கூட்டமைப்பின் சார்பில் களமிறங்க விஜயகலா பணம் வழங்கியது உண்மையா?

ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிட, எம்.ஏ.சுமந்திரனிற்கு பணம் வழங்கினார் என முகப்புத்தகங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.

இந்த தகவல் தவறானது.

அதன் உண்மைத்தன்மையை தெளிவுபடுத்த சில தகவல்களை தருகிறோம். ஏனெனில், விஜயகலா எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட முயற்சிக்கும் தகவலை தமிழ்பக்கமே முதன்முதலில் வெளிப்படுத்தியது. அந்த தகவலே தற்போது, தலை, வால் வைக்கப்பட்டு இப்படி திரிவடைந்து உலாவுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் இந்த விடயம் அலசப்பட்டதையும், இரா.சம்பந்தனிடம் இதற்கான கோரிக்கையை விஜயகலா விடுத்ததையும் ஏற்கனவே தமிழ்பக்கம் வெளியிட்டிருந்தது.

இந்த யோசனையை எம்.ஏ.சுமந்திரனிடம்தான் விஜயகலா முதன்முதலில் வெளியிட்டிருந்தார். இந்த யோசனை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவில் விவாதிக்கப்பட்டபோது, அங்கு பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், விஜயகலா தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடுவதில்லையென்ற முடிவை சில வாரங்களின் முன்னரே எடுக்கப்பட்டு விட்டது. அது விஜயகலாவிற்கும் சொல்லப்பட்டு விட்டது.

ஆகவே, எதிர்வரும் தேர்தலில் விஜயகலா மகேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட மாட்டார். அதனால், பணப் பரிமாற்ற தகவல் வெறும் புரளிதான்.

இதேவேளை, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது குறித்தும் தற்போது விஜயகலா மகேஸ்வரன் ஆலோசித்து வருவதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது இரண்டு பிள்ளைகள் வெளிநாட்டில் கல்வி கற்க சென்றுள்ள நிலையில், உயர்தரத்தில் தோற்ற இன்னொரு பிள்ளை தயாராகி வருகிறார். அடுத்த ஓரிரு வருடங்களை அவரது உயர்தர கற்கையை கவனிக்க செலவிட வேண்டுமென விஜயகலா விரும்புவதாக தெரிகிறது. எனினும், இது வெறும் ஆலோசனை அளவிலேயே உள்ளது. அதற்கான வாய்ப்பு மிகக் குறைவே.

எனினும், தேர்தலில் சாதகமான நிலைமையிருந்தால் ஐ.தே.க சார்பில் நிச்சயம் களமிறங்குவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here