சயந்தனின் நியமனத்திற்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு: காலம் எழுதிய தீர்ப்பா?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் கேசவன் சயந்தனை களமிறக்குவது என எம்.ஏ.சுமந்திரன் எடுத்த முடிவினால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தற்போதுள்ள ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் களமிறங்கவுள்ளனர். இளைஞர்களிற்கு வழிவிட வேண்டும் என்ற கோசத்தை சுமந்திரன் அணியே அதிகம் முன்னெடுத்தது. சுமந்திரனின் ஆதரவாளர்களை களமிறக்கவே இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. எனினும், சுமந்திரனின் அணியில் பொருத்தமான இளைஞர்கள் இல்லையென்பதே யதார்த்தமானது.

இது கட்சிக்குள்ளும், வெகுஜனங்கள் மத்தியிலும் நன்றாக தெரிந்த விவகாரம். சுமந்திரனுடன் நெருக்கமாக இருந்தால் மாத்திரமே, பதவிகளை பெறலாம் என்ற மோசமாக கலாச்சாரம் கட்சிக்குள் உருவானதையடுத்து, பதவிகளை குறிவைத்த பலரே அவருடன் நெருக்கமாக உள்ளனர். தமிழ் தேசிய பரப்பில் ஆத்மார்த்தமான அல்லது குறைந்தபட்ச செயற்பாட்டு வரலாறுடைய எவரும் அங்கில்லை.

சுமந்திரனால் முன்னிலைப்படுத்தப்பட்ட யாழ முதல்வர் இதற்கு சிறந்த உதாரணம், யாழ் மாநகரசபையை தோல்வியடைந்த சபையாக மாற்றியதுடன், ஆடம்பர பிரியராக மட்டுமே அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என சமூக ஊடகங்களில் பரவலான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தனது அணியை சேர்ந்த இன்னொரு இளைஞரான கே.சயந்தனை அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் களமிறக்க சுமந்திரன் தயாராகியுள்ளார்.

எனினும், மாகாணசபை உறுப்பினராக இருந்த சயந்தன் அரசியல், சமூக செயற்பாட்டுரீதியில் ஒரு ஆளமையானவராக தன்னை நிலையிருத்திருக்கவில்லை. மாகாணசபைக்குள் குழப்பங்களை ஏற்படுத்தியவர் என அரசியல்ரீதியாகவும், தனிப்பட்டரீதியாகவும் விமர்சனங்களையே அவர் சந்தித்து வருகிறார்.

இதனால் அவரை களமிறக்குவது தமிழ் அரசு கட்சிக்குள் கணிசமானவர்களிற்கு உவப்பானதாக இல்லை. கட்சிக்கு அப்பால், எம்.ஏ.சுமந்திரன் அணிக்குள்ளேயே கணிசமானவர்கள் சயந்தனை ஆதரிக்கவில்லை.

சயந்தன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வேட்பாளர் அல்லவென்பது பெரும்பாலானவர்களின் கருத்து. ஆனால், எம்.ஏ.சுமந்திரன் அவர் வெற்றியடைவார் என நம்புகிறார். “அவர் சட்டத்தரணியாக இருக்கிறார். என்னுடன் வழக்குகளிற்கும் வருகிறார். எனக்கு வாக்களிப்பவர்கள் அவருக்கும் ஒரு வாக்கை இடுவார்கள்“ என சுமந்திரன் தனது ஆதரவாளர்களிடம் கூறி வருகிறார்.

எனினும், சுமந்திரனின் அணியிலுள்ளவர்கள் கணிசமானவர்களே, சயந்தனின் தெரிவை விரும்பவில்லை. யாழில் உள்ள கட்சியின் தீவிர செயற்பாட்டாளர்கள், சுமந்திரன் அணியிலுள்ளவர்கள் பலர் சயந்தனிற்கு வாக்களிக்க மாட்டோம் என்பதை கட்சி பிரமுகர்களிடம் தெரிவித்துள்ளனர்.

“சயந்தன் வெற்றியடைவார் என சுமந்திரன் அசட்டு நம்பிக்கையுடன் இருக்கிறார். அவர் வெற்றியடைய மாட்டார் என்பதை சுமந்திரனிற்கு சொல்ல முடியாமல் உள்ளது. நான் மட்டுமல்ல. வேறு பல உள்ளூராட்சி தவிசாளர்களும் இதே நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள். சுமந்திரனின் முன்பாக சாதகமாக கதைக்கிறார்கள். தனிப்பட்ட உரையாடல்களில், அதற்கு மாறாக பேசுகிறார்கள்“ என்றார்.

தமிழ் பக்கம் அறிந்த வரையில் உடுப்பிட்டி, பருத்தித்துறை, கரவெட்டி கிளை உள்ளிட்டவற்றில் உள்ள பலர் சயந்தனிற்கு வாக்களிக்க மாட்டோம் என கட்சியின் உள்சுற்று உரையாடல்களில் தெரிவித்துள்ளனர்.

சுமந்திரனின் தீவிர ஆதரவணியாக செயற்பட்ட ஆர்னோல்ட், அஸ்மின் போன்றவர்களுடன் ஒப்பிடும்போது, அரசியல்ரீதியாவும், மக்கள் பிரதிநிதிக்குரிய தகுதியினடிப்படையிலும் சயந்தன் மேம்பட்டவர்தான். எனினும், கட்சிக்குள் ஒரு குழுவாகவும், இன நலனை மறந்து தனியொருவரின் விருப்பு வெறுப்பிற்கு அமைய மாகாணசபை மற்றும் அதன் பின்னராக காலத்தில் செயற்பட்டதன் விளைவிது.

மக்களிடம் மட்டுமல்ல, கட்சிக்குள்ளும் அதிருப்தியை சந்தித்த ஒருவர் வெற்றிபெறுவது எப்படியென கட்சியினரே கேள்வியெழுப்புகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here