முட்டுச்சந்தில் மாட்டியது: இலங்கையை துவைப்பதிலேயே இந்தியா சாதனை!


நீண்ட காலத்துக்கு பின் ஷிகர் தவணின் அரைசதம், ஷைனியின் வேகப்பந்துவீச்சு, துடுப்பாட்டத்திலும், பந்துவீ்ச்சிலும் ஜொலித்த ஷர்துல் தாக்கூர் ஆகியோரால் புனேயில் நேற்று நடந்த 3வது மற்றும் கடைசி ரி20 போட்டியில் இலங்கை அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் உதைத்து அனுப்பி தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்தது. இலங்கையின் தற்போதைய நிலைமையில், இரண்டு இன்னிங்சில் ஆடினாலும் இந்த இலக்கை எட்டவே முடியாது. எப்படியோ, 15.5ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ரி20 போட்டிகளில் இந்திய அணி 13 முறைக்கும் மேலாக 200 ரன்களுக்கும் அதிகமாகச் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

ஆட்டநாயகன் விருது ஷர்துல் தாக்கூருக்கும், தொடர் நாயகன் விருது நவ்தீப் ஷைனிக்கும் வழங்கப்பட்டது.

இதன் மூலம் இலங்கை அணி்க்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதுமட்டுமல்லாமல் கடந்த 2008ம் ஆண்டிலிருந்து இலங்கை அணியை அனைத்து விதமான தொடர்களிலும் இந்தியஅணி வென்று வருகிறது.

இதுவரை 19 தொடர்களில் 17 தொடர்களை இந்திய அணி வென்றுள்ளது, 2 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. இதுநாள்வரை ஒரு அணிக்கு எதிராக நீண்ட தொடர்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது என்ற புதிய வரலாற்றை இந்திய அணி பதிவு செய்தது.

இந்த ஆட்டத்தில் குணதிலக விக்கெட்டை வீழ்த்தியபோது, ரி20 அரங்கில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் எனும் பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றார். 45 போட்டிகளில் பும்ரா 53 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின், சாஹல் இருவரும் 52 விக்கெட்டுகளைதான் வீழ்த்தியுள்ளனர்.

இந்திய அணியின் கப்டன் விராட் கோலி 13வது ஓவரில் ஒரு ரன் சேர்த்தபோது, சர்வதேச அரங்கில் கப்டனாக இருந்து ஒட்டுமொத்த அளவில் 11 ஆயிரம் ரன்களை எட்டியவர் என்ற சாதனையைப் படைத்தார். கோலி 169 போட்டிகளில்(195இன்னிங்ஸ்) 11 ஆயிரம் ரன்களை(டெஸ்ட், ஒருநாள், ரி20) எட்டியுள்ளார். இந்த சாதனையை ஏற்கனவே கிரேம் ஸ்மித், தோனி, பொண்டிங், பிளெமிங், அலன் போர்டர் ஆகியோர் செய்துள்ளனர். இதில் பொண்டிங் கப்டனாக 15 ஆயிரம் ரன்களும், ஸ்மித் 14 ஆயிரம் ரன்களும் சேர்த்துள்ளனர்.

இந்திய அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சு, துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்டனர். நீண்ட காலத்துப்பின் – 11 இன்னிங்ஸ்களுக்குப் பின் ஷிகர் தவண் அரைசதம் அடித்தார். ஷர்துல் தாக்கூர், ஷைனி இருவரின் பந்துவீச்சும் இரு போட்டிகளிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருந்தது. தாக்கூரின் அவுட் ஸ்விங், ஷைனியின் அதிவேகம் ஆகியவற்றால் பவர்ப்ளே ஓவருக்குள் இலங்கை அணியின் ரொப்-ஓர்டர் வீரர்களை வீழ்த்தி நெருக்கடி ஏற்படுத்தினர், பவர்-ப்ளே ஓவரில் 35 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தா்கள்.

அதிலும் நேற்றைய ஆட்டத்தில் யாருக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கலாம் என்ற குழப்பத்தில் தேர்வாளர்கள் இருந்துபோது பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் குறிப்பிட்ட பங்களிப்பு செய்த தாக்கூர் வென்றார்.

இலங்கை அணியினர் கடந்த 2 போட்டிகளிலும் போராட்டக் குணத்தை வெளிப்படுத்தாமல் விளையாடியதால் ஒரு தரப்பாகவே ஆட்டம் அமைந்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here