். நீர் வழங்குவதில் யாழ்ப்பாணத்து வரி செலுத்துவோரின் தேவைகளை நிறைவு செய்ய நிதி வழங்குவதாகத் பிரதமர் உறுதியளிக்கிறார். திட்டத்தைச் செயலாக்க அதிகாரிகள் கால அவகாசம் கேட்கிறார்கள். யாழ்ப்பாணத்து வரி செலுத்துவோருக்குப் போதிய மின்சாரம் வழங்கக் கிட்டத்தட்ட எட்டு மின்மாற்றிகள் தேவை. கம்பிகள் பழசாகி விட்டன, அவற்றுக்கு மாற்றாகப் புதிய கம்பிகள் பொருத்த வேண்டும், ஆனால் உள்ளாட்சித் துறையிடமிருந்து தேவையான நிதி கிடைக்காத நிலையில் இந்தத் திட்டங்களைச் செயலாக்க வழியில்லை என்று மின்பொறியாளர் சொல்கிறார்.

மருத்துவமனைச் சாலையின் நிலையை மேயர் எடுத்துக்காட்டினார். தருவதாக உறுதியளித்த தார்ப் பீப்பாய்களை அவர் எடுத்துக் கொள்ள விரும்பிய போது, உறுதியளித்த தார் கண்டிக்குத் திருப்பி விடப்பட்டதாகக் கூறிவிட்டனராம். யாழ்ப்பாணத்துக்கான மூடிய கழிப்பறைத் திட்ட்த்தைச் செயலாக்கத் தேவையான நிதி இன்னும் விடுவிக்கப்படவில்லையாம்.

‘ஆக்கிரமிப்பு’ செய்யப்பட்ட தமிழ் நகரம் யாழ்ப்பாணத்தையும், ஈழம் பற்றிப் பேசும் அதன் மேயரையும் பொறுத்து இலங்கை அரச அதிகாரிகளின் மாற்றாந்தாய் மனப்போக்கு குறித்து மேயருக்குள்ள இக்கட்டைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் விசுவநாதனுக்குப் பிடிபடாமல் இருப்பதும் அவரைக் காயப்படுத்துவதும் அவரது சொந்தக் கட்சியின் உயர் தலைமையும் நிர்வாகிகளும் கூட ஒத்துழைக்கவில்லை என்பதே. யாழ்ப்பாணம் கடைத் தெருவில் நெரிசலைக் குறைக்கும் வகையில் சிற்றுந்து நிலையத்தை அஞ்சலகம் எதிரில் யாழ் மைதானத்துக்கு மாற்றலாம் என்ற அவரது கருத்துக்கும் கூட அவர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

துரையப்பா அரங்கம் சரிவரப் பராமரிக்கப்பட வில்லை என்று சொல்லப்படுகிறது. காவல்துறை அதிகாரிகள் அதனை உலங்கு வானூர்திகளின் தரையிறக்கத்துக்குப் பயன்படுத்தும் போது. பராமரிப்பது எப்படி?

வரிசெலுத்துவோர் சிலரின் தரப்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியில் காலஞ்சென்ற திரு ஆல்பிரெட் துரையப்பா மேயராக இருந்த போது செய்த பணியை ஒப்புநோக்கும் போக்கு காணப்படுகிறது. திரு துரையப்பா ஆளும்கட்சியின் தீவிர உறுப்பினராகவும் உள்ளூர்ப் பிரதிநிதியாகவும் இருந்தார், கொழும்புவில் அதிகார பீடங்களோடு உடனுக்குடன் நேர்த் தொடர்பில் இருந்தார் என்பதால் இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. கொழும்புவிலிருந்து அரசியல் சலுகைகள் எதிர்பார்க்க முழு உரிமை படைத்தவராக இருந்தார், இறுதியில் அதற்கு விலையாக உயிரையே தந்து விட்டார்.

எல்லாம் சேர்ந்து புகட்டும் நீதி ஒன்றே ஒன்றுதான்: தமிழ்த்தேசம் முழுவதன் உரிமைகளை விட்டுக்கொடுப்பதன் மூலமே நகரத்தின் வரிசெலுத்துவோருக்கு நன்மைகள் பெற்றுத்தர இயலும். ஒருபுறம் தமிழர்களிடம் ஒரு பகிரங்கத் தோற்றமும், மறுபுறம் ஆட்சியாளர்களிடம் அந்தரங்கமாக வேறு தோற்றமும் காட்டத் தயாரில்லை என்றால் எந்த மேயரும் இந்த அரசியல் தர்மசங்கடத்துக்கே முகங்கொடுக்க வேண்டியிருக்கும். திரு விசுவநாதன் தம் சொந்தக் கட்சியின்பால் கசப்பும் கடுஞ்சோர்வுமான உணர்வுடன் பதவிக்காலத்தை முடித்துக் கொள்ள வேண்டியிருப்பது இரங்கத்தக்க நிலைதான் – ஆனால் இப்போதும் அவர் அக்கட்சியின் உண்மையுள்ள உறுப்பினராகவே இருந்து வருகிறார்.

இவ்வாறு அப்பத்திரிகை அன்றைய காலகட்டத்தில் மறைந்த அமரர் ராஜா விசுவநாதன் பற்றி எழுதியிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here