‘கட்சிக்கூட்டத்திற்கு தவறுதலாக வந்து விட்டேன்’: கட்சி செயலாளரே அங்கலாய்த்த சுவாரஸ்யம்!

கட்சிக் கூட்டத்திற்கு தவறுதலாக வந்து விட்டேன் என செயலாளரே அங்கலாய்த்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கமே இவ்வாறு அங்கலாய்த்துள்ளார். நேற்று (11) இந்த சம்பவம் நடந்தது.

அம்பாறைய மாவட்டத்தின் காரைதீவு கலாச்சார மண்டபத்தில் நடந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணி தெரிவு கூட்டத்தில் இந்த சுவாரஸ்யம் நடந்தது.

காரைதீவில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணி தெரிவு நடத்த நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கருணா தரப்புடன் இதுவரை நெருக்கமாக இருந்த ஒருவர், திடீரென தமிழ் அரசு கட்சியின் கிழக்கு பிரமுகர்களை தொடர்பு கொண்டு, இளைஞரணி தெரிவு செய்ய ஏற்பாடு செய்யலாமென கூற, நேற்றைய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்திற்கு கட்சி செயலாளர் கி.துரைராசசிங்கம், எம்.பிக்கள் சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், இளைஞரணி தலைவர் கி.சேயோன் மற்றும் கலையரசன் உள்ளிட்டர்கள் செல்லவிருந்தனர். அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அழைப்பிதழும் அச்சிடப்பட்டது.

அழைப்பிதழ் வெளியான பின்னரே அம்பாறையிலுள்ள பெரும்பாலான தமிழ் அரசு கட்சி செயற்பாட்டாளர்களிற்கு விடயம் தெரிய வந்தது. கட்சி செயற்பாட்டாளர்களான தம்மை விடுத்து, வேறு யாரையோ வைத்து நிர்வாகம் தெரிவு செய்வதை அவர்கள் எதிர்த்தனர். இதனால் எம்.பிக்கள் சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் மற்றும் இளைஞரணி தலைவர் கீ.சேயோன் ஆகியோர் கூட்டத்திற்கு செல்வதை தவிர்த்து விட்டனர். ஆனால், செயலாளர் கி.துரைராசசிங்கம் மட்டும் சென்றார்.

நேற்று மாலை 3 மணிக்கு கூட்டம்.

அவர் கூட்டத்திற்கு சென்றதும், மாவட்டத்திலுள்ள தமிழ் அரசுகட்சி பிரமுகர்களும், செயற்பாட்டாளர்களும் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு, தமது எதிர்ப்பை செயலாளரிற்கு தெரிவித்தனர். அடுத்தடுத்த தொலைபேசி எதிர்ப்புக்களால் ஆடிப்போன செயலாளர், அதற்கு பின்னர்தான், தான் விவகாரமான இடத்திற்கு வந்ததை உணர்ந்துள்ளார்.

தொலைபேசியில் தொடர்பு கொண்ட அனைவரையும், நான் தெரியாமல் வந்து விட்டேன் என சமாளித்து, நிர்வாக தெரிவையும் ஒத்திவைத்து விட்டு, ஆளைவிட்டால் போதும் சாமியென மட்டக்களப்பிற்கு பறந்து விட்டார்.

அண்மையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசசபையில் ஏற்பட்ட உறுப்பினர் வெற்றிடத்திற்கு, கட்சி செயலாளருக்கே விபரம் தெரியாமல், முல்லைத்தீவு எம்.பி சி.சிவமோகன் உறுப்பினர் ஒருவரை நியமித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு நாடாளுமன்ற தேர்தலில் ஆசனம் வழங்குவதா இல்லையா என்ற முடிவை, கட்சி தலைவர் அல்லாதவர்கள் எடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ள சுவாரஸ்யமும் ஏற்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here